×

மரத்தின் பெயர் சூடிய மகாதேவன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவபெருமான் பூக்களின் பெயரால் செவ்வந்தீஸ்வரர், திருமலர் உடையார், ஷெண்பகேஸ்வரர், எனப் பொலிவதைப் போலவே, மருதவாணன், ஏகாம்பரன், மாமூலன், ஆலமர் செல்வன், வேணுவனநாதன், வாக்சிசர், ஜம்புநாதர் என்று மரங்களின் பெயரால் அழைக்கப்படுகிறார். தலபுராணங்கள் அவருக்கு மரப்பெயர்கள் அமைந்திருப்பதன் காரணத்தை விளக்கமாகக் கூறுகின்றன. இந்த பகுதியில் மரப்பெயர்களால் மகிமையுடன் விளங்கும் சிவபெருமானின் திருப்பெயர்கள் சிலவற்றின் விளக்கத்தைக் கண்டு மகிழலாம்.

மருதம் - மருதவாணன்


மருதமரம், தமிழர்வாழ்வோடு இணைந்ததாகும். தமிழ் இலக்கியங்களில் ``மருதக்கலி’’ என்றொரு நூல் உள்ளது. பல தமிழ்ப் புலவர்கள் மருதன் என்ற பெயரைச் சூடியிருந்தனர். குறுங்குடி மருதன், மருதன் இளநாகனார், பெருமருதன் முதலான சங்கப் புலவர்களின் பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.சிவபெருமான் மருதமரத்தின் அடியில் வீற்றிருக்கின்றார். அதனால் மருதவாணன், மருதீசர், மருதப்பிரான் என்று அழைக்கப்படுகிறார்.

பல தலங்களில் மருதமரம் தலமரமாக உள்ளது. இந்த தலங்கள், ``மருதவனங்கள்’’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் மூன்று முக்கியமானவை. இவை மல்லிகை மருதூர் (மல்லிகார்ச்சுனம்). திரு இடை மருதூர் (மத்தியார்ச்சுனம்) திருப்புடைமருதூர் (புடார்ச்சுனம்) என்று அழைக்கப்படுகின்றன. மல்லிகார்ச்சுனம், இறைவன் பெயரால் வழங்கும் தலமாகும். இது இந்த நாளில், ``ஸ்ரீ சைலம்’’ என்று அழைக்கப்படுகிறது. இவை பாடல் பெற்ற பதிகளாகும்.

ஜோதிலிங்கமாகப் பெருமான் வீற்றிருக்குமிடம் திருவிடைமருதூர் ஆகும். புராணங்கள், இந்த பெருமானை மருதிடைத் தீங்கனி, மருதப்பொந்தில் தேன், மருதவாணன் எனப் பலவாறு போற்றுகின்றன. (ஜோதிர்லிங்கம் என்றதும் நமக்கு மகாபுராணங்களில் குறிக்கப்பட்டுள்ள பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களே நினைவுக்கு வருகின்றன. அவை தவிர காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி முதலிய மூர்த்திகளும், ஜோதிர் லிங்கங்களேயாகும். பாரததேசத்தில் அனேக இடங்களில் ஜோதிர் லிங்கங்கள் உள்ளன). மருதமரம் தலமரமாக உள்ளதால், நயினார்கோயில் என்ற தலமும் ``மருதூர்’’ என்று அழைக்கப்படுகிறது.

அர்ச்சுனேஸ்வரர்

மருதமரத்திற்கு வடமொழியில், ``அருச்சுனம்’’ என்பது பெயர். இந்த பெயரால் சிவபெருமான் அர்ச்சுனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கொங்குநாட்டில் பல தலங்களில் அர்ச்சுனேஸ்வரர் எனும் பெயரில் பெருமான் வீற்றிருக்கிறார். இவற்றில், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரம் குறிப்பிடத்தக்கதாகும்.

தொகுப்பு -அருள்ஜோதி

Tags : Mahadeva ,
× RELATED மகாதேவனின் பிரசாதங்கள்