இந்த வார விசேஷங்கள்

9.1.2023 - திங்கள்  

திருவரங்கத்தில் பெருமாளை வழிப்பறி செய்யும் திருவேடுபறி உற்சவம்

இறைவனைத் தொழுது அருள் பெற்ற அடியார்கள் உண்டு. உதாரணம், நம்மாழ்வார். இறைவனை பலவந்தப்படுத்தி அருள் பெற்ற அடியார்களும் உண்டு. உதாரணமாக, ஆண்டாள். இறைவனை வழிப்பறி செய்து அருள் பெற்றவர்கூட உண்டு அவர்தான் திருமங்கையாழ்வார். நீலன் என்று அவருக்குப் பெயர். சீர்காழிக்கு அருகில் திருக்குறையலூர் என்ற திருத்தலத்தில் அவதரித்தவர். திருவெள்ளக்குளம் என்று வழங்கப்படும் அண்ணன் கோயில், குமுதவல்லி நாச்சியார் கரம் பிடிக்க விரும்பினார். அவர் ஒரு கட்டுப்பாடு போட்டார்.

“நீங்கள் பஞ்சசம்ஸ்காரம் செய்து, வைணவராக வேண்டும். தினம் 1008 அடியார்களுக்கு அன்னம் இடவேண்டும்” என்று வாக்குறுதி பெற்றார். இதனை, திருமங்கையாழ்வார் திருமங்கைமடம் என்னும் ஊரில் நிறைவேற்ற ஆரம்பித்தார். கைப்பொருள் கரைந்தது. அரசனின் பொருளைப் பயன்படுத்த, அரசனால் சிறைப் பிடிக்கப்படுகிறார். பின், இவர் தூய்மை மனதையும், பக்தியையும் உணர்ந்த அரசன், இவரை விடுவிக்கிறான்.

ஒரு கட்டத்தில், செலவுகள் அதிகமாகி வழிப்பறி செய்ய முனைகிறார். இவரைத் திருத்திப் பணிகொள்ள திருவுளம்கொண்ட பெருமாளும் - பிராட்டியும், தங்களை மணமகளாகவும், மணமகனாகவும் மாற்றிக் கொண்டு, ஓரிரவு வேளையிலே வேதராஜபுரம் (திருமணம் கொல்லை) என்ற இடத்தில் தங்குகிறார்கள். இதனை அறிந்த திருமங்கையாழ்வார், தனது நண்பர்களுடன் சென்று அவர்களை மறித்து வழிப்பறி செய்கிறார். அவர்களின் ஆபரணங்களை எல்லாம் எடுத்துக் கொள்கின்றார். கடைசியில் பெருமாளின் திருவடியில் உள்ள ஒரு ஆபரணத்தை கழற்ற முடியாமல் வாயால் கடித்துக் கழற்ற முயற்சிக்கின்றார்.

அதுவும் முடியாமல் போகவே, விட்டுவிட்டு கொள்ளையடித்த நகைகளை மூட்டையாகக் கட்டி தூக்கும் போது, தூக்க முடியவில்லை. உடனே அவருக்குக் கோபம் வருகிறது. ஏதோ மந்திரம் போட்டு மூட்டையைத் தூக்க முடியாமல் தடுத்துவிட்டார்கள் என்று நினைத்து, பெருமானிடம் தன் வாளைக் காட்டி ‘‘என்ன மந்திரம் போட்டாய்?” என்று மிரட்டுகிறார். பெருமாள் அவருடைய தலையைத் தடவி, அவருக்கு திருமந்திரத்தை உபதேசித்தார். உடனே அவர் ஞானம் பெறுகின்றார். ஆழ்வார் ஆகும் ஞான உற்சவம் நடைபெறுகிறது. உடனே தன்னுடைய முதல் பிரபந்தமான பெரியதிருமொழி பாட ஆரம்பிக்கிறார்.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துய ரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடி யிளையவர் தம்மோ

டவர்தரும் கலவியே கருதி.

ஓடினே னோடி யுய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து

நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்

நாராய ணாவெனும் நாமம்,

என தொடர்ந்து ஆறு பிரபந்தங்களைப் பாடி முடிக்கிறார்.

பல திருத்தலங்களுக்கு கைங்கரியம் செய்கின்றார். கடைசியில் திருக்குறுங்குடி என்ற திவ்யதேசத்தில் சென்று, சிலகாலம் தொண்டு செய்து கழித்து பரமபதம் அடைகிறார். தற்சமயம் திருவரங்கத்தில் நடக்கக்கூடிய வைகுண்ட ஏகாதசி திருநாளுக்கு இவருடைய பிரபந்தங்களே காரணம். ஆழ்வார் நடத்திய வழிப்பறி உற்சவம்தான் திருவேடுபறி உற்சவம் என்கிற பெயரிலேயே நடக்கின்றது.

ஆடல் மா குதிரை மீது ஏறி, வேலோடு, பெருமானை சுற்றிசுற்றி வந்து மிரட்டி வழிப்பறி செய்யும் நாடகக் காட்சிதான் இந்த உற்சவம். இந்த விழா, மிக அற்புதமாக இருக்கும். தன்னுடைய வாளை காட்டி மந்திரம் கொண்டார் என்பதை ராமானுஜரும், மணவாளமா முனிகளும் பாடியிருக்கிறார்கள்.

வாழி பரகாலன் வாழி கலிகன்றி  

வாழி குறையலூர் வாழ்வேந்தன் - வாழியரோ

மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள்

மங்கையர்கோன் தூயோன் சுடர்மானவேல்.

 - ராமானுஜர்

இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை

இதுவோ எழிலாலி என்னுமூர்

இதுவோதான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை

எட்டெழுத்தும் பறித்தவிடம்.

- மணவாள மாமுனிகள்

10.1.2023 - செவ்வாய்  

சங்கடங்களைத் தீர்க்கும் சங்கட ஹர சதுர்த்தி

இன்று செவ்வாய்க்கிழமை. மக நட்சத்திரம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். கேதுவிற்கு உரிய தெய்வம் விநாயகர். இன்று விநாயகருக்கு உரிய திதி (சதுர்த்தி திதி). எனவே சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு சங்கடங்கள் அழியும். அதாவது, நீங்கும் என்பதால் சங்கடஹர சதுர்த்தி தினம். இன்று அதிகாலை நீராட வேண்டும். விரதம் இருக்க வேண்டும். விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்த வேண்டும். கொழுக்கட்டை, அப்பம் அவல், பொரி, வெல்லம் முதலியவற்றைப் படைக்க வேண்டும்.

இன்று செவ்வாய்க்கிழமை அல்லவா. செவ்வாய் கிரகத்துக்கு கிரக பதவி தந்தவர் விநாயகர் என்பதால் கீழே உள்ள இந்தப் பாடலைப் பாடி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

 

11.1.2023 - புதன்  

அனைவரையும் ஒன்று சேர்க்கும் கூடாரைவல்லி

இன்று பெருமாளுக்குரிய புதன்கிழமை. எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் வைணவர்கள் திருமாளிகைகளிலும், கூடாரைவல்லி (கூடாரை வெல்லும்) உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.  ஒரு பாசுரத்தை ஒரு உற்சவமாகக் கொண்டாடும் அதி அற்புதநாள். இன்று திருப்பாவையில் 27-வது பாசுரம்.

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா

உன்தன்னைப்- பாடிப் பறைகொண்டு

யாம் பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்று அனைய

பல் கலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்.

அதாவது இறைவனோடும் இறை அடியாரோடும் கூடாதவர்களையும்கூட வைக்கக்கூடிய உற்சவம். இன்று மட்டுமாவது இதுவரை பெருமாள் கோயிலுக்குச் செல்லாதவர்களும் பெருமாள் கோயிலுக்குச் சென்று இறைவனின் அடியார்களோடு சேர்ந்து இறைவனை வணங்க வேண்டும் என்று கூறுவது பாசுரம்.

27 எண்ணைப் பிரித்துக் கூட்டினால் 9 வரும். பல அர்த்தங்கள் புரியும். (2+7=9) இரண்டு என்பது இவ்வுலகம், மறுவுலகம் குறிக்கும். இரண்டு என்பது மந்திர ரத்னமாகிய துவய மகா மந்திரத்தைக் குறிக்கும்.

இரண்டு என்பது திரு+மால் என்ற இரண்டு பேரைக் குறிக்கும். திரு என்பது மஹாலட்சுமி. மால் என்ற சொல் பெருமாளையும் குறிக்கும். ஏழு என்பது சப்த பிராகாரங்களைக் குறிக்கும். சப்த நாடிகளை குறிக்கும். சப்த ஸ்வரங்களைக் குறிக்கும். இத்தனையும் அவன் ஆதிக்கம் என்பதைக் குறிக்கும். இவை இரண்டையும் கூட்டினால் ஒன்பது (9) வரும்.  நமக்கும் இறைவனுக்கும் உள்ள நவவித சம்பந்தம் என்று சொல்லப்படும் 9 உறவுகளையும் குறிக்கும். இத்தனை நுட்பங்களை அறிவித்துக் கூடியிருந்து குளிரச் செய்யும் விழா இந்த கூடாரைவல்லி விழா.

இன்று காலை நீராடி திருக்கோயிலுக்குச் சென்று, தாயாரையும் பெருமாளையும் பிரார்த்தனை செய்தால், நம்முடைய உறவுகள் நெருக்கமாகும். பகை உள்ளவர்கள்கூட பகையை மறந்து நம்மோடு கூடுவார்கள்.

11.1.2023 - புதன்  

தியாகராஜ சுவாமிகள் ஆராதனை

இன்று சதுர்த்தி  முடிந்து பஞ்சமி தினம். தம்முடைய வாழ்வெல்லாம் ராமநாமம் ஜபித்து நற்கதி  அடைந்தவர் தியாகராஜ சுவாமிகள். தன் வாழ்நாளில் 96 கோடி ராமநாமஜபம் செய்தவர்  தியாகராஜர். இவர் வால்மீகியின் அவதாரம் என்றும் சொல்கிறார்கள். அவர்  அவதரித்ததும் முத்தி அடைந்ததும் தமிழ்நாட்டில்தான். திருவாரூர் அவர்  அவதரித்த ஊர். திருவையாறு அவர் முத்தியடைந்த ஊர். தியாகராஜ சுவாமிகள்  நன்றாகப் பாடுவதோடு, வீணையும் வாசிப்பார். `கின்னரி’ என்ற தந்தி வாத்தியம்  வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார்.

அவர், 2,400 பாடல்களை இயற்றியுள்ளார். 24 ஆயிரம் பாடல்களை இயற்றியதாகவும் சொல்கிறார்கள். பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களையும் எழுதியுள்ளார். ஜோதிடம், கணிதத்திலும் வல்லவராகத் திகழ்ந்தார். பஞ்ச நதிகள் பாயும் திருவையாறில்  ஆண்டுதோறும் இசைக்கலைஞர்கள் கூடி அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளையும்,  இதர பாடல்களையும் பாடி இசை வழிபாடு நடத்துகின்றனர்.

12.1.2023 -  வியாழன்  

நம்மாழ்வார் மோட்ச உற்சவம்

வைணவத்தில் ஆழ்வார் என்று சொன்னால் நம்மாழ்வாரைக் குறிக்கும். மற்ற ஆழ்வார்கள் இவருக்கு அங்கங்கள். ஆழ்வாரின் தலைவர் நம்மாழ்வார். அவர் அவதரிப்பதற்கு முன்பு வரை, ஆளில்லாமல் பரமபதவாசல் மூடியிருந்தது. ஆழ்வார் தமிழில் பாடிய பிறகு மக்கள் ஞானம் பெற்று அவரோடு அவருடைய பாடல்களைப் பாடி நற்கதி அடைந்தார்கள். இதைக் காட்டுவதற்காக இந்த நாளில் அவர் பாடிய திருவாய்மொழி கேட்டுக்கொண்டே பரமபதத்துக்கு அழைத்துச் சென்றார் பெருமாள்.

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் அடிப்படையில் ஆழ்வார் மோட்ச உற்சவம் எல்லாக் கோயில்களிலும் நடைபெறும். அவருடைய விக்கிரகத்தை எடுத்துச்சென்று பெருமாளுடைய திருவடியில் வைத்து துளசியால் மூடுவார்கள். அவருக்கு மோட்சம் கிடைத்துவிட்டதாகப் பொருள். அதற்கு பிறகு ‘‘ஆழ்வாரை எங்களுக்குத் தந்தருள வேண்டும்’’ என்று இறைவனிடம் பிரார்த்திக்க, துளசியை அகற்றிவிட்டு, அவருக்கு மாலை பரிவட்டம் எல்லாம் தந்து, திரும்ப அவரை அவருடைய ஆஸ்தானத்தில் கொண்டு சென்று சேர்ப்பார்கள்.

இது அற்புதமான உற்சவம். ஆழ்வார் எல்லோரையும் உய்வடையச் செய்தார். ஆழ்வார் பாசுரம் பாடிய பிறகு, நரகத்தில் யாருக்கும் இடமில்லை. எல்லோருக்கும் பரமபதத்தில்தான் இடம் இருந்தது என்று சொல்லும் பாடல் இது.

பொலிக பொலிக பொலிக! போயிற்று வல் உயிர்ச் சாபம்

நலியும் நரகமும் நைந்த  நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை

கலியும் கெடும் கண்டுகொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்

மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழிதரக் கண்டோம்

13.1.2023 - வெள்ளி  

சகல நன்மையும் தரும் சஷ்டி

இன்று பல சிறப்புகள் உண்டு. ஒன்று மகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக்கிழமை. இரண்டாவது முருகனுக்குரிய சஷ்டி திதி. மூன்றாவது சூரியனுக்குரிய உத்தரநாள்.

பிறகு சந்திரனுக்குரிய ஹஸ்த நட்சத்திர நாள் என்று சூரிய சந்திரர்களுக்குரிய இரண்டு நட்சத்திரங்களும் சேர்ந்த நாள். இன்று சஷ்டி விரதமும், சுக்ர வார விரதமும் இருக்க வேண்டும். இந்த விரதம் இருந்தால், சஷ்டி விரத பலன்களும், வெள்ளிக்கிழமை சுக்கிர விரதத்தின் பலன்களும், முருகப்பெருமான் மஹாலட்சுமி இவர்களின் அருளும் நமக்குச் சித்திக்கும். இதனால், நம்முடைய வாழ்வில் செல்வவளம் பெருகும். ஆரோக்கியம் சிறக்கும். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்

பாக்கியம் கிடைக்கும்.

13.1.2023 - வெள்ளி  

இயற்பகை நாயனார் குருபூஜை

சைவ நாயன்மார்கள் 63 பேர். அதில் ஒருவர் இயற்பகை நாயனார். சோழநாட்டில் வணிகர் குலத்தில் பூம்புகாருக்கு பக்கத்திலுள்ள பல்லவனீச்சரம் என்ற இடத்தில் அவதரித்தவர். தமிழகத்தில் பெரும் செல்வராக விளங்கினார். சிவனடியார்கள் யார் வந்து எது கேட்டாலும் அவற்றை மறுக்காமல் தருகின்ற வள்ளலாக விளங்கினார். அவருடைய பெருமையை உலகிற்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், ஒரு திருவிளையாடல் செய்தார்.

பொதுவாக அடியார் வேடத்தில் வந்து இயற்கைக்கு மாறான கோரிக்கை வைத்து சோதிப்பது வழக்கம். அதை அப்படியே, கதையாக எடுத்துக் கொள்ளாமல் அதிலுள்ள கருத்துக்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவருடைய மன உறுதியையும், உடலையும் ஆத்மாவையும் வேறுவேறாக நினைக்கிறாரா என்கிற ஞானத் தன்மையையும் சோதிக்க எண்ணிய இறைவன், ஒரு அடியாராக வந்து “நான் வேண்டும் பொருளைத் தர வேண்டும்” என்று கேட்க, அவரும் ஏற்றுக்கொள்ள, இயற்பகை நாயனாரின் மனைவியைத் தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைக்கிறார்.

ஒரு பொருளைப்போல இந்த உடலும் இறைவனால் வழங்கப்பட்டது. இந்த உடல் அவனுக்கு உரியதே தவிர ஆத்மாவுக்கு உரியதல்ல என்கின்ற ஞானநுட்பத்தைத் தெரிந்தவர் நாயனார் என்பதால், மறு பேச்சின்றி தந்தேன் என்று சொல்லி, அதை மனைவியிடம் தெரிவிக்க, அவரும் ஞானப்பெண் என்பதால், இந்த திருவிளையாடலைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்கின்றார்.

இந்த தம்பதியினரின் வைராக்கியத்தை அறிந்த சிவனடியார், தம்முடைய வேடத்தைக் கலைத்து அவருக்கும் அவர் மனைவியாருக்கும் காட்சி தருகின்றார். அவருடைய முத்தித் தலம் பூம்புகார் அருகே திருசாய்க்காடு என்னும் திருத்தலம். அவருடைய குருபூஜை நாள் மார்கழி உத்திரம் (இன்று).

தொகுப்பு: விஷ்ணுபிரியா

Related Stories: