×

திருச்செங்கோடு: அறிந்த தலம் அறியாத தகவல்கள்

திருச்செங்கோடு

அமைப்பும் அற்புதமும்

திருச்செங்கோடு எனும் இந்த திருத்தலம் ஏறத்தாழ 350-ஏக்கர் நிலப்பரப்பில், கடல் மட்டத்திற்கு மேல் இரண்டாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள அற்புதத் திருத்தலம்.

அர்த்தநாரீஸ்வரர் பழைமை

ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை, காலக்கணக்கையும் தாண்டி நிரூபித்த திருக்கோலம், அர்த்த நாரீஸ்வரத் திருக்கோலம். ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் கொண்டது அர்த்த நாரீஸ்வரத் திருக்கோலம். இந்தத் திருக்கோலத்தைத் தான் மாணிக்கவாசகர் ‘தொன்மைக் கோலம்’ எனக்கூறித் துதிக்கிறார்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ!


இங்கு மட்டுமே மிகவும் பழைமைத் திருக்கோலமான அர்த்த நாரீஸ்வரர் இங்கு மட்டுமே மூலவராக எழுந்தருளி இருக்கிறார்.

தம்பதிகள் முதல் தரிசனம்

புதுமணத் தம்பதிகள் அதாவது கல்யாணம் ஆனவுடன் இங்குவந்து அர்த்த நாரீஸ்வரரைத் தரிசித்து வேண்டுவது ஒரு வழக்கமாக இருக்கிறது.
இவ்வாறு செய்வது கணவன்-மனைவி இடையே ஒற்றுமையை வளர்க்கும் என்பது பலரின் அனுபவம்.

காரணம் ஆனவர் அவதரித்த பூமி
 
சுந்தர மூர்த்தி சுவாமிகள் அடியார்களைப் பற்றிப் பாடித் துதிக்கும் திருத்தொண்டத் தொகை என்பது இல்லாவிட்டால், சேக்கிழார் சுவாமிகள் திருத் தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் பாடி இருக்க முடியாது. சேக்கிழார் சுவாமிகள் திருத் தொண்டர் புராணம் பாடியிருக்காவிட்டால், தமிழ்நாட்டின் பல வரலாற்று நிகழ்வுகளுக்கான காலம் என்பது தெரியாமலே போயிருக்கும். இத்தனைக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தது சுந்தரரின் ‘திருத்தொண்டத்தொகை’. அந்தத் திருத்தொண்டத்தொகை உருவாகக் காரணமாக இருந்தவர் விறல்மிண்ட நாயனார் என்பவர். சிவபக்தியின் எல்லைகண்ட அந்த விறல்மிண்டர் அவதரித்த திருத்தலம் இது.

சிவப்பும் அழகும்


இயற்கையாகவே சிவந்த நிறம் கொண்டதால் ‘செங்கோடு’ எனப் பெயர் கொண்ட இம்மலையைப் பௌர்ணமி அன்று பார்த்தால், நிலவின் அழகு ஒளியோடு இம்மலையின் செம்மையும் கலந்து ஒளிர்வதை அனுபவிக்கலாம்.

அமாவாசையும் அல்லல் நீக்கும் மலையும்


அமாவாசை அன்று இந்த மலையைக் கிரிவலம் செய்தால், பித்ரு சாபம் நீங்கி, பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

நந்தி கோயிலும் பால் பண்ணையும்


பால் பண்ணை நடத்துபவர்கள் அல்லது மாடுகளை வைத்துப் பராமரிப்பவர்கள் இங்கு வந்து, இங்குள்ள நந்திகோயிலில் நந்தி பகவானுக்குப் பொங்கல் படையல் இட்டு வெண்ணெய் சாற்றி வழிபட்டால், பால் பண்ணை செழிக்கும். மாடுகள் சுணங்காமல் பால் பொழியும். இந்த வழிபாடு நடப்பதை இங்கே காணலாம்.

நாகதோஷம் நீக்கும் அறுபது அடி

ஐந்து தலைகளுடன் கூடிய ஆதிசேஷன் வடிவம் இங்கே மிகவும் நீளமாகப் பிரம்மாண்டமாக, அறுபது அடி நீளத்தில் அமைந்துள்ளது. அற்புதமான சிவலிங்கம் ஒன்றைத் தாங்கி இருக்கும் இந்த ஆதிசேஷனை, நாகதோஷம் நீங்க மஞ்சள் தடவி குங்குமத்தால் அர்ச்சித்து ஏராளமான அடியார்கள் வழிபடுகிறார்கள்.

சத்தியப்படிகள் 60


அறுபதாம் படி எனும் சத்தியவாக்குப் படிகள், அறுபது படிகளை கொண்ட இடம் இங்கு உள்ளது. தீராத வழக்குகள், குடும்ப பிரச்னைகள் ஆகியவற்றில் இங்கு வந்து இந்த சந்நதியில் நின்று, சத்தியம் செய்வது பல்லாண்டுகள் காலமாக நடந்து வருகிறது. அப்படி சத்தியம் செய்பவர்கள் பொய் சத்தியம் செய்தால், அதற்குத் தண்டனையைத் தவறாமல் தெய்வம் அளிக்கும்.  அதே சமயம் சத்தியம் செய்பவர்கள் உண்மையாகச் சத்தியம் செய்தால், அவர்கள் வழக்கு தீர்ந்து பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதும் நிகழ்கிறது. அறுபதாம் படிக்கு மேலே சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி உள்ளார். அற்புதமான இடம் இது.

செங்கோட்டு வேலவர் முன் மண்டபம்

இங்கே உள்ள செங்கோட்டு வேலவர் சந்நதியின் முன் மண்டபத்தில் ஏராளமான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஈடு இணையில்லாத அழகும், நுணுக்கமும் கொண்டவை அவை. இங்கு மலைமேல் உள்ள சந்நதிகளில் ஒவ்வொன்றின் முன் மண்டபத்திலும் இவ்வாறே அற்புதமான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

தனி அழகு

இங்கு எழுந்தருளி உள்ள செங்கோட்டு வேலவர், வலக்கையில் வேலும் இடக்கையில் சேவலும் ஆகத் தனி அழகு கொண்டு தரிசனம் தருவார். இங்கு மட்டுமே தரிசிக்கக் கூடிய அற்புதமான திருக்கோலம் இது.

நாலாயிரம் கண்கள் வேண்டும்

இங்குள்ள செங்கோட்டு வேலவரின் அழகிய திருக்கோலத்தைத் தரிசித்த அருணகிரி நாதர், இந்தச் செங்கோட்டு வேலவனைச் சென்று கண்டு தொழ, ‘‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’’ என்று பாடி உருகி இருக்கிறார்.

சந்ததி அருளும் வந்தீசர்

இங்குள்ள மலை உச்சியில் ‘பாண்டீசர் கோயில்’ என்பது உள்ளது. ஈசரை ‘வந்தீசர்’ என்றும் அழைக்கிறார்கள். குழந்தைப்பேறு இல்லாதவர்கள், கார்த்திகை நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபாடு செய்து வேண்டினால், பிள்ளைப்பேறு என்பது உறுதியாகிறது. நிறைவேறியவர்கள் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவதை இன்றும் காணலாம்.

இளங்கோவடிகள்


முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களையும் முருகன் கையில் உள்ள வேலாயுதத்தையும் குறிப்பிட வந்த இளங்கோவடிகள், ‘சீர் கெழு செந்திலும் செங்கோடும்’ என இந்த திருத்தலத்தைப் பாடியிருப்பது மிகவும் விசேஷமானது.

காலமாற்றத் தீமை நீங்க

கால மாற்றத்தால் நோய்கள் வெளிப்படும். இங்கே திருஞானசம்பந்தர் சுவாமியைத்தரிசிக்க வந்த போது, முன்பனிக் காலத்தில் மக்களெல்லாம் குளிர்சுரத்தால் தவிப்பதைக் கண்டார். உடனே ‘திருநீலகண்டப் பதிகம்’ பாடி அனைவரின் குளிர்சுரத்தையும் நீக்கினார்.  கால மாற்றத்தால் விளையும் தீமைகளில் இருந்து காப்பாற்றும் திருத்தலம் இது. அப்போது திருஞான சம்பந்தர் பாடிய திருநீலகண்டப் பதிகத்தைப் பாடி, கால மாற்றத்தால் விளையும் தீமைகளில் இருந்து நாமும் விடுபடலாம்.

நாமக்கல்லிலிருந்து 37 கி.மீ, தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்