மார்கழி பாவை கற்று தரும் வாழ்வியல் பாடங்கள்

மார்கழி மாதம் வந்தாலே நம் நினைவிலும் நாவிலும் வந்துவிடுவாள், ஆண்டாள் எனும் பாவை. ஆண்டாளோடு அவள் பாடிக் கொடுத்த, பாடித் தொடுத்த, தொகுத்த, திருப்பாவையும் நம்முள்ளே நீக்கமற நிறைந்திடும். தம் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியின் வாயிலாக வாழ்க்கையில் நாம் கோலோச்ச பல அறிவுரைகளையும்  தந்தருளி இருக்கிறாள் ஆண்டாள் பிராட்டி.

வாழ்க்கையில் முன்னேற நாம் முதலில் என்ன செய்ய வேண்டும்? நமக்கான குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதைதான் Goal Setting என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். குறிக்கோள் என்பதே இல்லாமல் வாழ்க்கை போகிற போக்கில் நான் போய்க் கொண்டிருக்கிறேன் என்று வாழ்ந்தால், அந்த வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல், அது ஒரு சலிப்புத்தட்டும் வாழ்க்கையாகத் தானே இருக்கும்? இந்த வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை? நாம் எட்ட நினைக்கும் தூரம் என்ன? 2023-ல் நாம் சாதிக்க நினைக்கும் விஷயங்கள் என்னென்ன? இன்னும் 5 ஆண்டுகளில் எந்த அளவு நம் வாழ்க்கையின் தரத்தை நாம் உயர்த்திக் கொண்டவர்களாக இருக்கப் போகிறோம் என இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனையோ குறிக்கோள்கள் இருக்கலாம்.

அந்த குறிக்கோளை ஒவ்வொரு நாளுமே மனதில் நிறுத்தி அதற்கான பயிற்சியிலும் முயற்சியிலும் சிறிதும் தயங்காமல் இறங்குங்கள். அப்படி நீங்கள் முயற்சியைத் தொடர்ந்து செய்யும் போது, இறைவனே அதற்கான பரிசை நிச்சயம் தருவார். அந்த நம்பிக்கையோடு இந்த நிமிடமே இந்த நொடியிலேயே உங்கள் முயற்சியைத் தொடங்குங்கள். நாளை செய்ய ஆரம்பிப்போம். நல்ல நாள் பார்த்து செய்ய ஆரம்பிப்போம் என்று நம் முயற்சியை நாம் தள்ளிப் போட ஆரம்பிக்கும் போதுதான் வெற்றி என்பது எட்டாக் கனியாக மாறுகிறது.

திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே, நம் வெற்றியைத் தடுக்கக் கூடிய அந்த தள்ளிப்போடும் (procrastination) மனப்பான்மையை தள்ளிப் போட சொல்லி நமக்கு சொல்லி தருகிறாள், ஆண்டாள் நாச்சியார். ஆம். “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர்” என்று பெண்களே இந்த மார்கழி முதல் நாளே அற்புதமான நாள்தான் நாம் பாவை நோன்பு ஆரம்பிக்க. சீக்கிரமாக அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு கண்ணனை வழிபட அற்புதமான நாள் அமைந்திருக்கிறது, பாருங்கள்.

நாளை ஆரம்பிப்போம், அடுத்த வாரம் இந்த பாவைநோன்பு செய்ய ஆரம்பிப்போம் என்று சாக்கு சொல்லாமல், இன்றே இப்பொழுதே இந்த நோன்பை ஆரம்பித்து விடுவோம், என்று தன் team mates களையும் சேர்த்தே அழைக்கிறாள் அல்லவா ஆண்டாள்? நாம் நம் முயற்சியை செவ்வனே செய்யும் போது அந்த நாராயணனே நமக்குத் துணை நின்று, நம் முயற்சிக்கு வெற்றி எனும் பரிசை தருவார் என்பதைத் தானே, “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்கிறாள். தெய்வத்தின் துணையோடு, மனதில் துணிவோடு துவங்கப்படும் முயற்சிக்கு வெற்றி உண்டுதானே?

ஒரு குறிக்கோளை நோக்கி நாம் பயணப்படும்போது, அந்த குறிக்கோளை நோக்கி மட்டுமேதான் நம் எண்ணங்களும், செயல்களும் இருக்க வேண்டுமே தவிர, நம் எண்ணங்களையும், செயல்களையும், நேரத்தையும்கூட வேறு ஏதோ செய்து தேவை இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கும்போது,  நாம் நிர்ணயித்த குறிக்கோளையும், நாம் எட்ட வேண்டிய தூரத்தையும் நாம் மறந்தே போய்விடுவோம்.

அதைத் தானே தன் இரண்டாவது பாசுரத்தில், “வையத்து வாழ்வீர்காள்! என்று அழைத்து நெய்யுண்ணோம், பாலுண்ணோம் நாட்காலே நீராடி” என்கிறாள் கோதை? 10 கிலோ இறங்க வேண்டும். இந்த 2023 ல் என்பது நம் குறிக்கோள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி ஒரு குறிக்கோளை நிர்ணயித்துவிட்டு, அந்த குறிக்கோளை பற்றிய சிந்தனையே இல்லாமல், நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ அல்லது சரியான உணவுப் பயிற்சியோ இல்லாமல் இருந்தால் நம்மால் நம் எடை குறைவதற்கான லட்சியத்தை எட்டமுடியுமா? நிச்சயமாக முடியாது.

நம் குறிக்கோள் இதுதான் என்ற எண்ணம் நம்முள் சதாசர்வகாலமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்போதுதான், அந்த குறிக்கோளை எட்டுவதற்காக நாம் எதை எல்லாம் விட்டொழிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை நம்மால் கொண்டு வர முடியும். ஆண்டாள் சொல்வதைப் போல, நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்பது weight loss-ற் கான முக்கியமான வழிமுறைகள்தானே? “செய்யாதன செய்யோம்” என்று நமக்கு தேவை இல்லாத விஷயங்களை பற்றி அறிந்து கொள்வதில் நம் நேரத்தை நாம் வீணடிக்க வேண்டாமே.

குறிக்கோளை நிர்ணயித்துவிட்டோம் என்றால், அந்த குறிக்கோளை நாம் அடைய நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? அந்த குறிக்கோளை நாம் நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று தளராத நம்பிக்கை கொள்வது மற்றும் அந்த குறிக்கோளை அடைந்துவிட்டதை போல மனக்கண்களில் காண்பது. இதைத்தான், visualisation என்று சொல்வார்கள்.

உதாரணத்திற்கு, ஒரு சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது நம் குறிக்கோள் என்றால், அந்த காரை 2023 டிசம்பருக்குள்ளாக நாம் வாங்கிவிடுவது போலவும், அந்த புத்தம் புது காரை, நாம் ஓட்டுவதுபோலவும் நம் மனக்கண்ணால் நாம் பார்க்க ஆரம்பிக்கும்போது, அந்த காரை நாம் வாங்கிவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகும் என்பது உளவியல்

ரீதியாக சொல்லப்படும் ஒரு விஷயம். பகவான் கண்ணனை, தான் கரம் பிடிக்க வேண்டும் என்று குறிக்கோள் நிர்ணயிக்கிறாள், ஆண்டாள். அதற்காக முதல் படியாக மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோக்கிறாள். தன் “நாச்சியார் திருமொழியில்” அந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கும் தனக்கும் திருமணம் நடப்பதாக, visualise அல்லவா செய்கிறாள், அவள்? அதுவும் எப்படி? Detailed visualisation… சின்னச் சின்ன தகவல்களையும் சேர்த்து மனக்கண்ணில் காண்பது.

 “வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து

நாரணநம்பி  நடக்கின்றானென் எதிர்

பூரண பொற்குடம் வைத்துப்புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்”

என்று ஆயிரம் யானைகள் புடை சூழ அந்த நாராயணன் என்னை கைபிடிக்க ஜம்மென்று வருவதாக கனாக் கண்டேன் தோழி நான் என்கிறாள்.

அந்த திருமணம் என்பது எப்படி நடந்தது தெரியுமா?

“மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துணன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ! நான்”

- என்கிறாள்..

இப்படி ஆண்டாள் கண்ட கனவு, மனக்கண்ணால் கண்ட காட்சிகளும் அப்படியே நடந்தேறியதை போலவேதான், நாமும் நமக்கான, 2023க் கான குறிக்கோள்களை  தீர்மானித்து கொண்டு, அந்த குறிக்கோளில் மட்டுமே நம் சிந்தையைச் செலுத்தி, அந்த குறிக்கோளை அடைவதற்கான முயற்சிகளில் முழுமனதோடு ஈடுபடுத்திக் கொண்டு, அந்த குறிக்கோளை அடைந்து விட்டதைப் போல மனக்கண்களில் பார்க்க ஆரம்பிக்கும்போது, 2023-ஆம் ஆண்டின் இறுதியில், உறுதியாக அந்த குறிக்கோளை வெற்றிக்கரமாக அடைந்து விட்டவர்களாக மாறிப்போவோம் என்பது உறுதி. ஆண்டாள் சொல்லித் தந்த பாதையில், வெற்றிக்கரமான 2023-யை அமைத்துக்கொள்வோம்.

தொகுப்பு: நளினி சம்பத்குமார்

Related Stories: