திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருநாள்

2-1-2023

மார்கழி மாதம் என்றாலே நமக்கு இரண்டு சிறப்பான உற்சவங்கள் ஞாபகத்துக்கு வந்துவிடும். ஒன்று வைகுண்ட ஏகாதசி. இன்னொன்று ஆருத்ரா தரிசனம். வைகுண்ட ஏகாதசியின் பின்னணி, ரங்கம் முதலிய திவ்யதேசங்களில் நடைபெறும் உற்சவச் சிறப்பை காணலாம்.

அத்யயன உற்சவம்

திருவரங்கத்தில் மட்டுமல்லாது எல்லாப் பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, முன் பத்து நாட்களும், ஏகாதசிக்கு பின் பத்து நாட்களும் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்திற்கு “திரு அத்யயன உற்சவம்” என்று பெயர். இந்த உற்சவத்தின் சிறப்பைத் தெரிந்து கொண்டால்தான் வைகுண்ட ஏகாதசியின் பின்னணியை நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். மார்கழி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை தொடங்கி 20 நாட்கள் பகவானுக்கு உற்சவம் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் விதித்திருக்கின்றன. அத்யயனம் என்றால் வேத இதிகாச புராண ஸ்லோகங்களையும், ஸ்தோத்திரங்களையும் பெருமாள் முன் ஓதவேண்டும் என்று பொருள்.

மோட்ச உற்சவம்

ஏகாதசி முதல் பஞ்சமி வரை பத்து நாட்கள் நடக்கும் உற்சவத்திற்கு `மோட்ச உற்சவம்’ என்று பெயர். இதைத்தான் இப்பொழுது பகல்பத்து, இராப்பத்து என்று இரண்டு பிரிவாகப் பிரித்து நடத்துகின்றார்கள். இதன் மையப்பகுதிதான் வைகுண்ட ஏகாதசி. மார்கழி வளர்பிறை ஏகாதசிக்கு முன் பத்து நாட்கள் நடைபெறும் அத்யயன உற்சவம் பகலிலும், ஏகாதசிக்கு அடுத்து பத்து நாட்கள் நடைபெறும் மோட்ச உற்சவம் இரவிலும் நடத்தப்படுகிறது. அந்த உற்சவத்தின்போது பகவானை அதற்கான மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, வேத பாராயணம் செய்ய வேண்டும். திருமங்கையாழ்வார் காலத்திற்கு முன்புவரை இப்படித்தான் இந்த உற்சவம் நடந்துகொண்டிருந்தது.

தலைமைத்தலம் ஸ்ரீரங்கம்

ஆழ்வார்கள் மங்களாசாசனம் அருளிய வைணவத் திருத்தலங்கள் 108. அந்த 108 திவ்ய தேசங்களையும், ஒரு மரமாக உருவகித்தால், அதன் அடிமரமாக இருப்பது ஸ்ரீரங்கம். மற்ற தலங்கள் அந்த மரத்தினுடைய கிளைகளாக இருக்கின்றன. வேரில் சேர்க்கும் நீர், அடி மரத்தின் வழியாய் அதனுடைய கிளைகளுக்குச் சென்று, அந்த மரத்தைச் செழிக்கச் செய்கிறதல்லவா.

அதுபோல், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் ஒவ்வொரு விழாக்களும் மற்ற திவ்ய தேசத்தின் ஏற்றத்திற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. அதனால்தான் வைணவத்தின் தலைமை நிலையமாக ரங்கம் விளங்குகிறது. அத்தனை ஆழ்வார்களும் ஒருசேர திருவரங்கத்தைப் பாடியிருப்பதால் ‘‘பதின்மர் பாடிய பெருமாள்’’ என்று இவரை அழைக்கிறார்கள். எல்லா ஆச்சாரியர்களும் இங்கே இருந்துதான் வைணவத்தை வளர்த்தார்கள்.

மனித உடலை ஒத்த அமைப்பு

திருவரங்கக் கோயிலின் அமைப்பு மனித உடம்பின் தத்துவங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. திருவரங்கத்திற்கு ஏழு பிராகாரங்கள் உண்டு. இந்த ஏழு பிராகாரங்களும் மனிதனுடைய சப்ததாதுக்களைக் குறிக்கிறது. மனிதனின் உடலிலுள்ள ரசம், ரத்தம், சதை, நரம்பு, எலும்பு, நீர், மஜ்ஜை என்ற ஏழு தாதுக்களையும் இந்த ஏழு சுற்றுகளும் குறிப்பிடுகின்றன.

அதன் விமானம், ஓம் என்னும் பிரணவ ஸ்தானத்தில் அமைக்கப்பட்டிருப்பதால், விமானமும் (1) சப்த (7) பிாரகாரங்களும் சேர்ந்து எட்டெழுத்து மந்திரத்தைக் காட்டி கொடுப்பதாய், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் திருவரங்கமாலையில் பாடியிருக்கிறார்.

தெற்கு நோக்கி ஏன் இருக்கிறார்?

பூலோகத்தின் வடக்கே வைகுண்டம் இருக்கிறது. அவ்விடம் செல்ல வேண்டியவர்கள் வடக்கு நோக்கிப் போகவேண்டும். பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில், நாம் ரங்க விமானத்தை அடைய தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் போகும்படி வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மனித உடலின் தலைப்பக்கம் வடக்கு என்றும் பாதம் தெற்கு என்றும் சொல்கிறபடியால் மனிதனுக்கு ஒப்பான ஸ்ரீரங்கம் கோயிலும் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. தொண்டரடிப்பொடியாழ்வார் பெருமாள் தெற்குத் திசை நோக்கி சயனித்த கோலத்தை

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி,

வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி,

கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு,

உடல்எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே!

 - என்று பாடியிருக்கிறார்.

இந்த ஏழு பிராகாரங்களுக்கும் தெற்கு நோக்கியே வாசல் அமைக்கப் பட்டிருக்கின்றன. இவைகள் அர்ச்சிராதி மார்க்கமாகிய ஸுஷும்னா நாடியின் தத்துவத்தை உணர்த்து கிறது. மனித தேகத்தின் மூலாதாரத்திற்குக் கீழே உள்ள பாகத்தை உள் திருவீதியும், சித்திரைத் திருவீதியும் காட்டுகின்றன. மற்ற ஐந்து பிராகாரங்களும் சரீரத்தின் மேல் பாகத்தையும் அதிலுள்ள ஆறு ஆதாரங்களின் தத்துவங்களையும் காட்டுகின்றன என்பர்.

மார்கழி உற்சவம்தான் முக்கியம்

திருவரங்கநாதனுக்கு 365 நாட்களும் ஏதேனும் ஒரு உற்சவம் நடந்து கொண்டுதான் இருக்கும். இந்த உற்சவங்களை தினசரி உற்சவங்கள், பருவ உற்சவங்கள், மஹோத்சவங்கள், வருடாந்திர உற்சவங்கள் (ஸம்வத் ஸரோற்சவங்கள்) என்று பல வகைகளாகப் பிரித்து நடத்துவார்கள். எந்தக் கோயிலாக இருந்தாலும் பெரிய உற்சவம் என்று சொல்லப்படும் பிரம்மோற்சவம்தான் மிகச் சிறப்பான உற்சவமாகக் கருதப்படும்.

ஆனால், திருவரங்கநாதன் சந்நதியில் மார்கழி மாதத்தில் தமிழ் மொழிக்கு பிரதானமாக, ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும், திருமொழி - திருவாய்மொழி திருநாள் உற்சவம்தான் மிக முக்கியமாகக் கருதப்படும். இந்த உற்சவங்கள், பகல் பத்து, இராப்பத்து, வைகுண்ட ஏகாதசித் திருநாள் என்று அழைக்கப்படுகின்றது.

திருமங்கை ஆழ்வார்தான் காரணம்

திருவரங்கநாதர் கோயில் மிகப் பழமையானது. ஆதியில் சத்திய லோகத்தில் பிரம்மா பூஜித்தது. பிறகு இஷ்வாகு மன்னர்களின் குல தனமாக அயோத்திக்கு வந்து சேர்ந்தார். அங்கு ஸ்ரீராமரால் பூஜிக்கப்பட்டார். அதனால் வைணவ மரபில் ஸ்ரீராமரை “பெருமாள்” என்றும், திருவரங்கநாதனைப் “பெரிய பெருமாள்” என்றும் அழைக்கும் மரபு வந்தது.

ஸ்ரீராமரிடம் இருந்து பட்டாபிஷேகத்தின் போது, விபீஷண ஆழ்வார் பரிசாகப் பெற்று, இலங்கைக்கு எடுத்துச் செல்ல பிரயத்தனப்பட்டார். ஆனால், திருவரங்கநாதன் காவிரிக் கரையிலே தற்போதுள்ள இடத்தில் தங்கிவிட்டதாக கூறுகிறது தல வரலாறு. அதற்குப் பிறகு ஆழ்வார்கள் அவதரித்து, பாசுரங்களால் இறைவனைப் போற்றிப் பாடினார்கள். 12 ஆழ்வார்களில் கடைசி ஆழ்வார் திருமங்கை ஆழ்வார்தான் தற்போது உள்ள உற்சவத்திற்குக் காரணம் ஆனார்.

திருநெடுந்தாண்டகமே காரணம்

திருமங்கை ஆழ்வாருக்குத் தமக்கு முன் தோன்றிய ஆழ்வார்களின் பாசுரங்களில் ஈடுபாடு அதிகம். குறிப்பாக, நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களின் தத்துவப் பொருட்களை எப்பொழுதும் தியானித்துக்கொண்டு இருப்பார். அந்த நான்கு பிரபந்தங்கள் விளக்கமாக, ஆறு அங்கங்களை ஆறு பிரபந்தங்களாக அருளிச் செய்தார். அந்த பிரபந்தங்கள் பெரிய திருமொழி, திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம். இந்த ஆறு பிரபந்தங்களுக்கு இணையான பிரபந்தங்கள் இல்லை என்று சொல்லலாம்.

இவைகள் ஆசுகவி, சித்திரகவி, மதுரகவி, வித்தாரக்கவி என்று நால்வகை கவிகள் பாடப்பட்டதால், திருமங்கை ஆழ்வாரை நாலு கவிப்பெருமாள் என்று போற்றுவார்கள். அதில், அவர் கடைசியாக எழுதிய பிரபந்தம் திருநெடுந்தாண்டகம். இப்பொழுதுள்ள வைகுண்ட ஏகாதசி உற்சவம் தோன்றுவதற்கு, இந்தப் பிரபந்தமே காரணமாக அமைந்தது.

பெருமாளே உகந்து ஏற்ற உற்சவம்

திருவரங்கத்தில் திருக்கார்த்திகை மஹோத்சவம் நடந்து கொண்டிருந்தது. திருமங்கையாழ்வார் அன்றையதினம் அதிக உற்சாகத்துடன், தாம் இயற்றிய திருநெடுந்தாண்டகத்தை ஸ்ரீரங்கநாதனுக்கு எதிரில், தேவகானத்தில், அதிஅற்புதமாக அபிநயித்துப் பாடினார். அர்ச்சா திருமேனியில் (விக்கிரக வடிவில்) அதைச் செவி குளிரக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீரங்கநாத பெருமாள் மிகவும் மகிழ்ந்து, அர்ச் சகர் மூலம் ஆவேசித்து, ஆழ்வாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, திருமங்கை ஆழ்வார், ‘‘நம்மாழ்வார் திரு வாய்மொழியை வேத சாம்யம் கொடுத்து கேட்டு அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.

திருமங்கையாழ்வாரின் பிரார்த்தனையை ஸ்ரீரங்கநாதன் ஏற்றுக்கொண்டு, வடமொழி வேதத்திற்கு இணையாக, தமிழ் வேதத்தையும் கேட்டருள இசைந்தார். திருவரங்கப் பெருமாளே இசைந்து ஏற்றுக்கொண்ட உற்சவம்தான் இந்த வைகுண்ட ஏகாதசி உற்சவம்.

பகல்பத்து, இராப்பத்து பாடவேண்டிய பிரபந்தங்கள்

நாதமுனிகள், திருமங்கை ஆழ்வார் ஏற்படுத்திய உற்சவத்தை விரிவு செய்தார். ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம விதிப்படி, வளர்பிறை பிரதமை முதல் பகல் பத்து நாட்கள் நடக்க வேண்டிய உற்சவத்தில், எல்லா ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் சேர்த்து ஓதவைத்தார். பிரபந்தங்களை தாளத்தோடு இசையும் அபிநயமும் சேர்த்து விண்ணப்பிக்க மதுரகவிகள் ஸ்தானத்தில் இசையில் தேர்ச்சி பெற்றவர்களை, அரையர்களை நியமித்தார். பகல் பத்து என பெயர்கொண்ட முதல் 10 நாளில் கண்ணிநுண்சிறுத்தாம்பு, திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் வரை ஓதப்பட்டது.

அடுத்த பத்து நாட்களில், திருவாய்மொழி பாடி, இருபத்தி ஒன்றாம் நாள் இயற்பா பிரபந்தம் பாடி, 4000 பாசுரங்களும் இறைவன் கேட்கும்படியாக நியமித்தார் நாதமுனிகள். அவர் காலத்தில் ஆரம்பித்த இந்த உற்சவம், நடைமுறைகளை சில மாறுபாடுகளோடு ஸ்ரீராமானுஜரும், அதற்குப் பிறகு மற்ற ஆச்சாரியர்களும் பின்பற்றினர்.

உற்சவ விபரம்

மேலே சொன்ன உற்சவ அடிப்படையில் இவ்வாண்டு திருவரங்கத்தில் திருஅத்யயன உற்சவம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக 22.12.2022 வியாழக்கிழமை திருநெடுந்தாண்டகம் என்ற வைபவத்தோடு தொடங்கியது. அதற்கு அடுத்த நாள் 23.12.2022 வெள்ளிக்கிழமை முதல் பகல்பத்து ஆரம்பமாகியது.

இதில்தான் நம்மாழ்வார் பிரபந்தம் தவிர மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்கள் பகலில் ஓதப்படும். ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் நடைபெறும். அடுத்த நாள் 2.1.2023 திங்கட்கிழமை பரமபதவாசல் திறப்பு விடியல் 4.45- க்கு நடைபெறும்.

ஜனவரி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, திருக்கைத்தல சேவை நடைபெறும். அதற்கடுத்த நாள் ஜனவரி மாதம் 9-ஆம் தேதி, திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெறும். 10ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். 11 ஆம் தேதி ஸ்ரீநம்மாழ்வார் மோட்சம்

நடைபெறும்.

இப்போதே பாடு

வைகுண்ட ஏகாதசி பகல்பத்துக்கு முன் திருநெடுந்தாண்டகம் ஏன் தொடங்கப்படுகிறது என்பதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. ராமானுஜருடைய சீடர் கூரத்தாழ்வான், அவருடைய பிள்ளை பராசரபட்டர், ஸ்ரீராமானுஜரின் அபிமான புத்திரர். அப்பொழுது மேல்நாட்டில் மாதவாச்சாரியர் என்னும் ஒருவர் இருந்தார்.

அவரை வைணவ சமயத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று பட்டரை, ராமானுஜர் தம்முடைய அந்திம காலத்தில் அறிவுறுத்தி இருந்தார். சகலசாஸ்திர பண்டிதரான வேதாந்தியிடம் சாஸ்திர பிட்சை கேட்ட பட்டர், திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்தைக் கொண்டு ஜெயித்து, தமக்குச் சீடராக்கி, நஞ்சீயர் என்று பெயர் சூட்டினார்.

வாதத்தில் ஜெயித்துவிட்டு பட்டர், திருவரங்கத்திற்கு வந்த நாள் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாள். “திருநெடுந்தாண்டகம்” கொண்டு, தான் வேதாந்தியை ஜெயித்த விஷயத்தை பராசரபட்டர் பெருமாளிடம் விண்ணபிக்க, அந்த திருநெடுந்தாண்டகத்தை இப்போதே சொல்ல வேண்டும் என்று அர்ச்சகர் முகமாக பட்டரை பெருமாள் நியமிக்க, அதுமுதல் திருநெடுந்தாண்டகம் தொடக்கமே வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் தொடக்கமாக அமைந்தது.

அரையர் சேவை

திருவரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் என்பது மார்கழி மாதம் அமாவாசை இரவு நடக்கும் உற்சவம். அதற்கு அடுத்த நாள், பகல்பத்து தொடங்கும். திருக்கார்த்திகைக்குப் பிறகு இந்த உற்சவம் தொடங்கும் நாள் வரை, பெருமாளுக்கு மற்ற உற்சவங்கள் நிறுத்தப்படும். நித்ய உற்சவம் மட்டும் நடக்கும். அமாவாசையன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் யாதும் நடக்காது.

அமாவாசை அன்று சாயங்காலம் பெருமாளுக்கு மாலை சாற்றி பால், அன்னம் படையல் நடக்கும். பிறகு கர்ப்பக்கிரகம் சாத்தப்படும். சந்நதி வாசலில் திரை போடப்படும். அரையர்கள் அவர்களுக்கான பட்டு குல்லாய் தரித்துக்கொண்டு, தாளத்தோடு திருநெடுந்தாண்டகம் வியாக்கியானத்தோடு பெருமாளுக்கு முன் பாடுவார்கள். அடுத்த நாள் பகல்பத்து திருப்பல்லாண்டு தொடக்கமாகும்.

பரமபத வாசல்

தனுர் மாத வளர்பிறை ஏகாதசி அன்று காலை பரமபதவாசல் திறக்கும். இதற்கு `திருவாசல்’ என்று பெயர். ஒரு காலத்தில் மது - கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடம் இருந்து வேதத்தை அபகரித்துக் கொண்டு சென்றார்கள். திருமால் குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதரித்தார். அசுரர்களோடு சண்டையிட்டு வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். மகாவிஷ்ணுவின் திருக்கரத்தால் மரணம் தழுவும் போது, தங்களுக்கு முக்தி அளிக்குமாறு பிரார்த்தித்தனர்.

அவர்களிடம் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று பரமபதம் அளிக்கிறேன் என்று வாக்களித்தார். அதைப்போலவே மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி என்று பரமபதத்தின் வடக்குவாசல் திறந்து அவர்களைப் பரமபதத்திற்கு அழைத்துச் சென்றார் என்பது புராணக்கதை. வைகுந்த மாநகரின் வடக்கு வாசலுக்கு `பரமபதவாசல்' என்று பெயர். அந்த திருவாசல் வழியே அசுரர்களை அழைத்துச் சென்ற ஏகாதசி “வைகுண்ட ஏகாதசி”.

எல்லா கோயில்களிலும் சொர்க்கவாசல்

பெரும்பாலான கோயில்களில் வடக்குப் பகுதியில் பரமபதவாசல் இருக்கும். மற்ற நாட்களில் அந்த வடக்கு வாசல் சாத்தப்பட்டு இருக்கும். மார்கழி வளர்பிறை ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி நாளன்று அந்த வாசல் திறக்கும். இதனைச் சொர்க்கவாசல் திறப்பு என்று அழைப்பார்கள்.

அன்று யாரெல்லாம் காலையில் நீராடி எம்பெருமானை அந்த வாசல் வழியாகச் சென்று பக்தியோடு விரதமிருந்து சேவிக்கிறார்களோ, அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்க்கைக்குப் பின் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.

வைகுந்தக் கதவு திறந்த நாள்

பரமபதத்திற்கு நுழைவதற்கு முன் அசுரர்கள் பெருமானிடம், ‘‘நாங்கள் சொர்க்கவாசல் மூலமாகப் பரமபதம் செல்லும் இந்த நாளில் யாரெல்லாம் விரதம் அனுஷ்டித்து, சாதுவாக உன்னை உள்ளன்புடன் வழிபடுகிறார்களோ, அவர்களுக்கும் சொர்க்கத்தை அருளவேண்டும்’’ என்று கேட்க, பெருமாள் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் கலியுகத்தில், நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன்பு, நல்ல விஷயங்களை அனுசரித்து வைகுந்தவாசல் செல்வோர் யாருமில்லை என்பதால், அந்த வாசல் மூடியே கிடந்தது. ஆழ்வார் திருவாய்மொழி பாடியதும் பெருமாள் அவரைப் பரமபதம் அழைத்துச் சென்றார் என்பது ஐதீகம். பெருமாள் நம்மாழ்வாரை அழைத்துக் கொண்டு பரமபதம் சென்ற நாள் வைகுண்ட ஏகாதசி நாள்.

நம்மாழ்வார் மோட்சம்

வைகுண்ட ஏகாதசி இராப்பத்து திருநாள் 10 ஆம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இதற்கு அடுத்த நாள் நம்மாழ்வார் மோட்சம். வைகுண்டத்திற்குச் செல்ல விரும்பிய நம்மாழ்வாரை அர்ச்சிராதி மார்க்கத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்வு இது. வைகுண்டம் செல்லும் ஜீவாத்மா பெறும் சிறப்பினை சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லிய முறையில் இந்த உற்சவம் நடக்கும். நம்மாழ்வாரை அர்ச்சகர் சுவாமிகள் கையில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு பெருமாளிடம் போவார்கள். நம்மாழ்வாரை பெருமாள் திருவடியில் கொண்டுபோய் வைப்பார்கள்.

திருத்துழாயால் ஆழ்வார் திருமேனியை மூடிவிடுவர். அப்பொழுது, திருவாய்மொழி சாற்றுப் பாசுரங்கள் சேவிக்கப்படும். பிறகு திருவாராதனம் நடக்கும். நம்மாழ்வாருக்கு மாலை பரிவட்டம் முதலிய உபசாரங்கள் நடக்கும். பின்பு நம்மாழ்வாரை மறுபடியும் கையில் எழுந்தருளச் செய்து அவருடைய சந்நதிக்கு செல்வார்கள். இதற்குப் பிறகு இயல்பாகச் சாற்றுமுறை இருக்கிறது. இதோடு வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவு பெறும்.

ஏகாதசி அன்று என்ன செய்ய வேண்டும்?

விரதங்களில் தலையாயது ஏகாதசி விரதம். ஒரு வருடத்தில் 24 ஏகாதசி வரும். சில வருடங் களில் 25கூட வரலாம். இதற்கு `அதிக ஏகாதசி’ என்று பெயர். எது எப்படி இருந்தாலும், ஏகாதசி விரதங்களில் தலையாய விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம். அன்று நிர்ஜலமாக அதாவது தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருப்பது விசேஷமானதாகும். அப்படி இருக்க முடியாதவர்கள், அன்று லேசான (பால், பழங்களை) ஆகாரமாக உட்கொள்ளலாம்.

மறுநாள் துவாதசி காலை, பூஜை செய்து பெருமாளின் தீர்த்தத்தை சுவீகரிக்க வேண்டும். அதற்குப்பிறகு அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் முதலிய உணவுகளைச் சுத்தமாக சமைத்து பெருமாளுக்குப் படைத்துவிட்டு, உட்கொள்ள வேண்டும். இந்த, `துவாதசி பாரணை’ என்பது மிக முக்கியம். அன்று அவசியம் அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பரமபதவாசல் வழியாக பெருமாளைச் சேவிப்பது நலம்.

பாரணையில் தவிர்க்க வேண்டியவை

துவாதசி அன்று வாழைப்பூ, வாழைக்காய் போன்ற வாழை தொடர்புடைய விஷயங்களை விலக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதைப் போலவே, சில குறிப்பிட்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது. கத்தரிக்காய், புடலங்காய், பாகற்காய், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடுகு, மிளகாய், கொத்தமல்லி, புளி முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

எண்ணெயிலும், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் தவிர்த்து விட்டு, நெய் அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். அன்று அவசியம் நம்மால் இயன்றளவு தானம் செய்ய வேண்டும். அதிதி பூஜை செய்து உணவளிக்க வேண்டும். அன்றைய தினம் ஒரு பாகவதருக்கு உணவு தந்தால் அதைவிட பெரும் சிறப்பு இருக்க முடியாது. இப்படி சகல வழிகளிலும் மிகச் சிறப்புடையதாக மார்கழி மாதத்துக்கே உரிய இந்த ஏகாதசி விரதத்தை நாம் ஒவ்வொருவரும் அனுசரித்து அந்த வைகுண்ட நாதன் அருளைப் பெறுவோம்.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

Related Stories: