×

வடிவேல் முருகனின் பதினாறு வடிவங்கள்

திருமுருகப் பெருமானுக்குரிய திருக்கோலங்கள் 16 என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. திருமுருகனின் பெருமை கூறும் ‘ஸ்ரீ தத்துவநிதி’ என்ற நூலில் முருகப் பெருமான் 16 விதமான திருக்கோலங்கள் உடையவராகக் கூறப்பட்டுள்ளது. ‘குமார தந்திரம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டுள்ள திருத்தணிகை புராணத்திலும் 16 திருக்கோலங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. முருகனின் இந்த 16 வடிவங்களும் தம்மை வழிபட்டாருக்கு மிகவும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியவை.

ஞான சக்திதரர்

திருமுருகன் திருக்கோலங்களில் முதலாவது திருக்கோலம் ஞான சக்திதரர் என்பதாகும். ஒரு முகம், இரண்டு திருக்கரங்களும் உடைய திருவுருவம் இது. வலது கையில் சக்தி வேல் இருக்கும். பகைவரை அழிக்கும் தன்மை படைத்த இடது கை, தொடை மேல் அமைந்திருக்கும். இதுவே ஞான சக்திரர் திருக்கோலம்.  இவரது கையில் இருக்கும் வேல் மூன்று இலை கொண்டதாக அமைந்திருக்கும். அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற முப்பெரும் சக்திகளைக் கொண்டதாகும். ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் கோயில் கொண்டிருக்கும் திருக்கோலம் ஞானசக்திதரர் திருக்கோலமாகும். இவரை வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்கள் எல்லாம் தடையின்றி எளிதில் நிறைவேறும் என்பர்.

கந்த சாமி

திருமுருகப் பெருமானின் அருட் திருக்கோலங்களில் இரண்டாவது திருக்கோலம் ஸ்கந்த மூர்த்தி எனும் கந்தசாமி திருக்கோலமாகும். ஒரு திருமுகம். இரண்டு கைகள், இடது கரத்தை இடுப்பில் ஊன்றியிருப்பார். கையில் தண்டாயுதமும், இடையில் கோவணமும் தரித்திருப்பார். முருகப் பெருமானின் திருநாமங்களில் கந்தன் என்ற பெயரால் பல அரிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. கந்த புராணம், கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்த சஷ்டி கவசம் என்பவை அவை. பல கடவுளர்களின் வலிமை ஒன்று சேர்ந்திருப்பதாலும், தண்டாயுதம் ஏந்தியிருப்பதாலும் முருகனை கந்தன் என்று அழைப்பார்கள். கந்தசாமி கோலம், பழனி ஆண்டவர் திருக்கோல வடிவமாகும். இவரை வழிபட்டால் அனைத்துக் காரியங்களும் விரைவில் நிறைவேறும்.

தேவசேனாபதி

திருமுருகனின் பதினாறு வடிவங்களில் மூன்றாவது வடிவம் தேவசேனாபதி வடிவமாகும். ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்ட அற்புத வடிவம் இது. இடது மடியில் தெய்வானையை அமர்த்தியிருக்கும் கோலம். இவரது திருவடிவத்தின் சிறப்பை திருத்தணிகைப் புராணம் அழகாக எடுத்துக் கூறுகிறது. இந்த ஆறுமுக தேவசேனாபதியை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு அமையும், எல்லா நலன்களும் எய்துவர் என்று புராணங்கள் கூறுகின்றன. சென்னிமலை முருகன் கோயிலில் கருவறைப் புறச்சுவரில் இந்த ஆறுமுக தேவசேனாபதி திருவுருவச் சிலை உள்ளது.

சுப்பிரமணியர்

திருமுருகனின் அருட் திருக்கோலங்களில் நான்காவது வடிவம் ‘சுப்பிரமணியர்’ ஆகும். வேதங்கள், சுப்பிரமணியம் என்ற நாமத்தின் பெருமையைப் புகழ்ந்து பேசுகின்றன. ஒரு முகமும் இரண்டு கரங்களும் உடையவர் சுப்பிரமணியர். இரு கரங்களில், ஒரு கை இடுப்பின் மீது ஊன்றிய நிலையில், மற்றொருகை அபயஹஸ்தமாக இருக்கும். இந்த வடிவத்தை ஆகமங்களும் சிற்பசாஸ்திரங்களும் விவரிக்கின்றன. எல்லா வகையான இன்பங்களையும் அளிக்கக் கூடியவர். திருவிடைக்கழி திருத்தலத்தில் உள்ள மூலவர் உருவம் சுப்பிரமணியர் திருவுருவமாகும்.

கஜவாகனர்

முருகன் என்றாலே மயில்தான் நினைவுக்கு வரும். மயில் வாகனனான அவன் ‘களிறு’ எனப்படும். யானையை வாகனமாகக் கொண்ட திருக்கோலம் உண்டு. இவரை ‘களிறு ஊர்திப் பெருமாள்’ என்றும் ‘கஜவாகனர்’ என்றும் இந்தக் கோலத்தைச் சொல்வார்கள். ஒரு முகமும் நான்கு கரங்களும் உடையவர். இடது கை ஒன்று கோழி ஏந்தியிருக்கும். இன்னொரு வரத முத்திரை காட்டும். மற்ற இருகரங்களில் வேலும் வாளும் ஏந்தியிருப்பார். யானை மீது அமர்ந்த திருக்கோலமிது. இது ஐந்தாவது திருக்கோலமாகும். இந்த அரிய திருவுருவம் திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் ஆகிய திருத்தலங்களில் உள்ளது. இவரை வழிபட்டால் எல்லா துன்பங்களும் விலகும் என்பர்.

சரவணபவர்

முருகப் பெருமானின் ஆறாவது திருவடிவம் சரவணபவ மூர்த்தியாகும். சரவணப் பொய்கையில் அவதரித்ததால் இந்த பெயர் பெற்றார். ஆறு முகங்கள், பன்னிரண்டு கைகள் உடைய அருட்கோலம் இது. இவர் மஞ்சள் நிறம் கொண்டிருப்பார் என்றும் குமார தந்திரம் சொல்கிறது. இவர் மூன்று முகமும் ஆறு கைகளும் உடையவர் என்றும், புஷ்வ அம்பு, கரும்புவில், கட்கம், கேடயம், வஜ்ரம், முக்கூடம் ஏந்திய வண்ணம் சிம்ம வாகனத்தில் இருப்பார் என்று ‘ஸ்ரீ தத்துவ நிதி’ சொல்கிறது. இவரை வழிபட்டால் நல்ல புகழ் கிடைக்கும். கல்விச் சிறப்பு ஏற்படும். பல முருகன் திருத்தலங்களில் இவ்வடிவைக் காணலாம்.

கார்த்திகேயர்

முருகப் பெருமானின் பதினாறு திருக்கோலங்களில் ஏழாவது திருக்கோலம் கார்த்திகேயர். குமாரதந்திரம் என்ற நூல் 6 முகங்களும், 6 தோள்களும் உடையவர் கார்த்திகேயர். இடது கரங்களில் புலிசம், கேடயம், வரதம் ஆகியனவும், வலது கைகளில் வேலும், வாளும் அபய ஹஸ்தமுமாக இருக்கும் என்று கூறுகிறது. ஸ்ரீ தத்துவ நிதி என்ற நூலில் இவர் ஒரு முகமும் மூன்று கண்களும் 10 கைகளும் உடையவர் என்கிறது. இவர் மயில் வாகனத்தில் வீற்றிருப்பார். தன்னை வழிபடும் பக்தர்களின் கவலைகளைப் போக்கி சகல சௌபாக்கியங்களையும் அளிப்பவர் என்று சொல்லப்படுகிறது. கும்பகோணத்தில் இருக்கும் கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரத்தில் உள்ள ஜராவதேஸ்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவங்கள் இருக்கின்றன.

குமாரசாமி

முருகப் பெருமானின் அருட்கோலங்களில் எட்டாவது வடிவம் குமாரசாமி வடிவமாகும். இவர், ஒரு முகமும் நான்கு கரங்களும் உடையவர். வலது கரங்களில் சக்தி ஆயுதமும், கத்தியும், இடது கரங்களில் குடம் கேடயம் ஆகியவற்றை தாங்கியிருக்கும். வள்ளி தேவியுடன் காணப்படுவார் என்கிறது திருத்தணிகை புராணம். மேலும் முடியலங்காரம், கரண்ட குடம் என்ற அமைப்பில் இருக்கும் என்கிறது  ஸ்ரீ தத்துவ நிதி. இந்தக் குமாரரை வழிபட மும்மலங்களும் நீங்கும் என்பார். நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள குமாரமங்கலம், கோயிலில் குமாரர் திருமேனி விசேஷமாக அமைக்கப்பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் பஞ்ச லோகத்தாலான குமாரர் விக்ரகம் உள்ளது.

ஆறுமுகம்

வடமொழியில் ‘ஷட்’ என்றால் ஆறு. ஆறு முகங்களை உடையவர் சண்முகர் என்று கூறுவர். இவரே ஆறுமுகம் ஆவார். ஆறுமுகங்களின் பெருமையை புராணங்களும் இலக்கியங்களும் மிகவும் விரிவாகப் பேசுகின்றன. இவர் ஆறு திருமுகங்கள், பன்னிருகைகளோடு மயில்வாகனத்தில் தேவசேனா வள்ளி சமேதராக இருப்பார். வலது கைகளில் வேலும், அம்பும், வாளும், திகிரியும், பாசமும் அபயமும் இருக்கும். இடது கரங்களில் குலிசம், வில், கேடயம், சேவல், அங்குசம், வரதம் இருக்கும். இவரை வழிபட சிவசக்தியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பர். திருச்செந்தூரில் உள்ள ஆறுமுகம் எனும் சண்முகர் திருக்கோலம் மிகவும் விசேஷமானது. இது ஒன்பதாவது திருக்கோலம்.

தாரகாரி

முருகப் பெருமானின் 10-வது திருக்கோலம் தாரகாரி. இதனை தார காந்த முக்தி என்பர். இவர் தாரகன் என்ற அசுரனை அழித்ததால் தாரகாரி எனப்படுகிறார். இவர் 12 கரங்கள் கொண்டவர். இடது கரங்களில் ஒன்று வரதமாக இருக்கும் மற்ற கைகளில் அங்குசம், வல்லி, கடகம், வில், வச்சிரம், வலக்கரங்களில் ஒன்று அபயம். மற்ற கைகளில் பாசம், சக்கரம், கட்கம், உலக்கை, சக்தி ஆயுதம் இருக்கும் என்று குமாரதாந்திரம் சொல்கிறது. இந்த நூலை ஒட்டியே திருத்தணிகை புராணவர்ணனை உள்ளது. இவரை வழிபட்டால் உலக மாயையிலிருந்து விடுபட உதவுவார். மாயையை அழிக்கும் மாதேவர் தாரகாரி. இந்தத் தாரகாரி வடிவ திருவுருவம் விராலிமலைக் கோயிலில் அமைந்துள்ளது.

தேவசேனாபதி

திருமுருகன் திருவடிங்களில் 11-வது வடிவம் சேனானி எனும் தேவசேனாபதி வடிவமாகும். துன்பங்களிலிருந்து தேவர்களைக் காத்ததால் இவர் தேவசேனாபதியானார். ஆறுமுகம் 12 திருக்கைகள். அபயம், முசலம், வாள், சூலம், வேல், அங்குசம் ஆகியவை வலது திருக்கைகளிலும், வரதம், குலிசம், வில், தாமரை, தண்டம், குக்குடம் என இடது கைகளிலும் கொண்டிருப்பார். இந்த தேவசேனாபதியை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் திருக்கோயிலில் முருகன் தேவசேனாபதியாக அமர்ந்திருக்கிறார்.

பிரம்ம சாஸ்தா

முருகன் அருட்கோலங்களில் 12-வது வடிவம் பிரம்ம சாஸ்தாவாகும். ஓங்கார மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்த பின், தானே படைத்தல் தொழிலை மேற் கொண்டதால், பிரம்ம சாஸ்தா எனப்பட்டார். கரங்களில் வரதம், குண்டிகையும், வலது கையில் அட்சய மாலை அபயம் தாங்கியுமுள்ள சதுர்புஜர். வள்ளியோடு காட்சியளிப்பவர். பிரமன் அருகில் வணங்கி நிற்பான் என்று சொல்லப்படுகிறது. இவரை வழிபட்டால் எல்லா வித்தைகளிலும் தேர்ச்சி கிடைக்கும். காஞ்சிக் குமரக் கோட்டத்திலுள்ள பிரம்ம சாஸ்தா திருவடிவம் மிகவும் விசேஷமானது. செங்கல்பட்டில் உள்ள ஆனூர் முருகன் கோயிலில் உள்ள மூர்த்தி பிரம்ம சாஸ்தாவாகும். இவர் கைகளில் மலர் கொண்டிருப்பது அதிசயமான கோலமாகும்.

வள்ளிமணாளர்

முருகனின் 13-வது திருக்கோலம் வள்ளிமணாளர் கோலமாகும். இவர் சதுர்புஜங்களுடன் வள்ளி தேவியுடன் இருப்பார். அருகே பிரம்மன் அமர்ந்து திருமணச்சடங்குகளை நடத்திக் கொண்டிருப்பார். விஷ்ணு, தன் கையில் தீர்த்தச் சொம்பு ஏந்தி தாரைவார்த்துத் தர தயாராக இருப்பார். சிவனும் பார்வதியும் ஆசி வழங்குவார்கள். இத்திருமண கோலத்தைத் தேவர்கள் கண்டு தரிசிப்பார்கள். முருகன் சிவந்த நிறத்திலும், வள்ளி கரிய நிறத்திலும் இருப்பார்கள். தெய்வத் திருமண கோலங்களை வழிபட்டால் திருமணத்தடைகள் அகலும் என்று கூறுகிறது குமார தாந்திரம். திருப்போரூர் முருகன் கோயிலில் வள்ளி கல்யாண சுந்தரர் திருவுருவம் அமைந்துள்ளது.

பால முருகன்

முருகன் திருவடிவங்களில் 14-வது வடிவம் பால முருகன் திருக்கோலமாகும். அழகு, இனிமை, இளமை இவற்றுக்குச் சொந்தக்காரர் இவர். பால் வடியும் திருமுகத்தோடு காட்சி தரும் குழந்தை சாமியைத்தான் பாலமுருகன் என்றும், பால சுப்பிரமணியர் என்றும் அழைக்கிறார்கள். ஒரு முகமும் இருகரமும் உடையவர். வலது கையில் தாமரை மலரை ஏந்தியும், இடது கையை இடுப்பில் ஊன்றியும் இருப்பார். குழந்தைப் பருவத்தில் முருகன் ஏற்ற அருட் கோலம் இது என்று தணிகை புராணம் கூறுகிறது. இவரை வழிபட்டால் உடல் குறைகள் நீங்கும். உடல் நலம் சிறக்கும் என்பர். பால சுப்பிரமணியர் திருவுருவங்கள் திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டார்குப்பம் முதலிய கோயில்களில் உள்ளன.

கிரவுஞ்ச பேதனர்

முருகப் பெருமானின் 16 கோலங்களில் 15-வது வடிவம் கிரவுஞ்ச பேதனர் திருக்கோலமாகும். சூரசம்ஹாரத்தின் போது கிரவுஞ்சம் என்ற மலையைத் தகர்த்ததால் இந்த பெயர் பெற்றார். முருகன் கிரவுஞ்ச மலையைப் பிளந்த வீரச் செயலை குமார தாந்திரம் விவரிக்கிறது. ஆறு முகமும் எட்டுக் கைகளில் பலவிதமான ஆயுதங்கள் தாங்கி மனக்கலக்கம் அடைந்த நேரத்தில் அவர்களைக் காப்பாற்றிய கந்தவேல் இவர். இவரை வழிபட மனக்கலக்கங்கள் நீங்கும்.

மயில் வாகனர்

திருமுருகப் பெருமானின் 16 திருக்கோலங்களில் 16-வது திருக்கோலவடிவம் மயில் வாகனர் ஆகும். மயில் வாகன மூர்த்தி, மயிலேறும் பெருமாள், சகி வாகனர் எனவும் அழைக்கப்படுவார். முருகன் சூரனோடு போரிட்டான். போரில் மாயங்கள் பல செய்த சூரனை சம்ஹாரம் செய்தார். மரமாகி நின்ற சூரனை இரு துண்டுகளாக்கினார். ஒன்று சேவல் ஆகியது மற்றொன்று மயிலானது. கோழியைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார். மயிலை வாகனமாகக் கொண்ட அருட் கோலம் மயில் வாகனர் ஆகும். இந்த கோலத்தை சில்ப சாஸ்திரம் ஏழு வகையாகச் சொல்கிறது. மயிலேறும் பெருமாளை வழிபடுபவர்களுக்கு இன்பமயமான வாழ்வு கிடைக்கும். மயில் வாகனர் பல திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ளதைக் காணலாம்.

Tags : Vadivel Murugan ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?