×

சூரியனை வழிபடுவோம் வளம் பெறுவோம்!

இந்திய கலாசாரத்தில் சூரிய வழிபாடு என்பது மிகவும் முக்கிய நிகழ்வாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று சூரியனிலுள்ள திவ்ய சக்தியை அறிவியல் ஆராய்ச்சியினர் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால் இதனை நம் வேத கலாசாரம் பல யுகங்களுக்கு முன்பாகவே கண்டுபிடித்துவிட்டது. சூரியனை நாம் ஆதித்யன், சூரியன், ரவி, மித்ரன், பானு, பகன், பூஷா, அர்யமன், மரீசி, அர்கன், பாஸ்கரன், பிரபாகரன், மார்த்தாண்டன் என பல பெயர்கள் ெகாண்டு அழைக்கிறோம். இவ்வாறு அழைக்கப்படும் சூரியனின் பெயர்கள் மந்திரங்களாக உபாசனை செய்யப்படுகின்றன. சூரிய சக்தி பூமியின் மேல் படரும் போது அந்தந்த உயிர்களின் உடலின் தேவைக்கேற்ப வெவ்வேறு விதமாக கிரகிக்கப்படுகிறது.

சூரியனை ‘சப்தாஸ்வரத  மாரூடம்’ என்ற நாமத்தால் துதிப்பது வழக்கம். ‘ஏழு குதிரைகள் பூட்டிய  ரதத்தின் மேல் சூரிய பகவான் பவனி வருவான்’ என்பது வர்ணனை.

‘‘ரம்ஹண சீலத்வாத் ரத:’’- நகரும் லட்சணம் கொண்டது ரதம்.
‘பாய்வது’  ஒளியின் குணம். ஒளிக்கு மூலமானவன் பிரபாகரன்.
அஸ்வம் என்றால் ‘ஒளிக்கதிர்’ என்று பொருள்.

அஸூ வ்யாப்தௌ… சீக்கிரத்தில் வியாபிக்கும் குணம் கொண்டது அஸ்வம். இதுவும் ஒளியின் குணமே. எனவே தான் சூரிய கிரணங்களை  குதிரைகள் என்று குறிப்பிட்டார்கள். ‘‘ஏகோ அஸ்வோ வஹதி சப்த  நாமா . . . ’’ ஒரே குதிரையே ‘ஏழு’ என்றழைக்கப்படுவதாக வேதமந்திரம் விளக்குகிறது. இதனை நாம் கவனித்துப் பார்த்தால், நம் சாஸ்திரங்களின்  ஆதாரத்தோடு அனேக கருத்துக்களை ஏற்க முடியும்.

* ஒரே சூரியகாந்தி (ஒளி) எந்த வித வர்ண வேறுபாடும் இல்லாத சுத்த வர்ணத்தில் இருக்குமென்றும், அதுவே வெவ்வேறு மாறுதல்களால் ஏழு நிறங்களாக பிரிக்கப்படுகிறதென்றும் அனைவரும் அறிந்ததே. இந்த ஏழு நிறங்களே ஏழு குதிரைகள்! இது நிறங்களோடு கூடிய  சூரிய ஒளியின் ஸ்வரூபம்.

* சூரிய உதயத்தை அனுசரித்து தினங்களைக் கணக்கிடுகிறோம். பகலுக்குக் காரணமானவர் திவா - கரன். இப்படிப்பட்ட  உதயங்களால் தான் கிழமைகள் ஏற்படுகின்றன. கிழமைகள் ஏழு.
கால உருவமான ஆதித்தியன் ஏழு நாட் களையே ஏழு குதிரைகளாகக் கொண்டு வலம் வருகிறான்.

* புராணங்களின் படி சூரியனின் ஏழு குதிரைகளின் பெயர்கள் : - ஜய, அஜய, விஜய,  ஜிதப்ராண, ஜிதஸ்ம, மனோஜவ, ஜிதக்ரோத. ஒளி பரவுவதில் உள்ள பலவித நிலைகளே இப்பெயர்கள்.

* வேதஸ்வரூபனான ஹனுமானும், யாக்ஞவல்கியரும் சூரியனை வழிபட்டு வேத ஞானத்தை அடைந்தார்கள். வேதத்திலுள்ள முக்கிய சந்தஸூகள் ஏழு. அவை காயத்ரி,  த்ரிஷ்டுப், அனுஷ்டுப், ஜகதீ, உஷ்னிக், பஙக்தீ, ப்ருஹதீ.

* சூரியனிலுள்ள கிரணசக்தி சந்திர கிரகம் உருவாகக் காரணம். ஏழு குதிரைகளாக உருவகப்படுத்தப்பட்ட கிரண சக்திகள் மூலம் விஸ்வரத சக்ரகத்தை நடத்தும் நாராயணனே எல்லா கிரகமாகவும் இருப்பவன்.

* நம் உடலில் தோல், எலும்பு, சதை, மஞ்ஞை, ரத்தம், மேதஸ், சுக்ரம் என்ற ஏழு தாதுக்கள் உள்ளன. இவற்றோடு சஞ்சரிக்கும் ரதமே இந்த தேகம். இவற்றை இயக்கும்  அந்தர்யாமி வடிவமான சைதன்யமே ஆதித்தியனாகிய பரமாத்மா.

* நம் முகத்தில் கண்கள் இரண்டு, நாசி துவாரங்கள் இரண்டு, காதுகள் இரண்டு, வாய் ஒன்று. இந்த ஏழு ஞானேந்திரியங்களை வழி நடத்தும் புத்தி ரூபமான சைதன்யம் இவனே!

* மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை நகரும் குண்டலினீ ஸ்வரூபமே அர்க்கன். இந்த மார்க்கத்திலுள்ள ஏழு சக்கரங்களின் ஸ்தானங்களே ஏழு குதிரைகள்.

* இந்த ஏழு குதிரைகளோடு பயணிக்கும் சூரிய ஒளியின் விஸ்தரிப்பையே ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் சலனமாக வேத சாஸ்திரங்கள் போற்றுகின்றன. ஒவ்வொரு  தெய்வத்தின் உருவமும் ஒவ்வொரு தத்துவத்தின் அடையாளம்.

வேதங்கள் புகழும் சூரிய சக்திக்கு சகுண உருவமே ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உலா வரும் ஹிரண்மய ஸ்வரூபம். ஜகத்தினை மலரச்செய்து, துயிலெழுப்பி, நகரும் சக்தியே ‘பத்மினி’. ரோக நிவாரண விடியற்காலை சக்தியே ‘உஷாதேவி’. சூரிய ஒளியினால் தான் பொருட்களை அடையாளம் கண்டு கொள்கிறோம். அதுவே ‘சம்ஞா சக்தி. வெளிச்சமிருந்தால் தான் நிழலுக்கு இருப்பு. நிழலைத் தரும் வெளிச்சமே ‘சாயாதேவி’. இந்த நான்கும் சூரியனின் ஒரே கிரணத்தின் வெவ்வேறு சொரூபங்கள். சூரியனை விட்டுப் பிரியாத சக்திகள். இவற்றையே சூரியனின் மனைவிகள் என்கிறோம்.

மகர சங்கராந்தி

நம் பூமிக்கு ஞானத்தை அளிப்பவர், வாழ்க்கையை படைப்பவர் ஆதித்ய தெய்வம். அவரிடமிருந்து பூமியின் மேல் கதிரொளி வீசுகின்ற கிரணக் கற்றைகள் ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஓர் ஆண்டில் 12 ராசிகளில் சஞ்சாரம் செய்தபடி 12 மாத காலத்தை ஒரு சுற்றாக ஏற்பாடு செய்பவன் பாஸ்கரன். உண்மையில் சூரியன் உதித்து மறைவதில்லை. ஆனால் சுழன்று கொண்டிருக்கும் பூமியின் மேல் வசிக்கும் நாம் ஒப்பீட்டுக் கண்ணோட்டத்துடன் கவனித்து. நமக்கு அனுகூலமான பரிபாஷையில் ‘சூரிய கமனம்’ என்கிறோம்.

சூரியனின் கிரணக் கற்றைகள் பரவுதலே ‘சூரிய கிரமணம்.’ அதாவது சூரியனின் நகர்வு. இக்கிரணங்கள் நாமிருக்கும் பூகோளத்தின் தன்மையை ஒட்டி உத்தராயணத்தில் ஒரு விதமாகவும், தக்ஷிணாயனத்தில் வேறு விதமாகவும் இருக்கும். இவ்விரண்டும் சேர்ந்ததே ஓராண்டு. ஆண்டு என்பதே காலக் கணிப்பிற்கு ஆதாரம். இதனைப் பிரதானமாகக் கொண்டே யுகங்களைக் கணக்கிடுகிறோம். சூரிய கிரணங்களிலேயே அக்னி, ஜல சக்திகள் இரண்டுமிருக்கின்றன. எனவே தான் இக்கிரணங்கள் போஷிக்கும் சகல ஜீவராசிகளும் கூட அக்னி, ஜல
தன்மைகள் இணைந்த உருவங்களாக  உள்ளன. அக்னியை சிவ தத்துவமாகவும் ஜலத்தை சக்தி தத்துவமாகவும் கொண்டு, உலகையும் காலத்தையும் சிவசக்தி ஸ்வரூபமாக தரிசித்து வழிபடுவது நம் சம்பிரதாயங்களில் இடம் பெற்றுள்ளது.

ஆண்டின் பகல் பாகம் ‘மகர சங்க்ரமண’த்துடன் தான் தொடங்குகிறது. ஒளியை வழிபடும் மக்கள் வெளிச்சத்திற்கு பூரண பிரகாசத்தையளிக்கும் ஆரம்பத்தை மகர சங்கராந்தி என புண்ணிய தினமாகக் கொண்டாடுகிறார்கள். அதே போல் ஆடி மாதத்தில் பிரவேசிக்கும் சந்தியா காலம் அதாவது மாலை வேளையும் நாம் புண்ணிய காலமாகப் போற்றுகிறோம்.

இந்த பருவ காலத்தின் போது தான், நன்மையே நிகழவேண்டும் என்று வெளிச்சக் கடவுளான சூரியனை வேண்டிக் கொள்கிறோம். இந்த புண்ணிய தினத்தில் தெய்வீக சக்திகளை எளிதாகப்பெற முடியும் என்பார்கள். எனவே தான் இந்த நாளில் தியானம், தானம், ஜபம் போன்ற அனுஷ்டானங்களும், பித்ரு தர்ப்பணம் போன்ற நற்காரியங்களும் அமோக பலனளிக்கும் என்பது சாஸ்திர வாக்கு.

முதல் அறுவடை செய்த நெல்லில் இருந்து  பெற்ற  அரிசியால் சமைத்து தேவதைகளுக்கு படைப்பது நம் சம்பிரதாயம். இதன் அம்சம் தான் புது அரிசியில், பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து தைத் திருநாளாக கொண்டாடுகிறோம். இது நமக்கும் தெய்வத்திற்கும் நடுவில் ஒரு தொடர்பினை ஏற்படுத்துகிறது. அவ்வாறு தொடர்பு ஏற்படுத்தும் மகர சங்கராந்தியை சரிவரக் கொண்டாடுவதால், நாம் அனைத்து வளம் பெற்று நல்வாழ்வு வாழ்வோம் என்பது ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர். இந்தாண்டும் சூரியனை வழிபட்டு அனைத்து வளமும் பெறுவோம்.

தொகுப்பு: மகி

Tags : sun ,
× RELATED வர்த்தகம் தொடங்கியபோது சரிவில்...