×

ஓரை சாத்திரத்தைப் பயன்படுத்தி உயர்வைப் பெறலாம்!

பஞ்சபட்சி சாஸ்திரம் குறித்து நாம் சில விஷயங்களைப் பார்த்திருந்தோம். பிறந்த நட்சத்திரம் தெரியாதவர்கள் அவரவர்கள் பெயருக்குத் தகுந்தபடி தங்களுடைய பட்சியைத் தெரிந்து கொள்ளலாம். இதில் படுபட்சி என்று ஒரு பிரிவு இருக்கிறது. சில குறிப்பிட்ட வாரங்களில் சில பட்சிகள் தொழில்கள் எதுவும் செய்யாது படுத்துக் கொள்ளும். அப்படிப்பட்ட நாட்களில் புதிதாக எந்தக் காரியத்தையும் தொடங்கக் கூடாது.

கிரகங்களைப் போலவே பட்சிகளுக்கும் பகை - நட்பு என்று இருக்கின்றன. ஒருவருடைய நட்சத்திர பட்சிக்கு பகை பட்சி உடைய நட்சத்திர நபர்களிடம் வியாபாரம் முதலியவைகளை தொடர்புகொள்வது தடைகளை ஏற்படுத்தும். ஆனால், மற்ற விஷயங்கள் எல்லாம் சரியாக இருந்தால் பரிகாரம் செய்துவிட்டு நீங்கள் தொடரலாம்.
ஒருவருடைய நட்சத்திரத்துக்கான பட்சி அரசு, ஊண், முதலிய காலங்களில் இருக்கும் போது தொடங்கப்படும் காரியங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். நடை காலத்தில் மத்திம பலனைத் தரும்.

எல்லா காரியங்களுக்கும் அரசு, ஊண் காலத்தைப் பயன்படுத்த வேண்டும். தவிர்க்க முடியாத காலத்தில் நடை காலத்தையும் பயன்படுத்தலாம். குறிப்பாக பயணங்களுக்கும் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் நடை மிகவும் உகந்த காலம். ஆனால் முக்கியமான காரியங்களை சாவு, துயில் போன்ற நேரங்களில் செய்யக்கூடாது. இவற்றையெல்லாம் அறிவதற்கு அனேகமாக எல்லா பஞ்சாங்கங்களிலும் அட்டவணை விவரிக்கப்பட்டிருக்கும். அதைப்போலவே பஞ்சாங்கத்தில் நேத்திரம், ஜீவன் என்று ஒரு கட்டம் இருக்கும்.

ஒவ்வொரு நாளுக்கும் நேத்திரம் ஜீவன் என்று கொடுக்கப் பட்டிருக்கும். ஒரு சுபகாரியத்தைச் செய்கின்ற பொழுது நேத்திரம், ஜீவனுள்ள நாளில் அமைக்க வேண்டும்.
இதற்கு அடுத்து, நாம் மிக எளிதாகப் பயன்படுத்த வேண்டியது ஓரை சாஸ்திரம். இது மிகமிக முக்கியமான ஒரு சாஸ்திரம். இதுவும் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் நல்ல ஓரையைப் பார்த்து ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது, அது முழுமையான வெற்றியைத் தரும். அந்த நேரத்தில் ராகு காலம், எமகண்டம் இருக்கக்கூடாது.

ஒவ்வொரு நாளிலும் காலை சூரிய உதயம் முதல் ஒருமணி நேரத்துக்கு ஒவ்வொரு ஓரைகள் நடக்கும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை எடுத்துக் கொண்டால் முதல் ஒரு மணி நேரம் சூரியனுடைய ஓரை. அதற்கடுத்து சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன் சந்திரன், சனி என்று வரிசையாக ஓரைகள் நடைபெறும். இவை குறித்து பஞ்சாங்கத்தில் மிக எளிதாக நாம் பார்த்துக் கொள்ள முடியும். ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு முதல் ஏழு மணி வரை சூரிய ஓரை என்று சொன்னால் சூரிய ஓரையில் என்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அந்த வேலைகளை மட்டும்தான் செய்ய முடியும். பொதுவாக சுப ஓரைகள் என்று எடுத்துக் கொண்டால் சுக்கிரன், புதன், சந்திரன், குரு இவர்கள் ஓரையே சுப ஓரைகள்.

இதிலும் பஞ்சாங்கத்தைப் பார்த்து நாம் நேரடியாக அந்த நேரத்தை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. நாம் எந்த ஊரில் ஓரை பார்க்கிறோமோ அந்த ஊரின் சூரிய உதயத்தை வைத்துக்கொண்டு இந்தக் கணக்குகளைப் போட வேண்டும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 7 மணி வரை சூரிய ஓரை என்று பஞ்சாங்கத்தில் போட்டு இருக்கும். ஆனால், நான் பார்க்கின்ற ஊரில் அன்றைய சூரிய உதயம் 6.20-தாக இருந்தால், 6.20 முதல் 7.20 வரை சூரிய ஓரை என்று நாம் கணக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

காலக் கணக்குகள் ராகு காலம், எமகண்டம், குளிகை என எதுவாக இருந்தாலும், அந்தந்த ஊரின் சூரிய உதயத்தை வைத்துக்கொண்டுதான் கணக்கிட வேண்டும். ஓரை அறிந்து நடப்பதால் எளிதில் வெற்றி பெறலாம். சுபநிகழ்ச்சிகள் வைப்பது, வங்கி கணக்குத் தொடங்குவது, புதிய வியாபாரம் தொடங்குவது, முகூர்த்த லக்னம் வைக்கின்ற நேரம் சுப ஓரை நேரமாக இருப்பது அவசியம்.

எந்தெந்த ஓரையில் என்னென்ன காரியங்களை செய்யலாம்.

1. சூரிய ஓரை: இந்த ஓரையில் எந்த சுபகாரியங்களையும் செய்வது உசிதமல்ல. ஆனால் பெரியவர்களுடைய ஆசிகளைப் பெறலாம். ஆலோசனை கேட்கலாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் மேற்கொள்ளலாம். வழக்கு தொடர்பான விஷயங்களைச் செய்யலாம். சூரிய ஓரையில் ஒரு பொருள் காணாமல் போயிருந்தால் அனேகமாக அது கிடைப்பது கடினம்.

2. சந்திர ஓரை: சந்திரஓரையில் எல்லாவிதமான சுபகாரியங்களையும் நாம் செய்ய முடியும். புதிதாகத் தொழில் தொடங்கவும், பிரயாணம் மேற்கொள்ளவும், ஆன்மிக யாத்திரை செல்லவும், குறிப்பாக, பெண் பார்ப்பது, திருமண விழாக்கள், சீமந்தம் நடத்துவது, குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துவது, சந்திர ஓரையில் செய்யலாம்.

3. செவ்வாய் ஓரை: செவ்வாய் பூமிக் கிரகமாகக் கருதப்படுகிறது. இந்த ஓரையில் நிலம் வாங்குவது, ஒப்பந்தம் போடுவது, ரத்ததானம் செய்வது, மருத்துவ உதவிகள் செய்வது நல்லது.

4. புதன் ஓரை: புத்திக்கும், நரம்புக்கும் சம்பந்தமான புதன் ஓரையில், கல்வி சம்பந்தமான பணிகளைத் தொடங்கலாம். குறிப்பாக குழந்தைகளை கல்லூரியிலோ பள்ளியிலோ சேர்ப்பதற்கும் தகவல் தொடர்புகள் செய்து கொள்வதற்கும், நிலம் வாங்குவதற்கும், ஜோதிடம் பார்ப்பதற்கும், எழுத்து சம்பந்தமான வேலைகளை ஆரம்பிப்பதற்கும், வங்கிப் பணிகளை செய்வதற்கும் ஏற்றது. ஆனால், இந்த ஓரையில் திருமண பேச்சுவார்த்தைகள் நடத்துவது கூடாது.

5. குரு ஓரை: குரு ஓரையில் எல்லாவிதமான காரியங்களையும் செய்யலாம். காரணம் குரு சுபகிரகம். திருமணம், பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது, புதிதாக வேலைக்குச் சேர்வது, மருத்துவம் ஆலோசனை பெறுவது, விவசாயம் செய்வது முதலியவற்றிற்கு இந்த ஓரை ஏற்றது. வீடு வாங்குவது துணிமணிகள் வாங்குவது போன்றவற்றையும் செய்யலாம்.

6. சுக்கிர ஓரை: புதிய வீடு வாங்குதல், ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், அலங்கார பொருட்களை வாங்குதல், விவசாய வேலைகளை தொடங்குதல் போன்றவற்றை சுக்கிர ஓரையில் செய்யலாம். புதிதாக திருமணமாகி சாந்தி முகூர்த்த நேரம் குறிக்கின்ற பொழுது இந்த சுக்கிர ஓரை நேரத்தை குறிப்பது சிறந்தது.

7. சனி ஓரை: சனி தாமச கிரகம் மற்றும் பாவ கிரகம் என்பார்கள். எனவே எந்த சுபகாரியங்களும் இந்த ஓரையில் கூடாது. ஆனால் பழைய வீடுகள், வாகனங்கள் வாங்கலாம். பழைய இயந்திரங்களை வாங்கலாம். கடனை அடைப்பதற்கு முயற்சி செய்யலாம்.

சனிக்கிழமை அன்று சந்திர ஓரையில் எந்தக் காரியத்தையும் செய்வது சரியாக இருக்காது. ஓரை பற்றிய நல்ல ஞானத்தைப் பெற வேண்டும். உதாரணமாக, குரு ஓரை நல்ல ஓரைதான் என்றாலும்கூட, வெள்ளிக்கிழமை குரு ஓரை சரியாக இருக்காது. ஓரை தோஷம் ஏற்படும். ஓரை எனும் ரகசிய காலக் கணக்கை தெரிந்து கொண்டு, தொடங்கினால் நாம் நம்முடைய காரியங் களில் மிக எளிதாக வெற்றியை அடைய முடியும். இதற்கெல்லாம்தான் நல்ல ஜோதிடர் உதவி தேவை. பொறுமையும் தேவை.

தொகுப்பு: தேஜஸ்வி

Tags :
× RELATED சுந்தர வேடம்