இந்த வார விசேஷங்கள்

21.1.2023 - சனி

சகல தடைகளையும் போக்கும் தை அமாவாசை

அமாவாசை என்பது மிகப் புனிதமான முக்கியமான தினம். அன்று தென்புலத்தார் என்று போற்றப்படுகின்ற முன்னோர்களுக்கு நாம் வழிபாடு நடத்துகின்றோம். அந்த வழிபாட்டு முறை எப்படி இருந்தாலும் கூட அவசியம் ஏதோ ஒரு வழியில் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துகிறோம். பன்னிரண்டு மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் கூட, உத்தராயண காலத்தில் வருகின்ற தை அமாவாசையும், தட்சிணா யண காலத்தில் வருகின்ற ஆடி அமாவாசையும் முக்கியமானது. தை அமாவாசை இந்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது.

அன்றைய தினம் அமாவாசை திதியானது அதிகாலை 4:30 மணி முதல் ஆரம்பிக்கிறது. 22.1.23 அதிகாலை வரை உள்ளது. சனிக்கிழமை காலையிலேயே அமாவாசை திதி ஆரம்பித்து விடுவதால் முற்பகலில் பிதுர்க் காரியங்களை மேற்கொள்ளலாம். காலையில் வீட்டை தூய்மைப்படுத்தி, நீராடி, வெளியிலே வாசலுக்கு கோலம் போடாமல், உச்சிப்பொழுது வருவதற்குள் முன்னோர்கள் காரியத்தை நிறைவேற்றிவிடவேண்டும். உணவுக்காகவும் தாகத்திற்காகவும் எள்ளும் நீரும் அளித்து, பின் தூய்மையான உணவுகளைச் சமைத்து, தலைவாழை இலை போட்டுப் படைக்க வேண்டும்.

காகத்திற்கு உணவிட வேண்டும். பிற்பகலில் அதாவது உச்சிப்பொழுது கடந்த பிறகு இந்தப் பணிகளைச் செய்யக்கூடாது. இது மிகச்சிறப்பான அமாவாசை. இதன் மூலமாக முன்னோர்களுடைய ஆசிகள் முழுமையாகக் கிடைக்கும். இன்று திருநாங்கூரில் சிறப்பான மஞ்சள்குளி உற்சவம் நடைபெறும். இந்த தை அமாவாசையில்தான் அபிராமிபட்டர் அபிராமி அந்தாதி பாடினார். இன்று மாலை அம்பாளுக்கு விளக்கு ஏற்றிவைத்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம்.

22.1.2023 - ஞாயிறு  

சீர்களை அள்ளித்தரும் சியாமளா நவராத்திரி

வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு. அதில் தை மாத அமாவாசை முதல் 9 நாட்கள் சியாமளா நவராத்திரி கொண்டாடப்படும். அம்பாளுக்கு ராஜசியாமளா ஸ்ரீமாதங்கி என்று பலவிதமான திருநாமங்கள். மதங்கமா முனிவரின் மாதவப் புதல்வி அவதரித்த விசேஷமான நவராத்திரி இது. தசமஹாவித்யாக்களில் ஒன்பதாவது வித்யை இது. ஒருவருக்கு கலையோ பேச்சுத்திறனோ, கூர்மையான புத்தியோ, வித்தைகளில் மேம்பாடோ அடைய வேண்டும் என்று சொன்னால், இவளை வணங்க வேண்டும். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதையாக விளங்குபவள். லலிதா பரமேஸ்வரியின் மந்திரியாக விளங்குபவள். இந்த அம்பிகையை போற்றும் விழா தான் சியாமளா நவராத்திரி.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபம் என்று இவளைச் சொல்வார்கள். கலை தெய்வம் என்று சொல்வார்கள். சரஸ்வதி தேவியைப் போலவே கையில் வீணையை வைத்துக்கொண்டிருப்பாள். சாம்பலும் கருப்பும் நிறம் என்பதால் சியாமளை என்று சொல்வார்கள். தை அமாவாசையில் ஆரம்பித்து ஐந்தாவது தினமான பஞ்சமியில் திருவவதாரம் செய்ததாகச் சொல்லுவார்கள் இந்த ஒன்பது நாட்களும் வீட்டிலோ, இல்லை கோயிலிலோ, அம்பாளை சிறப்புப் பூஜை செய்து வணங்குவதன் மூலமாக, எல்லாவிதமான கலைகளையும் அடையலாம். தம்பதிகள் ஒற்றுமையோடு வாழலாம். மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். சகல யோகங்களும் சித்திக்கும்.

24.1.2023 - செவ்வாய்

வரங்களைத் தரும் வரகுந்த சதுர்த்தி

சதுர்த்தி தினம் பொதுவாக பிள்ளையாருக்கு உரியது சங்கடங்களை போக்கும் சதுர்த்தி தினம் என்பார்கள். ஆனால் தை அமாவாசை முடிந்து வருகின்ற சதுர்த்தி தினத்தை வரகுந்த சதுர்த்தி தினம் என்று சொல்வார்கள் இந்த சதுர்த்தி தினத்தில் காலையில் எழுந்து நீராடி மனத்தூய்மையோடு பக்கத்தில் உள்ள ஏதேனும் சிவன் கோயிலுக்குச் சென்று வருவது அற்புதமான பலன்களைத் தரும். வரகுந்த சதுர்த்தி அன்று மல்லிகைப் பூக்களால் சிவ பூஜை செய்ய காரியத்தடைகள் நீங்கும்.

26.1.2023 - வியாழன்  

வாஸ்து நாள்

இன்று பஞ்சமி திதி. வசந்த பஞ்சமி நாள் என்றும் சொல்லுவார்கள். பஞ்சமி திதியில் யாத்திரை, உபநயனம், விவாகம், தேவதா பிரதிஷ்டை, சாந்தி செய்தல் முதலியவற்றைச் செய்யலாம். பஞ்சமி திதியில் செய்யப்படுகின்ற காரியங்கள் வெகு காலம் நிலைத்திருக்கும் என்பார்கள். அதோடு இன்று குரு வாரமாக இருப்பது இன்னும் சிறப்பு. அப்படிப்பட்ட நாளில் வாஸ்து நாள் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இந்த வாஸ்து நாளில் முறைப்படி வாஸ்து பூஜை செய்து கிரக ஆரம்பம் செய்வது நல்லது. வாக்கிய பஞ்சாங்கப்படி வாஸ்து புருஷன் நித்திரை விட்டு எழுகின்ற இந்த நாளில் நல்ல நேரம் காலை 10.06 முதல் 10.42 வரை.

27.1.2023 - வெள்ளி  

கலிக்கம்பர் குருபூஜை

அடியார்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்ற பொழுது ஒரு விஷயம் தெரியவரும். அவர்கள் சிவநெறி, சிவத்தொண்டு, தவிர வேறு விஷயங்களைப் பெரிதாக நினைப்பதில்லை. அவர்கள் செய்த சில செயல்கள் சமூகத்துக்கு ஏற்புடையதாக இல்லாததாக நாம் விவாதிக்கலாம். ஆனால் அவர்களிடமிருந்த இறை உணர்வும் பக்தியும், இறையடியார்களிடத்திலே கொண்ட அன்பும் நாம் உணர்வுப் பூர்வமாக விளங்கிக்கொண்டால் தான் அவர்கள் செய்யும் காரியங்களை நம்மாலே விளங்கிக்கொள்ள முடியும்.

கலிக்கம்ப நாயனார் திருப்பெண்ணாடகம் (பெண்ணாடம்) என்ற ஊரிலே வாழ்ந்து வந்தவர். அங்கே இருக்கும் சிவன் கோயிலில் (தூங்கனை மாடத் திருக்கோயில்) எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருக்கு பல தொண்டுகளை ஆற்றியவர். மிகப்பெரிய வணிகர். எப்பொழுது அவருடைய வீட்டிற்கு சிவனடியார்கள் வந்தாலும் அவர்களுக்கு திருப்பாதம் விளக்கி, திருவமுது ஊட்டி, அவர்கள் மகிழும்படியாக நடந்து கொண்டு, அவர்களிடத்திலே ஆசிபெறுபவர். ஒருநாள் அவர் இல்லம் நோக்கி ஒரு சிவனடியார் வருகின்றார்.

அந்த சிவனடியாரைப் பார்த்தவுடன் அவர் ஏற்கனவே இவரிடத்திலே வேலை செய்தவர் என்பதும் வேலையை விட்டு நீங்கி இப்பொழுது சிவனடியார் வேடம் கொண்டு வந்திருப்பதாகவும் பலரும் சொல்ல அதைப் பொருட்படுத்தாத நாயனார், சிவனடியார் என்றால் சிவனடியார்தான்; அவருக்குத் தொண்டு செய்ய வேண்டியது நமது கடமை என்று சொல்லி, அவருக்கு நீர் வார்த்து திருப்பாதம் விளக்குவதற்கு முற்படுகின்றார். ஆயினும் அவருடைய மனைவிக்கு தயக்கம். ஒரு காலத்தில் இவர் நம் வீட்டில் வேலை செய்து, வேலையை விட்டு சென்றவர்தானே என்கின்ற எண்ணம். அம்மையார் மனதில் எழ, அவருடைய தயக்கத்தையும் அவர் திருவடி விளக்காமல் இருப்பதையும் கண்ட கலிக்கம்ப நாயனார் அவருக்கு தண்டனை தருகின்றார்.

கடவுளருட் கண்ணார்கள் பயிலுந் தொல்லைக்

கடந்தைநகர் வணிகர்கலிக் கம்ப ரன்பர்க்

கடிமையுற வமுதளிபா ரடியா னீங்கி

யருளுருவா யன்பருட னணைய வேத்தி

யிடையிலவ ரடியிணையும் விளக்கா நிற்ப

விகழ்மனைவி கரகமலி யிரண்டு கையும்

படியில்விழ வெறிந்தவள்செய் பணியுந்தாமே

பரிந்து புரித் தரனருளே பற்றி னாரே

-  என்பது இந்த நிகழ்ச்சியை விளக்கும் பாட்டு.

எந்தவித சலனமும் இல்லாமல் அந்த சிவனடி யாருடைய திருப்பாதத்தை விளக்கி அவருக்கு திருவமுது ஊட்டுகின்றார். சிவத்தொண்டு செய்யும் பொழுது எத்தனை குறுக்கீடுகள் வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாத வைராக்கிய மனம் அவருக்கு சிவனுடைய பேரருளைப் பெற்றுத் தந்து நாயனார் என்கிற உயரத்துக்கு உயர்த்தியது. அவருடைய குருபூஜை தினம் இன்று. அதோடு இன்றைய தினம் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சஷ்டி விரதம் இருக்க வேண்டிய தினமும் கூட. சஷ்டிவிரதம் இருப்பவர்கள் இன்று காலையிலிருந்து எதுவும் உட்கொள்ளாமல் விரதமிருந்து மாலை முருகன்கோயிலுக்குச் சென்று வழிபட்டு சஷ்டி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: சங்கர்

Related Stories: