×

ஏன் நடைபெறுகிறது கருடசேவை?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆடி மாதம், சுக்ல பஞ்சமியில், ஜோதிட சாஸ்திரத்தில் மிக உயர்வாகச்  சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் கருட பகவான். இதே நட்சத்திரத்தில்தான் பெரியாழ்வாரும் அவதரித்தார். சுவாதி நட்சத்திரம் ஸ்ரீநரசிம்மரின் நட்சத்திரமும் கூட. ஆழ்வார்கள் கருடனைக் கொற்றப்புள், காய்சினப் புள், தெய்வப்புள், ஓடும் புள் (புள் =பறவை) என்று பலவிதமாகப் பாடுவார்கள். ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்திர ரத்னத்தில் எம்பெருமான் மன் நாராயணனுக்கு வாகனமாகவும், கொடியாகவும், துணையாகவும், அமரும் ஆசனமாகவும், மேல் விசிறியாகவும் அடிமையாகவும் இருக்கிறார் என்று பாடுகின்றார்.

நம்மாழ்வார் தம்முடைய நெஞ்சை இந்த கருடாழ்வார் எடுத்துச் சென்றுவிட்டார் என்பதை ‘‘புள்ளின் மேல் போன தனி நெஞ்சமே” என்று குறிப்பிடுகின்றார்.இன்றைக்கும் வியாழக்கிழமை வானில் கருடாழ்வாரை தரிசிப்பதை, தங்களுடைய நோக்கமாகக் கொண்டு, எல்லா ஊர்களிலும், கருட தரிசனம் செய்யும் பக்தர்கள் ஏராளம். கருட தரிசனம் அவர்களுடைய வினைகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை உண்டு. தொடர்ந்து கருடப்பத்து என்கின்ற பாடல்களை ஓதி, கருடனை வணங்கி, செல்வமும் புகழும் பெற்றவர்கள் உண்டு.

பெருமாளுடன் கூடிய கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டுத்துணியை அணிவிக்க வேண்டும். மல்லி, மரிக்கொழுந்து, கதிர்ப் பச்சை, சண்பக மலர்களால் அர்ச்சனை செய்தால் நாம் நினைத்ததைப் பெற்று மகிழலாம். திருமணமான பெண்கள், கருட பஞ்சமி அன்று கருடனை பூஜித்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்  சிறந்த அறிவு, ஆற்றல், பொறுமை, சமயோஜித புத்தியோடு புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். வைணவத்தில் அனுமனைத்  திருவடி என்றும், கருடாழ்வார் பெரிய திருவடி என்றும் பெருமையாகவும் உயர்வாகவும் கொண்டாடுவார்கள்.

கருடாழ்வாருக்கு மாலைநேரத்தில் பூஜை செய்வது மிகச் சிறந்தது. பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து கருடாழ்வாரை வணங்குவதன் மூலமாக மாங்கல்ய பலத்தையும் சந்தான பலத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். ஐஸ்வரியங்களுடன்  வாழலாம். ஒரு காலத்தில் மகா பிரளயம் உண்டான போது, பூமிதேவி கடலில் மூழ்கினாள். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டெடுத்தார். இனி இப்படிப்பட்ட நிலை பூமிக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக பகவான் கருடனை அனுப்பி கிரீடா  பருவதத்தை கொண்டுவரச் செய்து அதன் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி திருமலையில் உள்ள ஏழு மலை களில் ஒன்று கருடாத்ரி. ‘கருடாசலம்’ என்றும் சொல்வார்கள். அகோபிலம் என்று சொல்லப் படுகின்ற சிங்கவேள் குன்றத்திற்கு “கருடாசலம்” என்ற பெயர் உண்டு. எந்த ஆலயமாக இருந்தாலும் குடமுழுக்கு நடைபெறும் சமயத்தில் விமானத்திற்கு மேலே கருடன் வட்டமிடுவதை  இன்றும் நாம் நிதர்சனமாகக் காணலாம். பறக்கும் கருட பகவானை சேவிக்கும்பொழுது அவர் மகாவிஷ்ணுவுடன் அவசர காரியமாகச்  செல்கிறார் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். அவரை வணங்கி அவருடைய கவனத்தை திசை திருப்பினால் அவர் செல்லும் வேகம் குறைந்து விடும் எனக்  கருதி மனதால் துதிப்பது சாலச் சிறந்தது என்பார்கள், பெரியவர்கள்.

திருமால் ஆலயங்களில் எல்லா பிரம்மோற்சவம் நடைபெறும் சமயத்தில் கருடாழ்வார் கொடிதான் கொடிமரத்தில் ஏற்றப்படும்.  வைணவ நிகழ்ச்சிகள் எது நடந்தாலும் கருடக்கொடியை ஏற்றி, மகாலட்சுமிக்குரிய குத்துவிளக்கை ஏற்றிவிட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். திருமால் கோயில்கள் எல்லாவற்றிலும் அதனுடைய வெளிப் பிராகாரமதில் மூலையில் கவலையில்லாத திருமுக மண்டலத்துடன் கூடிய கருடன் உட்கார்ந்துகொண்டு காட்சியளிப்பார்.

அழகான சிறகுகள், பருத்த உடல், வெண்மையான கழுத்துப்பகுதி, உருண்டையான கண்கள், நீண்ட மூக்குடன் கூடியவர் ஸ்ரீகருடன். அவர் எடுத்து வந்த அமிர்த கலசத்தில் ஒட்டிக் கொண்டு வந்த தேவலோகப் புல்தான் புனிதமான தர்ப்பை. (விஸ்வாமித்ரம்). இதற்கு பூவோ, காயோ, பழமோ, விதையோ கிடையாது. பூஜையின்போது அடிக்கப்படும் கோயில் மணியின் மேலே கருடபகவான் திரு உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். விஷ ஜந்துக்கள் நம்முடைய இல்லங்களுக்கு வராமலிருக்க கருடக் கிழங்கு வாசலில் கட்டும் வழக்கம் இன்றும் கிராமங்களில் உண்டு. கருடனின் நிழல் விழும் இடங்களில் பயிர்கள் நன்கு வளரும். பறவை களுக்கு அரசன் கருடன்.

அவரைப் பக்ஷி ராஜன்,சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப் பிரியன், மங்களாலயன், கலுழன், ஸ்வர்ணன், புள்ளரசு, பெரிய திருவடி  எனப்  பல பெயர்களில் அழைப்பார்கள். வேதமே கருட வடிவம்தான். அவரது இறக்கைகள் மூன்று வேதங்களைக் குறிக்கும். மற்ற பறவைகளைப்போல சிறகுகளை  உதறிவிட்டு பறக்க மாட்டார். கருடன் தேஜோமயமானவர். நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர். வைகுந்தத்தில் இவர் பகவானின் கண்ணாடியாக விளங்குகிறார். அதனால்தான் விஷ்ணு ஆலயப் புறப்பாடு சமயத்தில் கோயில் களில் கண்ணாடி சேவை நடைபெறும்.

கருடனின் குரல் கருடத்வனி. கருடத்வனி என்கிற ராகம் ஒன்று உண்டு. அது மிக மங்களகரமானது. சாம வேதத்திற்கு ஒப்பானது. கல்யாணம் நடக்கும்போது திருமாங்கல்ய தாரண சமயத்தில் கருடத்வனி ராகத்தை ஆலாபனை செய்வார்கள். கருட காயத்திரியை உபதேசம் பெற்றால் அத்தனை வித்தைகளும் வேதமும் வசப்படும். ஸ்வாமி வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார் கருடன். உறங்கச் செல்லும்போதும் அல்லது ஊருக்குக் கிளம்பும் போதும் திருமண விசேஷங்களிலும் கருட மந்திரத்தை ஓதுவது சிறப்பு.

வெற்றியைத்  தரும் பகவான் மகாவிஷ்ணுவின் வைரமுடியை ஒருசமயம் விரோசனன் என்பவன் திருடிவிட்டான்.. அவன் அதை வெள்ளையம் என்கிற தீவில் பதுக்கி வைத்திருக்கும் பொழுது, கருடன் சென்று அந்த வைர முடியை எடுத்து வந்தார். அப்படி வருகின்ற பொழுது வெள்ளையம் தீவில்  இருந்த மண் ஒரு இடத்தில் விழுந்தது. அந்த வெள்ளைமண்தான் திருமண் என்று சொல்லப்படுகிறது. அதைத்தான் வைணவர்கள் தங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளுகின்றார்கள்.

பாற்கடலைக்  கடைந்தபொழுது அதைக் கடைவதற்கு மந்திரமலை தேவைப்பட்டது. அந்த மந்திர மலையைக் கொண்டுவந்து பாற்கடலில் வைத்தவர் “கருத்மான்” என்று அழைக்கப்படும் கருடன்தான்.பறவைகளில் மிக உயரத்தில் பறக்கக் கூடியவர் பட்சிராஜன். அவ்வளவு உயரத்தில் பறந்தாலும் தீட்சண்யமான பார்வை உடையவர். இவ்வளவு கூர்மையான பார்வை வேறு யாருக்கும் கிடையாது. வைகுண்டத்தில் உள்ள நித்யசூரிகள் முதன்மையானவர்கள் அனந்தன், கருடன், விஷ்வக் சேனர் என்ற மூவர். இவர்களில் நடுநாயகமாக விளங்குபவர் கருடாழ்வார். பிரம்மோற்சவ காலங்களில் எம்பெருமான் நாராயணன் பல வாகனங்களில் வீதி வலம் வருவார். ஆயினும்  வாகன சேவைகளில் மிக உயர்ந்தது கருடசேவைதான்.

வில்லிபுத்தூர் என்கின்ற ஆண்டாள் அவதார தலத்தில் சந்நதியில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கூப்பிய கரங்களுடன் கருடபகவான் ஏக ஆசனத்தில் நமக்கு தரிசனம் தருவார். திருவழுந்தூர் திவ்யதேசம், திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் சந்நதி, இங்கெல்லாம் மூலவர் அருகிலேயே கருடாழ்வார் சேவை சாதிக்கிறார். பஞ்ச கிருஷ்ண ஆலயங்களில் ஒன்று திருக்கண்ணங்குடி. அங்கே பரமபதத்தில் இருப்பது போன்ற நிலையில் கையைக் கட்டிக்கொண்டு கருடபகவான் காட்சி தருகிறார்.

கோயில் என்று அழைக்கப்படும் 108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக திருவரங்கத்தில் பெரிய திருவடி என்ற பெயருக்கு ஏற்ப மிகப் பெரிய உருவத்துடன் காட்சி தருகிறார். திருமங்கை ஆழ்வாருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தவர் திருநறையூர் நம்பி. அதாவது நாச்சியார் கோயில் பெருமாள். அந்தப் பெருமாள் கோயிலில், வேறு எங்கும் இல்லாத விசேஷமாக கல் கருடன் உண்டு வந்த. கல் கருடனுக்கு தனிச்  சேவையும் உண்டு. ஆண்டுக்கு இரண்டு முறை, கல் கருடன் மீது ஆரோ கணித்து பெருமாள் வீதிவலம் வருவார். மிக முக்கியமான திவ்ய தேசங்களான ஸ்ரீரங்கத்திலும், திருமலையிலும், பெருமாள்கோயில் என அழைக்கப்படும்   காஞ்சிபுரத்திலும் கருடசேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அதுவும் காஞ்சிபுரத்தில், ஒவ்வொரு ஆண்டும் கருட சேவையை தரிசிக்கும் ஒரு பக்தர், ஓராண்டு வராமல் போகவே, அவருக்காகத் தனிக் காட்சி தந்த சரித்திரமும் உண்டு.  மாசிமகத்தில், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள், மீனவர்களின் மருமகனாக திருமலைராஜன் பட்டினம் என்ற இடத்தில் (இது காரைக்காலுக்கு அருகில் உள்ளது) கடற்கரையில் தீர்த்தவாரி வருவார். அப்போது கருட வாகனத்தில் அவர் சேவை சாதிப்பார்.

திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம் சந்நதியில் கருடபகவான் மற்ற சந்நதிகள் போல அஞ்சலி செய்யும் நிலையில் பலிபீடத்திற்கு அருகில் இல்லாமல் மூலஸ்தானத்தில் பரமபதநாதன் அருகிலேயே இருப்பார். பெரும்பாலான வைணவ அடியார்களின் இல்லங்களில் வாசல் நிலை (ஹரிகால் என்று  பெயர்) மேல் திருமண் காப்பு, சங்கு சக்கரம் இவைகளெல்லாம் வைத்து கருட பகவானின் படத்தையும் வைப்பார்கள். இதன் மூலம் அந்த இல்லத்துக்கு எந்த துஷ்ட சக்திகளும் அணுகாது.

கருடபகவான் சூரிய மண்டலத்தில் சஞ்சரிப் பவர். உள்ளத்தில் எப்பொழுதும் இருப்பவர். தனது உடலில் அஷ்ட நாகங்களுடன் காட்சிதருபவர். மங்கலதேவதையான கருடனை (மங்களம்
கருடத்வஜ :) மனதால் துதிக்க வேண்டும். கண்களால் தரிசிக்க வேண்டும். கருட மந்திரத்தை (ஓம் காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினத புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய,சர்வ வக்கிர நாசநாய, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ,விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.) ஜெபிக்க வேண்டும்.

இதன் மூலம் நமக்கு பலவித சித்திகள் கிடைக்கும். நீர், நெருப்பு, வாயு முதலியவற்றின் பயங்களையும் சிறைவாச பயத்தையும் போக்கும். நல்ல பராக்கிரமத்தை தரும். பெரும்பாலான கருடசேவை நிகழ்ச்சிக்கு அடிப்படையான காரணம் கஜேந்திரன் என்ற யானைதான். கஜேந்திரன் தினசரி ஒரு தாமரை மலரைப் பறித்து எம்பெருமானுக்குச்  சமர்ப்பித்து வந்தது. ஒருநாள் அது பொய்கையிலே தாமரை மலரைப் பறிக்கச் சென்ற பொழுது முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்டது. முதலைக்கும் யானைக்கும் பல ஆண்டுகள் போராட்டம் நடந்தது. முதலை யானையை முழுவதுமாக அந்த நீருக்குள் இழுத்துச் சென்றது.

எல்லாம் இழந்து, இனி தன்னால் எதுவும் ஆகாது, என்று நினைத்த யானை, கையில் உள்ள மலரை எப்படியாவது எம்பெருமானிடம் சமர்ப்பிக்க வேண்டுமே என்கின்ற ஒரே மன நிலையில் “ஆதிமூலமே” என்று எம்பெருமானை அழைத்தது. அடுத்த நொடி எம்பெருமான் மன் நாராயணன் கருடன் மீது விரைவாக வந்து, முதலையைக் கொன்று, யானை சமர்ப்பித்த மலர்களையும் ஏற்றுக் கொண்டான். இதை திருமங்கையாழ்வார்,

மீனவர் பொய்கை நாண் மலர் கொய்வான்
வேடிக்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக்
கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப்
புள்ளூர்ந்து சென்று
நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே


 - என்ற பாசுரத்தில் மிக அழகாக வர்ணிக்கிறார்.

இந்த சரித்திரத்தை (விரோதி நிராசனம்) அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலான திவ்விய தேசங்களில் கருடசேவை நடைபெறுகிறது. அதில் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள்  11 எம்பெருமான்களும் ஒரே இடத்தில் ஒரே வீதியில் கருடசேவை காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

தொகுப்பு: ராமானுஜதாசன்

Tags : Garudaseva ,
× RELATED திருநாங்கூரில் நடைபெறும் தெய்வத் தமிழ் விழா!