×

திருவடி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பிட்ஸ்

திருவடி

வைஷ்ணவர்கள் அனுமனை திருவடி என்று அழைப்பார்கள். சிலர் சிறிய  திருவடி என்று அழைக்கின்றனர். அப்படி அழைப்பது தவறு. திருவடி என்றால்  அனுமன். பெரிய திருவடி என்றால் கருடன்.

திருவிசைநல்லூர்சத்குரு ஸ்வாமிகள்

திருவிசைநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் மிக பிரசித்தி பெற்றது. சத்குரு சுவாமிகள் வேங்கடராமன் என்கிற பெயரோடு லட்சக்கணக்கான நாமஜபம் இங்கே செய்தார். ஆஞ்சநேயர் இவருக்காக புரோகிதம் கூட செய்திருக்கிறார் என்று ஒரு செய்தி இங்கு உண்டு.

திரிநேத்ர தசபுஜ ஆஞ்சநேயர்

திருக்கடையூருக்கு கிழக்கே தரங்கம்பாடி பாதையில் திரி நேத்ர தசபுஜ ஆஞ்சனேயர் பத்து தலைகளுடன் காட்சி தருகின்றார். சிவன் விஷ்ணு பிரம்மாவோடு எல்லா தேவதைகளும் இவரிடம் ஆளுக்கு ஒரு ஆயுதத்தை கொடுத்து இராவணனுக்குப் பின்வந்த ரத்தபிந்து, ரக்தாட்சன் முதலிய அரக்கர்களை அழிக்க அனுப்பப்பட்டதாக தல வரலாறு. வரப்பிரசாதி. அமாவா சையன்று ஏராளமான கூட்டம் வரும்.

கல்லுக்குழி ஆஞ்சநேயர்

திருச்சி ரயில்வே நிலையத்தின் ரயில்வே குடியிருப்பில் அமைந்த கல்லுக்குழிஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்ற கோயில். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. ஒரு காலத்தில் இந்த ஆஞ்சநேயர் திருவுருவம் இருந்த கல்லை ரயில்வே விஸ்தரிப்பு பணிக்காக ஒரு ஆங்கிலேயர் அகற்றும் போது அதனை அகற்றவே முடியவில்லை என்றும் பிறகு அங்கே ஒரு ஆஞ்சநேயர் கோயில் கட்டினார்கள் என்றும் சொல்கிறார்கள். வேறுவிதக் கதையும்  உண்டு.

பல வருடங்களுக்கு முன்பு பயணி ஒருவரை அதிகாரி  சோதித்தபோது ஒரு மூட்டையை வைத்திருந்தார். ஆனால் அதற்கான கட்டணம் கட்டவில்லை.  அதிகாரியிடம். ‘பணத் தைக் கட்டிவிட்டு மூட்டையை வாங்கிக்கொள்கிறேன்’ என்று போனவர் வரவே இல்லை. பரிசோதகர்   மூட்டையைத் திறந்து பார்த்தபோது உள்ளே அழகாகச் சிரித்துக் கொண்டு அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி தந்தார்அனுமன். பிறகு பக்தர்கள் சேர்ந்து ஒரு கோயில் கட்டினார்கள்.அதுதான் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில். இங்கே சனிக்கிழமை வியாழக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

மருந்துவாழ் மலை

நாகர்கோவில் கன்னியாகுமரி மத்தியில் மருந்துவாழ் மலை என்று ஒரு மலை உள்ளது. அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இது என்கிறார்கள். இதில் ஏராளமான மூலிகைகளும் வேர்களும் உள்ளன. இங்குள்ள சுனைத் தண்ணீர் சுவையானது. இதில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உண்டு. இங்கேயும் ஆஞ்சநேயருக்கு ஒரு கோயில் உண்டு.

ஆஞ்சநேயலு

அனுமன் என்று நாம் அழைப்பதை, ஆந்திராவில் ஆஞ்சநேயலு என்றும், கன்னட தேசத்திலே அனுமந்தையா, அனுமந்தேவரு என்றும், மகாராஷ்டிரத்தில் மாருதி என்றும், வடநாட்டில் மகாவீர், சோனி மாருதி பிகாரி மாருதி, என்றும் அழைக்கிறார்கள்.

தொகுப்பு - அனந்தபத்மநாபன்

Tags : Thiruvadi ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ...