×

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் வைத்தமாநிதி

பெருமாள்!திருநெல்வேலி திருக்கோளூரில் அமைந்துள்ளது வைத்தமாநிதி பெருமாள் கோயில். இது நவதிருப்பதி கோயில்களில் எட்டாவது திருப்பதியாகவும். 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசம். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பெருமாள், கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் அருள்புரிந்து வருகிறார். இத்தலத்தின் தீர்த்தங்கள் குபேர மற்றும் நிதித் தீர்த்தமாகும். இறைவன் செல்வத்தை பாதுகாத்து அளந்ததால் மரக்காலையைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் காணப்படுகிறார்.

இக்கோயிலில் மூலவராக வைத்த மாநிதி பெருமாளும், அவரின் வலதுபுறத்தில் குமுதவல்லியும், இடதுபுறம் கோளூர் வல்லித்தாயாரும் அருள்கிறார்கள். இறைவன் வைத்தமாநிதிப் பெருமாள், நிட்சயபவித்ரன் போன்ற பெயருடன் அருள்பாலிக்கும் தலம் திருக்கோளூர். குபேரன், மதுரகவி ஆழ்வார் போன்றவர்களுக்கு பிரத்யட்சமாக காட்சி தந்து அருள் செய்தவர்.
ஒன்பது வகையான நவ நிதியங்களுக்கும், எண்ணிலடங்கா பெரும் செல்வத்துக்கும் அதிபதியாக திகழ்பவன் குபேரன். அவன் அளகாபுரி என்ற இடத்தில் தனது இருப்பிடத்தை அமைத்து வாழ்ந்து வந்தான். குபேரன் சிறந்த சிவ பக்தன். ஒரு சமயம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் சென்றான். அங்கு சிவனும் பார்வதியும்
குபேரனுக்கு ஒரு சேரக் காட்சி தந்தனர். மிகுந்த பக்திப் பெருக்குடன் சிவனைக் காணச் சென்ற குபேரன், தன் தாய் போன்ற பார்வதி தேவியை தீய எண்ணத்துடன் நோக்கினான்.


அச்செயலால் மனம் வெறுப்புற்ற பார்வதி தேவி, குபேரன் மீது கடும் கோபம் கொண்டாள். உடன் ஒரு கண்ணை இழக்கவும், அருவெறுப்பான உருவத்தைப் பெறவும், நவநிதியம் முழுவதையும் இழக்கவும் சாபமிட்டாள். பொருப்பாளனை இழந்த நவ நிதியங்கள், திருமாலைத் துதித்தன. காக்கும் கடவுளான நாராயணன் அந்நிதியங்களுக்கு புகலிடம் தந்து, அவற்றை அரவணைத்து பள்ளி கொண்டான். நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டதால், ‘வைத்த மாநிதிப் பெருமாள்’ என்ற பெயர் பெற்றார். நிட்சயபவித்ரன் என்றாலும் அதே பொருளாகும். நிதியங்கள் எல்லாம் இங்கு வந்து தீர்த்தத்தில் மூழ்கி தங்களைத் தூய்மைப் படுத்திக்கொண்டதால், இங்குள்ள தீர்த்தத்திற்கு ‘நிதித் தீர்த்தம்’ என்று பெயர் வழங்கப்படலாயிற்று.

குபேரன் தேவியின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டான். உமையாள், ‘இட்ட சாபத்தை, என்னால் மீளப் பெற முடியாது’ என்று கூறி, குபேரனை தாமிரபரணி நதிக் கரையில் நவ நிதியங்கள் மேல் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருமாளை வேண்ட செல்வம் திரும்பக் கிடைக்கும் என்றாள் அன்னை பார்வதி. திருக்கோளூர் வந்த குபேரன் வைத்தமாநிதிப் பெருமாள் குறித்து கடும் தவம் மேற்கொண்டான். ஒரு மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் குபேரனுக்கு பெருமாள் காட்சி கொடுத்தார்.

‘நீ நிதியங்களுக்குப் பொருப்பாளனாக இருந்தாய். உன் குரூர எண்ணத்தால் அவை உன்னை விட்டு நீங்கின. முழு செல்வமும் உடனே உன்னிடம் தர இயலாது. தரும் செல்வம் கொண்டு பணிகளைத் தொடர்ந்து வா. நீ யார் யாருக்கு இந்த செல்வங்கள் சென்று சேர வேண்டுமென்று விரும்புகின்றாயோ, அவர்களிடம் நானே நேரில் சேர்ப்பேன்’ என்றார். திருமால் தந்த பொறுப்பையும், பொருளையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பிடம் திரும்பினான் குபேரன்.

அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து இல்லாமல், எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வகையில் அவற்றை லட்சுமி தேவியிடம் பொறுப்பாக ஒப்படைத்தான். குபேரனும், தர்ம குப்தனும் மீண்டும் தங்கள் செல்வங்களைப் பெற்றது போல், மக்களும் தாங்கள் இழந்த செல்வத்தை பெறுவதற்கு, மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் வந்து குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்த மாநிதி பெருமாளை வழிபாடு செய்கின்றனர்.

கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம், அடுத்து பலிபீடம் ஆகியவற்றுடன் மகா மண்டபம், முன் மண்டபம், அர்த்த மண்டபம் அமைந்துள்ளன. பெருமாளின் தலைக்கு அடியில் நாழியும், அவரின் இடது உள்ளங்கை விண்ணை நோக்கியும், வலது கை பூமியை நோக்கியும் உள்ள கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயில் கிழக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. அனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும். மூன்று வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்து வருகின்றனர்.

கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மணமுடித்தவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் அமைதி நிலவவும், சொத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவும் வேண்டி பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். மூலவரான வைத்தமாநிதியின் கோயிலுக்கு பின்புறம் யோக நரசிம்மர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். வழக்கமாக சிவன் கோயிலில் மட்டுமே பிரதோஷம் நடைபெறும். ஆனால் எங்குமில்லாத வகையில் இந்த கோயிலில் யோக நரசிம்மருக்கு நீராஞ்சன விளக்கு ஏற்றப்பட்டு பிரதோஷ விழா நடைபெறும். மேலும் மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

புரட்டாசி சனிக்கிழமையில் வைத்த மாநிதி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிறப்பு நைவேத்தியங்கள் நடைபெறும். பக்தர்கள் பலர் தங்களால் இயன்ற பொருளுதவிகளை செய்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு பிரதோஷங்கள் வருவது வழக்கம். ஆனாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வேளைகளில் காலை, மதியம் மற்றும் இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் அனைத்து பெண்களும் தங்கள் குறைகள் தீர தவறாது கலந்து கொள்வார்கள். சிறப்பு நைவேத்தியம் செய்வதற்கான நெய் மற்றும் இதர பொருட்களை பக்தர்களே காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

மேலும் புரட்டாசி மாதத்தில் வரும் 5 சனி கிழமைகளிலும் கருடசேவை நடை பெறுவதுதான் மிகவும் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. கருட வாகனத்தில் நடைபெறும் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட் பாலிக்கும் நிகழ்வுதான் கருட சேவையாகும். இதில் உற்சவரும் இணைந்து வீதியுலா வருவது மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.

வைத்தமாநிதி பெருமாளுக்கு ஆவணி மாதம் திருவிழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி தருகிறார். இறுதிநாளான 10-ம் நாளில் தேரோட்டம் நடைபெறும். இந்த தேரோட்டத்தில் பக்தர்கள் கரகோஷங்களை எழுப்பி தேரினை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியை காண வெளி மாநிலங்களில் இருந்தும் பக்த கோடிகள் கலந்து கொள்வார்கள். நவத்திருப்பதி தலங்களில் ஒன்றான வைத்தமாநிதி பெருமாள் தலத்தில் தெப்பக்குளம் கிடையாது என்றாலும், பவித்ர உற்சவம், வசந்த உற்சவம் போன்றவை நடைபெறும். ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

இந்த உற்சவத்தின் போது வைத்தமாநிதி பெருமாளை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டு மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பதிகத்தை பக்தர்கள் பாடுவார்கள். ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் பவித்ர உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவம் 7 நாட்கள் நடைபெறும். மற்ற நாட்களில் நடைபெறாத பூஜைகள் அனைத்தும் இந்த கால கட்டத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும். மேலும் கார்த்திகை மாதம் நடைபெறும் சொக்கப்பனை விழாவில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். மார்கழி மாதத்தில் 22 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியில் கன்னிப்பெண்களும், பக்தர்களும் விரதமிருந்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபடுவார்கள்.

திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் திருநெல்வேலியிலிருந்து 37-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள பால்குளத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்தால் வருவது திருக்கோளூர். தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

Tags : Vaitamanithi ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?