×

ஞான சூரிய தரிசனம்!

வணக்கம் நலந்தானே!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்

பாரத தேச மக்களின் ஆதாரம் வயலும் வாழ்வுமே ஆகும். வயலுக்கு மாடு. வாழ்க்கையை இயக்கும் சக்தியையே சூரியன் என்று வைத்திருந்தனர். இவை இரண்டையும் மறக்காது வணங்கவும் செய்தனர். கண்ணுக்குத் தெரியும் முதல் கடவுளே சூரியன். எனவே, நம்முடைய முதல் வழிபாடே சூரிய நமஸ்காரம் என்பதிலிருந்துதான் தொடங்குகிறது. உலகத்தின் ஒளிக் கடவுளே இவர்தான். சிவச் சூரியன் என்றும், சூரிய நாராயணர் என்றும் அவரவர் உபாசனை தெய்வங்களாகவே வைத்து வழிபடுகிறோம்.

ஞானத் தேடலில் தவிக்கும் ஒருவருக்கு குரு என்று ஒருவர் கிடைக்காவிடில் நேராக சூரியனே நீயே எனக்கு குரு என்று பாவித்து தியானிக்கும்படி வேதங்கள் கூறுகின்றன. அனுமனின் முதல் குருவே சூரியன்தான். அதனால்தான் சூரிய வம்சத்தில் வந்த ஸ்ரீராமரே அவருக்கு எப்போதும் குருவாகவும், தெய்வமாகவும் அமைந்தார். மேலும், ஸ்ரீராமருக்கே அகத்தியப் பெருமான் ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசித்தார். சூரிய காயத்ரீ மந்திரத்தின் மையமே சூரியனிடம் சக்தியை வேண்டுவதாகவும் அமைந்துள்ளது. எனவே, தனி மனிதர் சூட்சுமமாகவும், நுட்பமாகவும், பேரறிவோடும் திகழ வேண்டுமெனில் சூரியனை வழிபட்டாலே போதுமானது. சூரிய வழிபாடு என்பது எளிமையாக அதிகாலை விழித்தல் முதல் நமது சாஸ்திரங்களில் அழகாகவும் கிரமமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.   

ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனங்கள் என்று ஆறு வகையான மார்க்கங்களை உருவாக்கினார். அதில் ஒன்றுதான் சௌரம் என்கிற சூரிய வழிபாடு. நமது தேசத்தில் இன்று எந்த பண்டிகையானாலும் சரிதான் அது இந்த சௌரம் என்கிற சூரியன், காணாபத்யம் என்கிற கணபதி வழிபாடு, சாக்தம் என்கிற சக்தி வழிபாடு, சைவம் என்கிற சிவ வழிபாடு, வைஷ்ணவம் என்கிற விஷ்ணு வழிபாடு, ஷண்முகம் என்கிற முருக வழிபாடு என்று இந்த ஆறு மார்க்கத்திற்குள் அடக்கி விடலாம். அதிலே இந்த சௌரம் என்கிற சூரிய வழிபாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுகிறோம்.

பொங்கலன்று சூரியனுக்கு சிறப்பான வழிபாட்டைத் தவிர மற்ற நாட்களில் சூரியன் பூஜித்த தலங்களுக்குச் செல்வது என்பது சூரியனின் அருளைப் பெறுவதேயாகும். இதனால் தோஷங்கள் போகிறது என்று மட்டும் கொள்ளாமல் அப்பேர்பட்ட ஞானமூர்த்தி வழிபட்ட ஈசனை நாம் வணங்குவது என்பது விவரிக்க முடியாத பல ரகசியங்களையும் கொண்டதாகும். எந்த நோக்கத்திற்காக அந்த தலத்தில் சூரியன் வழிபட்டாரோ, எப்படிப்பட்ட மந்திர சப்தங்களினால் ஈசனை சூரியன் தொழுதாரோ அப்படிப்பட்ட ஈசனை நாமும் தரிசிக்கும்போது நமது அக உலகம் திறக்கப்படுகிறது. வரமே வேண்டாத நிறைவான ஆன்மிக நிலையான ஞான பரிபூரணனாக நம்மைக் கொண்டுபோய் நிறுத்துவதுதான் கோயிலை நிர்மாணித்த ரிஷிகளின் உட்கிடக்கையாகும்.

தொகுப்பு: கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?