×

3.5 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த விரகனூர் அணை பூங்கா புதுப்பொலிவு பெறுவது எப்போது?

திருப்புவனம் : விரகனூர் அணை பூங்கா எப்போது புதுப்பொலிவு பெறும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மதுரையிலிருந்து திருப்புவனம் செல்லும் சாலைக்கு அருகே வைகை ஆற்றின் குறுக்கே கோழிமேடு என்ற இடத்திற்கும் ஆண்டார் கொட்டாரம் ,கல்மேடு பகுதிக்கும் இடையே விரகனூர் மதகு அணை திமுக ஆட்சியில் கட்டப்பட்டு 1975 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திறந்துவைத்தார். இந்த அணையில் தண்ணீரை தேக்கி வைத்து சுமார் 87 கண்மாய்களின் பாசனத்திற்கு தண்ணீரை பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழக நீர்ப்பாசன துறை இந்த அணையை தற்போது பராமரித்து வருகிறது. இந்த மதகணை கட்டப்படுவதற்கு 1975க்கு முன்னர் திருப்புவனம் தாலுகா, மானாமதுரை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பாசன கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல வைகை ஆற்றங்கரை ஓரத்தில் மணல் வைக்கோல் வைத்து மணல் அணை கட்டி தங்கள் கண்மாயின் வரத்துக்குக்கால்வாய் முகப்பு வரை அமைக்கப்பட்டிருந்தது. இந்த அணையை நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு வந்து இரவும் பகலும் அணை கட்டி தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வந்துள்ளனர். விவசாயிகள் படும் சிரமத்தை அன்றைய திமுக அரசு உணர்ந்து இந்த மதகு அணையை கட்டிக்கொடுத்தது. இந்த அணையிலிருந்து வலது பிரதானக் கால்வாயில் கொந்தகை, மணலூர், கழுகேர்கடை, தட்டான்குளம், திருப்புவனம், பிரமனூர், பழையனூர், திருப்பாசேத்தி, கீழப்பசளை சூடியூர் வரை சுமார் 67 கண்மாய்களுக்கும் இடது பிரதான கால்வாய் மூலம் சக்கிமங்கலம், சக்குடி, அங்காடிமங்களம்,அதிகரை, அனஞ்சியூர், குன்னத்தூர், கணக்கனேந்தல், மடப்புரம், பூவந்தி , கணக்கன்குடி உட்பட சுமார் 27 கண்மாய்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 40ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த மதகு அணை சிவகங்கை, ராமநாதபுரம், கண்மாய்கள் தவிர விருது நகர் மாவட்டத்தில் செல்லும் கிருதுமால் நதிக்கும் உபரி நீர் செல்ல தனி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மதகு அணை மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் என நான்கு மாவட்ட விவசாயிகளின் மைய்யமாக விரகனூர் மதகு அணை உள்ளது. அணை திறக்கப்பட்ட போது சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. அணையின் முகப்பில் செங்கற்களால் வடிவமைக்கப்பட்ட அழகான யானை சிலை, செயற்கை நீருற்று, ஆற்றின் குறுக்கே நடைபாதை, இருபுறங்களிலும் சிமிண்ட் இருக்கை, குழந்தைகள் விளையாட்டு உப கரணங்கள் போன்றவைகளால் பூங்கா இருந்து வந்தது. இந்த அணையினை சுற்றிபார்க்கவும் பொதுமக்கள் குவிந்து வண்ணம் இருப்பர். ஆண்டிபட்டியில் வைகை அணை போல இங்கும் பொதுமக்கள் குழந்தைகளுடன் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். மேலும் சிலைமான், திருப்புவனம் பகுதி பள்ளி மாணவர்களின் சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது. 2010 ஆண்டுகளுக்குப் பின்னர் வைகை நதிநீர் வரத்தின்றி வறண்டு போனது. நீர்ப்பாசனத்துறைக்கு பூங்காவை பராமரிக்க போதுமான நிதி இல்லை. இதனால் பூங்கா பராமரிப்பு இன்றி முள் புதராக மாறிவிட்டது. பூங்காவை புதுப் பொலிவு பெற செய்ய வேண்டும் என சுற்றுலாப்பயணிகளும் , சமூக ஆர்வலர்களும் எதிர் பார்ப்பில் உள்ளனர்….

The post 3.5 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த விரகனூர் அணை பூங்கா புதுப்பொலிவு பெறுவது எப்போது? appeared first on Dinakaran.

Tags : Virakanur Dam Park ,Tiruvuvyam ,Thiruvanam ,Madurai ,Dinakaran ,
× RELATED திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது என்ஐஏ