×

திருநாவுக்கரசரும் திருவாதிரைப் பெருவிழாவும்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

‘ஆ’ என்றால் ஆன்மா; ‘திரை’ மறைத்தல்; ‘திரு’ என்றால் இறைவன். ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கிற திரைகளை விலக்கி, திருவாகிய இறைவனிடம் சேர்க்கும் திருவிழாதான் திருவாதிரைப் பெருவிழா. திருநாவுக்கரசர் தன் வாழ்வில் எத்தனையோ விழாக்களை கண்டிருந்தாலும்கூட, இந்த திருவாதிரைத் திருவிழாவைப் பற்றித்தான் மிகச் சிறப்பாகத் தேவாரம் பாடியிருக்கிறார். மாதந்தோறும் திருவாதிரை நட்சித்திரம் வந்தாலும்கூட, மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைக்குத் தனிச்சிறப்புண்டு.

நிறை மதியாகிய பௌர்ணமியும் திருவாதிரையும் மார்கழியில் மட்டும்தான் சேர்ந்து வரும். இந்த நாளில் சிவபெருமானின் ஆடல் உருவமான நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என காரணாகமம் சொல்கிறது.நடராஜர், ஆண்டில் அபிஷேகம் செய்து கொள்ளும் ஆறு நாட்களில் இந்தத் திருவாதிரையும் ஒன்றாகும். இருபத்தேழு நட்சத்திரங்களிலேயே இரண்டே நட்சத்திரங்கள் மட்டும்தான் ‘திரு’ என்ற அடைமொழியுடன் வருவதாகும். ஒன்று திருவோணம் மற்றொன்று திருவாதிரை.

திருவோணம் திருமாலுக்கும், திருவாதிரை சிவபெருமானுக்கும் உகந்த நட்சத்திரங்களாகும்.இதில் ‘திருவாதிரை’ சிவபெருமானின் பிறந்த நட்சத்திரம் என்று சிலர் தவறாகக் குறிப்பிடுவர். சிவபெருமானுக்குப் பிறப்பே கிடையாது. அதனை, ‘‘பிறவா யாக்கைப் பெரியோன்’’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும். ஆகவே, திருவாதிரை என்பது சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். அதனாலேயே சிவபெருமானுக்கு ‘ஆதிரையன்’ என்ற காரணப் பெயரும் உண்டு. வடமொழியில் திருவாதிரை நட்சத்திரத்திற்கு ‘ஆருத்ரா’ என்று பெயர். அதனால் இறைவனை ஆருத்ரன் என்றும் அன்றைய தினம் நடைபெறும் அபிஷேகம் ``ஆருத்ரா அபிஷேகம்’’ என்றும் அழைக்கப்படும்.

இந்த ஆதிரை நன்னாள் மிகவும் அரிய நாள் என்பதை, சங்க இலக்கியத்தில் ஒன்றான கலித்தொகை;

‘‘அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த பெருந்தண் சண்பகம்’’

என்ற அடிகளில் பெறற்கரிய ஆதிரை நாளையுடைய இறைவனின் திருமேனி அழகைப் போன்று சண்பக மலர் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதால் சங்ககாலத்திலேயே திருவாதிரைத் திருவிழா இருந்துள்ளதை அறியமுடியும். இத்தகைய சிறப்புமிக்க திருவாதிரைப் பெருவிழாவை திருநாவுக்கரசர் திருவாரூரில் கண்டுமகிழ்ந்தார். பின்பு பூம்புகலூரில் திருஞானசம்பந்தர், ‘‘நீங்கள் திருவாரூரில் கண்ட பெருமையைச் சொல்லுங்கள்’’ என்று கேட்க,

‘‘முத்து விதானம் மணிப்பொன் கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்’’


என்ற தேவாரத்தைத் தொடங்கி, ‘முத்துக்கள் கோர்த்து மேற்கட்டி கட்டப்பட்டிருந்தது, அதாவது பந்தலின் உட்புறத்தில் அமைக்கப்படும் அலங்காரம் (விதானம்) தங்கத்தால் செய்யப்பட்டு கவரிமானின் மயிரைத் தாங்கிய வெஞ்சாமரம் வீசப்பட்டது. ஆடவரும் மகளிரும் இறைவனை வணங்கினர் என்று, தான் கண்டதை காழிப்பிள்ளையார்க்கு உரைப்பது போல் நமக்கும் உரைத்துள்ளார் திருநாவுக்கரசர். ஒரு பதிகம் முழுவதும் ஒரு திருவிழாவை மட்டுமே குறித்துப் பாடிய விழா, திருவாதிரைப் பெருவிழா மட்டும்தான். அதற்குக் காரணம் மற்ற விழாக்களில் மனிதர்கள் கலந்துகொள்வார்கள். ஆனால், ஆரூரில் நடக்கும் ஆதிரைப் பெருவிழாவில் தான் நாராயணர், நான்முகன், சூரியன், சந்திரன், இந்திரன் முதலான தேவர்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள்.

இதனை, சேந்தனார்;
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே.

- என்று பல்லாண்டு பாடுகிறார்.

ஆகவே நாவுக்கரசர் வாக்கின்படி ஆதிரை, அது வண்ணம் மிக்கதுதான்.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

Tags : Tirunavukarasar ,Thiruvadhirai festival ,
× RELATED சப்தஸ்தான விழா; சக்கராப்பள்ளி...