×

இந்த வார விசேஷங்கள்

26.12.2022 - திங்கள்
சுகங்களைத் தரும் சோம சிரவணம்

27 நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் உரிய நட்சத்திரங்கள். திரு என்கிற அடைமொழியோடு அமைந்த நட்சத்திரங்கள். அதைப்போலவே சோமன் என்கின்ற சந்திரன் இருவருக்கும் பொருந்துபவர் “பித்தா பிறைசூடி” என்று சிவபெருமானை சுந்தரர் அழைக்கின்றார். பிறைசூடிய பெருமானான அவனுக்கு, சந்திரசேகரன் என்று பெயர். அதைப் போலவே திருமாலுக்கு நாண்மதியப்பெருமாள் என்று பெயர் உண்டு. சந்திரன் பெயராலேயே தலைச்சங்க நாண்மதியம் என்கின்ற தலமும் பூம்புகாருக்கு அருகே உண்டு.  

திங்கட்கிழமையும், கார்த்திகை மாதமும் சேர்ந்தால் கார்த்திகை சோமவாரம் என்று சிவபெருமானுக்கு உரிய விரதமாகச் சொல்லுகின்றார்கள். அதைப் போலவே திங்கட்கிழமையும் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்தால், அது பெருமாளுக்கு உரிய சிறப்பான தினம் என்று கருதப்படுகிறது. சிறப்பான விரத தினமாக இதை அனுஷ்டிக்கின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனங்கள் உண்டு. ஒப்பிலியப்பன் கோயிலில் சிரவணத்திற்கு கிரிவலம் போல பிரதட்சணம் உண்டு. அன்று விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால் ‘‘திரு’’ என்று சொல்லக்கூடிய அத்தனைச் செல்வங்களும் நீங்காது நிலைத்திருக்கும்.

திங்கட்கிழமையும் திரு வோணமும் சேர்ந்த தினங்களாக ஆண்டிற்கு ஓரிரு தினங்கள் வரும். இந்த தினத்தில் விரதம் இருந்து அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலை சாற்றி பெருமாளையும் தாயாரையும் வழிபட வேண்டும். முதல்நாள் இரவு திடஉணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாற்றி தரிசித்து வரவேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.

பெருமாள் பாடல்கள், ஆழ்வார் பாசுரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தல் வேண்டும். மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு, அழகான குழந்தை பாக்கியம் கிட்டும். விரத நாள் அன்று சந்திர தோஷம் விலக மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திரதோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும்.

26.12.2022 - திங்கள்  
துக்கங்களை விரட்டும் சோம சதுர்த்தி


திதிகளில் நான்காம் திதி சதுர்த்தி திதி. அது திங்கட்கிழமையோடு இணைகின்ற பொழுது, சோம சதுர்த்தி என்ற சிறப்புப் பெயரோடு விளங்குகிறது. சதுர்த்தி திதியில் விநாயகருக்கு விரதமிருந்து அறுகம்புல் சாற்றி அப்பம், அவல், பொரி, கொழுக்கட்டை படைத்து வழிபடவேண்டும். அதன் மூலமாக எல்லாவிதமான துன்பங்களையும் அவர் களைவார். மன எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார். விநாயகர் சதுர்த்தி வழிபாடு முடிந்த கையோடு, வானத்தில் சந்திரனைப் பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அறிவாற்றல் வளர்ந்து சுபகாரியத் தடைகள் விலகும். குறிப்பாக சந்திரனும் கேதுவும் இணைந்த ஜாதகத்தில், எப்பொழுதும் சிந்தனையில் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். குழப்பமான சிந்தனைகள் நிலவும். காரியங்களை மாற்றி மாற்றி செய்து கொண்டே இருப்பார்கள். சந்திரன், கேது இணைப்பில் உள்ளவர்கள், சந்திரதசை, கேதுதிசை நடப்பவர்கள், எந்த திசை நடந்தாலும் சந்திரபுத்தி, கேது புத்தி இருப்பவர்களுக்கு, இந்த விரதம் நல்ல பலன் அளிக்கும். இதற்கு சாத்திரங்களில் 2 வழிபாடுகள் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன.

1. கேது நட்சத்திரத்துக்கு உரிய தோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு.

2. கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்றான மூலநட்சத்திரத்தில் அவதரித்து தடைகளை உடைத்த காரிய சித்தி பெற்ற ஆஞ்சநேயர் வழிபாடு.

28.12.2022 - புதன்  
துன்பம் நீக்கி நன்மை செய்யும் பிள்ளையார் நோன்பு


தொன்றுதொட்டு நகரத்தார், பிள்ளையார் நோன்பு நோற்று வருகின்றனர். ஒவ்வொரு சமூகமும் அதற்குரிய அடையாளங்களோடு சில விரதங்களையும், விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். அப்படி குறிப்பிடத்தக்க ஒரு நோன்புதான் நகரத்தாரால் கொண்டாடப்படும் பிள்ளையார் நோன்பு. கார்த்திகை மாதம், சஷ்டி திதி சதய நட்சத்திரம் கூடிய நாளில், பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கு அடுத்த நாள் ரோகிணி நட்சத்திரத்தில் இந்த நோன்பு தொடங்கி சதய நட்சத்திரம் அன்று நிறைவுபெறும். இது குறித்த செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.

நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகச் செல்வர்களாக விளங்கிய காலம். வியாபார விஷயமாக வணிகம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு கார்த்திகை தீபம் அன்று அவர்களுடைய கப்பல் கடலில் புயலில் மாட்டிக்கொண்டது. தங்கள் குலதெய்வமான மரகதப் பிள்ளையாரை நினைத்து வேண்டினர். சூறாவளியில் சிக்கினாலும் எந்த ஆபத்தும் இன்றி கப்பல் அங்குமிங்கும் தடுமாறி 21 நாள்கள் கழித்து ஒரு தீவின் கரையை அடைந்தது. அன்றைய தினம் சஷ்டி திதி சதய நட்சத்திரம். அங்கேயே அவர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் கொண்டு வந்திருந்த அரிசி மாவு, நெய், வெல்லம், முதலிய பொருள்களைக் கலந்து மாவுப் பிள்ளையார் பிடித்து, 21 நாட்களுக்கு, ஒரு நாளுக்கு ஒரு நூலாக 21 நூல்களை திரியாகத் திரித்து தீபம் ஏற்றினர்.

அதன் பிறகு, சொந்த ஊர் அடைந்து தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லி, பிள்ளையாருக்கு இனி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு 21-ஆம் நாள் சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் கூடும் நாளில், ஆவாரம்பூ அரிசிமாவு பிள்ளையாரும், புத்தம்புது வேஷ்டியில் நூலில் செய்யப்பட்ட திரியையும் கொண்டு, விளக்கு ஏற்றி வணங்குவார்கள். பிறகு அந்த மாவு பிள்ளையாரை பிரசாதமாக உண்டு மகிழ்வார்கள். இன்று, கார்த்திகை தீபத்திற்கு அடுத்த தேய்பிறை சஷ்டி, சதய நட்சத்திரம்.

30.12.2022 - வெள்ளி  
துயரங்களைத் தூளாக்கும் துர்காஷ்டமி


அஷ்டமி திதி என்பது கண்ணனுக்கும், கால பைரவருக்கும், துர்க்கைக்கும் உரியது. பொதுவாகவே அஷ்டமி திதியில் விரதமிருந்து வழிபட்டால் கஷ்டங்கள் தீரும் என்பார்கள். துர்க்கைக்கு அஷ்டமி விரதம் என்பது சாலச் சிறந்தது. துர்காஷ்டமி தினத்தில் துர்கையின் நெற்றியிலிருந்து ``சாமுண்டா’’ எனும் உக்கிர சக்தி தோன்றினாளாம். இவள், சண்டன் - முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை, இந்தத் தினத்தில் அழித்தாள். எனவே, அதீத சக்தியும் வல்லமையும் கொண்டதாகத் திகழ்கிறது இந்த துர்காஷ்டமி.

ராகு - கேது தோஷம் உள்ளவர்கள், அவசியம் அஷ்டமி நாளில் விரதம் இருக்க வேண்டும். பெரும்பாலான கோயில்களில் வடக்கு நோக்கி உள்ள துர்க்கையின் சந்நதியில் சிவப்பு வஸ்திரம் சாத்தி, சிறப்பு பூக்களால் அர்ச்சனை செய்ய, காரியத் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

31.12.2022 - சனி  
வாயிலார் நாயனார் குருபூஜை


சதாசர்வகாலமும் சிவனை நினைந்து சிவபதம் அடைந்த நாயனார், வாயிலார் நாயனார். சென்னை திருமயிலையில் அவதரித்தவர். இவரைப் பற்றிய பெரிய கதைகளும் வரலாற்று குறிப்புகளும் இல்லை என்றாலும்கூட, இவருடைய சந்நதி மயிலை கற்பகாம்பாள் சந்நதியில் உள்ளது. சுந்தரரும் சேக்கிழாரும் இவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். ``வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை எப்பொழுதும் வழங்க வேண்டும்’’ என்று அப்பர் பாடி உள்ளபடி மனதையே ஆலயம் ஆக்கிக்கொண்டு, ஞானத்தை
திருவிளக்காக்கி, ஆனந்தத்தை அவருக்கு தருகின்ற திருமஞ்சனமாக்கி, அன்பு என்கிற திரு அமுது படைத்து, பூஜை செய்தவர் வாயிலார் நாயனார். மனதில் எப்போதும் சிவசிந்தனையும், சிவபூஜையும் செய்து கொண்டு இருந்ததே இவருடைய போற்றுதலுக்கு காரணம்.

‘‘மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி,
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.’’


இவரது வழிப்பாட்டின் வலிமையை இந்தப் பாடல் உணர்த்துகிறது. இவருடைய குருபூஜை மார்கழி ரேவதி நட்சத்திரத்தில் அதாவது இன்று நடைபெறுகிறது.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?