குழந்தை வரமருளும் முத்தான மூன்று ஆலயங்கள்

கருவளர்சேரி - கருவளர் நாயகி

சகல உயிர்களுக்கும் தாயான அம்பாள் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி’யாக அருள்பாலிக்கிறாள். ​கு​ம்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. ​​கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தையும் விலக்கி குழந்தை வரத்தை அருளுகிறாள்.  மேலும், கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும்.

அதனாலேயே தேவியை ‘கருவளர் நாயகி’ என்ற திருப்பெயரிலும் அழைக்கின்றனர். குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள் இந்தத் திருக்கோயிலுக்கு வந்து படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சந்நதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினைத் தருவார்கள். அதை வாங்கி வந்து, தொடர்ந்து பூசி வர தடைகளை எல்லாம் நீக்கி, மகப்பேற்றை அருளுகிறாள் கருவளர் நாயகி அன்னை. கர்ப்பிணிகளும் இந்தப் பூஜையை செய்து பயன் பெறலாம்.

திருக்கருகாவூர் - கர்ப்பரட்சாம்பிகை

​​அடுத்து நம் நினைவுக்கு வருவது திருக்கருகாவூர். கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர்​. கருகாக்கும் நாயகியாய் அருள்பாலிப்பவள் கர்ப்பரட்சாம்பிகை. அம்பிகைக்கு “கரும்பணையாள்” என்ற பெயரும் உண்டு. இனிமையானவள் அல்லவா. அவள் அருளும் இனிமை. மொழியும் இனிமை. குழந்தை பாக்கியம் தடைப்படும் பெண்கள், கருக்காத்த நாயகியை பக்தி யோடு வேண்டி, நெய்யினால் சந்நதியின் படிகளை மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும்.

பூஜிக்கப்பட்ட நெய்யினை ஒரு மண்டலம் உண்டு வந்தால், குழந்தைப் பேறு கிட்டும். நம்பிக்கையுடன் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இந்த பிரார்த்தனையை வாரத்தின் அனைத்து நாட்களிலும் செய்யலாம்.​ குழந்தை பிறந்தவுடன் தொட்டில் கட்டி, துலாபாரம் செய்கின்றனர்.​ பூசிக்கப்பட்ட விளக்கெண்ணெயையும் பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்த எண்ணெயைத் தேய்த்தால் சுகப்பிரசவமாகும் என்பது நம்பிக்கை.

புதுக்காமூர் - புத்திரகாமேஸ்வரர்

ஆரணிக்கு அருகே உள்ள புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் ஆலயம் புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டிய திருக்கோயில். இத்திருக்கோயிலில் அம்பாள் பெயர் பெரிய நாயகி. குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா, புத்திரகாமேஷ்டி யாகம் செய்த பின்னர், இந்த ஆலயத்திற்கு வந்து ஈசனை வணங்கியதாக ஐதீகம்.

இத்தலத்தின் அருகே வடக்காக ஓடும் செய்யாற்றி்ல் நீராடி புத்திர காமேஸ்ரவரரை சேவித்த தசரதனுக்கு இங்கே தனி ஆலயம் உண்டு. அரச மரத்துடன் வேம்பு இணைந்த மரத்தடியில் அநேக நாகர்கள் உள்ளனர். இவர்களை 108 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். வில்வம், பவழமல்லி என இரண்டு தல விருட்சங்களை கொண்ட இந்த தலத்தில் பிரதோஷ வழிபாடு, ஆனிதிருமஞ்சனம் போன்றவை சிறப்பாகும்.

தொகுப்பு: பரிமளா

Related Stories: