சிற்பமும் சிறப்பும்-ஆடல்வல்லான் ஆருத்ரா தரிசனம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

6-1-2023

காலம்: சோழர் கால செப்புத்திருமேனி - பன்னிரெண்டாம் நூற்றாண்டு கலைக்கூடம், தஞ்சாவூர் அரண்மனை, தஞ்சாவூர்.

சிவனின் நடனம் நடராஜராக, ஆடல் அரசனாக தென்னக செப்புத் திருமேனிகளில் உருக்கொண்டுள்ளது. இந்த வடிவங்கள் செப்புத் திருமேனிகளின் மிகச்சிறந்த வடிவங்களாகும். இவ்வடிவங்கள் ஒவ்வொன்றிலும் சிறுசிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனினும் அவை அனைத்தும் ஒரு அடிப்படையான கருத்தையே வெளிப்படுத்துகின்றன. அவ்வடிவங்களில் உள்ள நுண் வேறுபாடுகளை தெரிந்துகொள்வதை விட நடராஜரின் உருவ அமைப்பை பற்றி பொதுவாக தெரிந்துகொள்வது அவசியம்.

நடராஜ வடிவம் சிவனின் நடனத்தை குறிக்கிறது, நான்கு கரங்கள் கொண்டது. சிவனின் சடை முடியப்பட்டு அணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, கீழ்பக்க சடை அவிழ்ந்து நடனத்தில் விரிந்து பறந்துகொண்டிருக்கிறது. முடிந்த சடையின் மீது மண்டையோட்டையும், கங்கா தேவியின் உருவத்தையும், சடையைச் சுற்றி ஒரு நாகத்தையும், சடையின் மீது பிறைநிலவையும் காணலாம். தலையில் கொன்றையிலை மகுடம் சூடப்பட்டுள்ளது.

வலது காதில் ஆண்கள் அணியும் காதணியும் (மகர குண்டலம்), இடது காதில் பெண்கள் அணியும் காதணியும் (குழை) அணிந்திருக்கிறான். கழுத்தில் ஆரமும், கைகளில் வளையங்களும், முழங்கையில் கடக வளையமும், கை விரல்களிலும், கால் விரல்களிலும் மோதிரங்களும் அணிந்திருக்கிறான். இடையில் இறுக்கமாக அணிந்துள்ள புலித்தோலாடை அவன் அணிந்துள்ளவற்றில் முக்கியமான ஒன்றாகும். மேலும் உதரபந்தமும் முப்புரிணூலும் அணிந்துள்ளான். ஒரு வலது கரம் துடியை ஏந்தியுள்ளது, மற்றொன்று அபயஹஸ்தம் காட்டுகிறது. ஒரு இடது கரம் அனலை ஏந்தியுள்ளது, மற்றொன்று கஜஹஸ்தம் காட்டுகிறது, இக்கரம் முயலகனை நோக்கியிருக்கிறது. முயலகன் நாகத்தை பிடித்துக்கொண்டிருக்கிறான்.இடதுகால் தூக்கிய திருவடியாக உள்ளது.

பத்மபீடத்தில் துவங்கும் திருவாசி (பிரபாவளையம்) வட்ட வடிவில் அமைந்துள்ளது, அதைச் சுற்றிலும் சுடர் எரிந்துகொண்டிருக்கிறது. துடியையும் அனலையும் ஏந்தியுள்ள கரங்கள் திருவாசியைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன.நடராஜரின் திருமேனிகள் அனைத்தும் ஒரே அளவில் நான்கு அடி உயரத்தில் காணப்படும், அரிதாக நான்கு அடியை தாண்டியும் இருக்கும். ஆனந்த குமாரசாமியின் ‘சிவ நடனம்’ நூலிலிருந்து.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

Related Stories: