×

ஆனந்தம் அருளும் சுசீந்திரம் ஆஞ்சநேயர்

* கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் ஆஞ்சநேயர் கோயில்.

* இந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு மிக விசேஷம்.

* ஆலயத் திருப்பணி செய்ய பள்ளம் தோண்டியபோது கிடைத்த ஆஞ்சநேயர் விக்ரகத்தை, ஆலயம் கட்ட தீர்மானித்திருந்து, எந்த பகுதியில் பிரதிஷ்டை செய்தாலும் சரியாக அமையவில்லை. கடைசியில் ராமர் சந்நதி முன் பிரதிஷ்டை செய்ய முயற்சித்தபோது அங்கு நிலை கொண்டவர் இந்த ஆஞ்சநேயர்.

* அனுசுயாதேவியின் கற்பை உலகிற்கு உணர்த்த வந்த பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகிய முப்பெருங்கடவுள்கள் ஒன்றின் மேல் ஒன்றாக சந்நிதானம் கொண்ட சிறப்புமிக்க கோயிலாக பார்க்கப்படுகிறது.

* இந்த அனுமாருக்கு சாற்றும் வடைமாலை பிரசாதம் வெகுநாட்களுக்கு, ‘சிரஞ்சீவி’யாக, கெட்டுப் போகாமல் இருக்கும்.

* 18 அடி உயரம் கொண்டு அருள்பாலிக்கிறார் இந்த அனுமன்.

* சித்திரை தெப்பத் திருவிழா, ஆவணி பெருநாள் திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, மாசி திருக்கல்யாண திருவிழா என இந்த திருத்தலத்தில் விழாக்கள் மிக விமரிசையாக நடைபெறுகின்றன.   

* கூப்பிய கரங்களுடன் அனுமன் அருளும், இந்த விஸ்வரூப திருக்கோலத்தைத்தான், அசோகவனத்தில் சீதாப்பிராட்டிக்கு அனுமன் காட்டியதாக ஐதீகம்.

* இந்த கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் ஒன்று உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.

* ஆலய பிராகார கலாமண்டபத்தில் உள்ள கற்களைத் தட்டினால் ஏழு ஸ்வரங்களும், பஞ்சவாத்திய ஒலியும் எழுகின்றன. அற்புத இசைச் சிற்ப வடிவங்கள் அவை.

* இந்த தலத்தின் ஈசனுக்கு, இந்திரன் அர்த்த ஜாம பூஜையை செய்வதாக ஐதீகம். அகலிகையின் கற்பைக் கெடுத்த சாபம் நீங்க இந்திரன் இங்கு பூஜை செய்ததால், இந்த தலம் சுசீந்திரம் என்றாயிற்று.

* வடக்கிடம் என்ற தாணுமாலயன் கருவறையில் அர்த்த ஜாம பூஜைப் பொருட்களை வைத்துவிட்டுச் செல்லும் அர்ச்சகர் மறுநாள் இங்கு நடை திறக்க மாட்டார். அவர் தெற்கிடம் என்ற விஷ்ணு சந்நதிக்குச் சென்று விடுவார். முதல் நாள் தெற்கிடத்தில் பூஜை செய்த அர்ச்சகர்தான் மறுநாள் வடக்கிட கருவறையைக் கதவைத் திறப்பார். அகம் கண்டதை புறம் சொல்லேன் என்ற சத்தியம் செய்தே இங்கு அர்ச்சகர்கள் பூஜிக்க வருகிறார்கள். காரணம் அர்த்த ஜாமப் பூஜை இந்திரனால் செய்யப்படுகின்றது.

* ஆயிரங்கால் சுற்றுப்பிராகார மண்டபம், பெரிய மாக்காளை என கலை நயம் மிக்க சிற்பங்கள் கொண்டு ஆலயம் திகழ்கிறது.

* ஆலயத்தில் திருவேங்கட விண்ணகத்துபெருமாள் எனும் திருநாமம் கொண்டு திருமால் தேவி, பூதேவியுடன் அருள்கிறார்.

* இந்த தலத்தில் முதல் வழிபாடு தட்சிணாமூர்த்திக்கும், கடைசி வழிபாடு கணபதிக்கும் செய்யப்படுவது, பிற கோயில்களில் காண இயலாது.

* ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத மூல நட்சத்திர தினத்தன்று நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

* அன்று விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, மாதுளைச்சாறு, நல்லெண்ணெய், தேன், களபம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சோடச அபிஷேகம் நடைபெறும்.

* தெப்பக்குளத்திற்கு அருகே 51 சக்தி பீடங்களில் ஒரு பீடமாகவும், பராசக்தியின் பல் விழுந்த இடமான சசிபீடத்தில் முன்னுதித்த மங்கையாக அம்பிகை அருள்கிறாள்.

* தாணுமாலயன் ஆலயத்தில் எந்த திருவிழா என்றாலும் இந்த அம்பிகையிடமிருந்து தொடங்கப்படுவதுதான் மரபு. இந்த நிகழ்வு ‘ஓம்பலி’ என்றும், கடைசியில் முடிவது ‘மௌனபலி’ என்றும் அழைக்கப்படுகின்றன.

* சாதாரணமாக சிலை வடிவில் அருளும் நவகிரகநாயகர்கள், இந்த தலத்தில் விதானத்தில் அருள்கின்றனர். கீழே நின்று, மேல்நோக்கி அவர்களை வேண்டிக்கொள்வது இந்த தல வழக்கம்.

* தாணுமாலயன் சந்நதிக்கருகே, 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில், 27 தீபங்கள் எரிகின்றன. அந்தந்த நட்சத்திரக்காரர்கள் அந்தந்த தீபங்களை வணங்கி வழிபடுகின்றனர்.

* தல விருட்சமாக `கொன்றை’ மரம் திகழ்கிறது.

* கொன்றை மரத்தின் கீழ், கொன்றையடி நாதர் அருள்பாலித்துவருகிறார், ஆதி கருவறை கடவுளாக வழிபடப்படுகிறார்.

* இவருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால், உடல் நோய்கள், கிரகதோஷங்கள் விலகும். செவ்வாய், சனி, மூலநட்சத்திர நாள் மற்றும் அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது.

* செவ்வாய்க் கிழமைகளில் தீபமேற்றி வழிபட, வீடு கட்டும் யோகம் உண்டாகும். வீடு மனை, சொத்து முதலான பிரச்னைகள் தீரும்.

* இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை, தொடர்ந்து அமாவாசை தினங்களில் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்கள் உடல் சார்ந்த பிரச்னைகள் தீரும்.

* அனுமன் ஜெயந்தி நன்னாளில், சுசீந்திரம் அனுமானை மனதார வழிபட்டு, நம்முடைய பிரார்த்தனைகளை அவரிடம் சமர்ப்பித்தால், சகல காரியங்களையும் நிறைவேற்றுவார். சங்கடங்கள் அனைத்தையும் களைந்து அருளுவார்.

* குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்.

Tags : Sushindra Anjenayar ,
× RELATED சுந்தர வேடம்