×

ஐயப்பனின் திருக்கோலங்கள்

பரசுராம க்ஷேத்திரம் எனப் போற்றப்படும் கேரளத்தில் சபரிமலையில் அருளாட்சிபுரியும் ஐயப்பனை தரிசிக்க மூன்று காலங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மார்கழி மாதம் மண்டல பூஜையும், தை மாதம் மகரவிளக்கு தரிசனமும், விஷூ புண்ணிய காலமாகிய சித்திரை முதல்நாள் பூஜையும் மிகவும் விசேஷமானது.

* செங்கோட்டையிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குளத்துப்புழை திருக்கோயிலில் பாலகனாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.

* சீர்காழி தென்பாதித் தெருவில் உள்ள திருக்கோயிலில் சாஸ்தா யானை வாகனத்தில் பூரண புஷ்கலை சமேதராக தரிசனம் தருகிறார்.

* எரிமேலியில் பந்தள மன்னன், ராஜசேகர பாண்டியன் கட்டிய தர்ம சாஸ்தா கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலில் வேட்டைக்குச் செல்ல வில், அம்பு, ஏந்தி, நின்ற திருவுருவில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

* அச்சன் கோயிலில் அருள்பாலிக்கும் சுவாமி ஐயப்பன் இரண்டு கால்களும் குத்திட்டிருக்க யோகப்பட்டை முதுகையும் கால்களையும் சுற்றியிருக்க வலக்காலை மடித்துக் கொண்டிருப்பதுடன் வலக்கையில் வாள் வைத்திருக்கிறார். பூரணை-புஷ்கலையுடன் குதிரை பீடத்தில் அமர்ந்திருக்கிறார்.

* ஆரியங்காவு திருத்தலத்தில், வலக்காலை தொங்க விட்டுக் கொண்டு, இடக் காலைக்குத்திட்டு வலக்கையில் நீலத்தாமரை ஏந்தி கிரீடமணிந்து யானை மேல் அமர்ந்திருக்கிறார். ஐயப்பன் பூரணை - புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார்.

* மணிகண்டன் புலிப்பாலுக்காகக் காட்டுக்குள் சென்ற போது, அங்கே தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் ஒரு மலை உச்சியில் தங்கத்தால் ஒரு கோயில் அமைத்து, ரத்ன சிம்மாசனத்தில் அவரை அமர வைத்து, வேத நெறிப்படி பூஜை செய்தனர். அந்த இடமே பொன்னம்பலமேடு என்றும் காந்தமலை என்றும் வழங்கப்படுகிறது.

* ஐயப்பனின் வேறு பெயர்கள்; ஹரிஹரபுத்திரன், ஆரியன், செண்டாயுதன், சாதவாகனன், புஷ்கலை மணாளன், மூலத்தலைவன் கருங்கடல் வண்ணன், காரி, வெள்ளானை ஊர்தியான், கோழிக் கொடியோன், அறத்தைக் காப்போன், சாத்தன், பூரணைக் கேள்பன் ஆகியன
ஐயப்பனுக்கு வேறுபெயர்கள்.

* ``பம்ப சத்ய’’ - வீரரோடு சென்று ஐயப்பன், மகிஷியை வதம் செய்ததைப் போற்றும் வகையில் தம் வீரர்களுக்கு அவர் பம்பை நதி கரையில் கொடுத்த விருந்தே ‘பம்ப சத்ய’ எனப்படும். இப்போதும் நடைபெறும் விருந்தில் உணவு படைக்கப்படும் முதல் இலை ஐயப்ப சுவாமிக்காகத் தனியாகவிடப்படுகிறது. பம்பை விளக்கு- வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி பம்பை நதியில் விடப்படுவதே பம்பை விளக்காகும்.

* சகஸ்ர கலச பூஜை, சபரிமலையில் பகவானின் சக்தியை அதிகரிக்கச் செய்யப்படும் விசேஷ பூஜை, சகஸ்ர கலச பூஜையாகும். சபரிமலையில் ஒரு நாளில் பதினெட்டு பூஜைகள் நடத்தபடுகின்றன. உஷத் பூஜைக்குப் பாயசம், மதியம் அரவணை, தீபாராதனைக்கு அப்பம், அத்தாழ பூஜைக்குப் பானகம். இவை தவிர எல்லாப் பூஜைக்கும் சுத்த அன்னம் நைவேதியம் செய்யப்படுகிறது. சகஸ்ர கலச பூஜையில் ஒரு பிரம்ம கலசமும், 24 பிரிவு பிரம்ம கலசங்களும், 975 வரிக்கலசங்கும் வைத்து பூஜை செய்யப்பட்டு பகவானின் விக்ரகத்துக்கு அபிஷேகம் செய்யப்படும்.

* மண்டல பூஜை திருவிழாவின் கடைசி நாள். ஐயப்பனை, யானை மீது பவனியாக அழைத்து வந்து பம்பைக் கரையில் செய்யப்படும் சடங்கு, ``ஆராட்டுச் சடங்கு’’ எனப்படுகிறது.

* சபரிமலைக்குச் செல்லும் வனமானது ஏழு கோட்டைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை;

முதற்கோட்டை - எருமேலி
இரண்டாவது கோட்டை - காளை கட்டு
மூன்றாவது கோட்டை - உடும்பாறை
நான்காவது கோட்டை - கரிமலை (மிகக் கடினமான மூன்று ஏற்றங்களைக் கொண்டது)
ஐந்தாவது கோட்டை - நீலிமலை
ஆறாவது கோட்டை - சரங்குத்தி ஆல் (சபரிமலை கோயில்)
ஏழாவது கோட்டை - பதினெட்டாம்படி.


மண்டல பூஜை என்பது தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் சூரியன் நுழையும் நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த வழக்கத்தை சித்திரை திருநாள் மகாராஜா ஏற்படுத்தினார். மண்டல பூஜையின்போது, அணிவிக்கப்படும் தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னரான சித்திரை திருநாள் மகாராஜா வழங்கினார்.

தொகுப்பு: ஆர். ஜெயலட்சுமி

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?