×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

500. புராதனாய நமஹ (Puraathanaaya namaha)

(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை - ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)தினகரன் - அருள்தரும் ஆன்மிகம் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம். நம்பிக்கை நாச்சியார் நறையூர் நம்பியின் திருவருளாலும், ஆசார்யன் அனுக்கிரகத்தாலும், இந்த இதழ் நிர்வாகத்தினரின் சீரிய முயற்சிகளாலும், வாசகர்களான நீங்கள் தொடர்ந்து நல்கி வரும் அபிரிமிதமான பேராதரவாலும் அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் என்ற இத்தொடர் 500-வது திருநாமத்தை அடைந்துள்ளது. தங்களது ஆதரவைத் தொடர்ந்து நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஓர் ஊரிலே ஒரு பெரிய அமுதக் கடல் இருந்ததாம். விவசாயம் செழித்துப் பயிர்கள் விளைய வேண்டும் என்று அக்கடல் ஆசைப்பட்டது. ஆனால் கடல்நீர் நேராக வயலுக்குள் வந்தால் வயல் தாங்குமா அதனால் அக்கடல் ஒரு மேகத்தை அழைத்தது. என்னிடமிருந்து தண்ணீரை மொண்டு சென்று மழையாகப் பொழிவாய் என்றது.மேகம் அமுதை மொண்டு எடுத்துச் சென்று மழைபொழியப் பார்த்தது. ஆனால் பெருமழையாக நேரே பொழிந்தால், பெருவெள்ளம் ஆகி விடுமே என்று கருதிய மேகம், முதலில் ஒரு மலை உச்சியின்மேல் மழையைப் பொழிந்தது. அமுத மழையை உள்வாங்கிக் கொண்ட மலை, அதை இரண்டு அருவிகளாகப் பிரித்துவிட்டது.

அவ்விரண்டு நீர்வீழ்ச்சிகளும் இணையவே ஒரு பெரும் காட்டாறு உருவானது. அது ஐந்து கிளைகளாகப் பிரிந்தது. அவை ஓர் ஏரியில் போய் இணைந்தன. அந்த ஏரியில் எழுபத்து நான்கு மடுக்களை அமைத்துத் தண்ணீரை நீர்ப்பாசனத்துக்காக வயல்நோக்கித் திருப்பினார்கள். அதன் விளைவாக விவசாயம் நன்றாகச் செழித்தது.அந்த அமுதக் கடல் வேறு யாரும் அல்லர், சாட்சாத் திருமால்தான். ஜீவாத்மாக்கள்தான் நெற்பயிர்கள்.

நெற்கதிர்கள் ஓங்கி வளர்வது போல் நம் உள்ளத்தில் சரணாகதி நிஷ்டை ஓங்கி வளர வேண்டும் என்று அமுதக் கடலாகிய திருமால் விரும்பினார். ஆனால் கடலாகிய அவர் நேரே பாய்ந்தால், அவ்வளவு அருளை நம்மால் தாங்க முடியாதல்லவாஅதனால் திருமால் என்னும் அமுதக் கடல், நம்மாழ்வார் என்னும் மேகத்தை அழைத்து அவரை மழையாகப் பொழியச் சொன்னார். நம்மாழ்வார் திருமால் அருளிய அந்த உபதேசத்தையே திருவாய்மொழி என்னும் அமுத மழையாக நாதமுனிகள் என்னும் மலைக்குமேல் பொழிந்தார்.

நாதமுனிகள் என்ற மலை, உய்யக்கொண்டார் என்றும் மணக்கால்நம்பி என்றும் இரண்டு அருவிகளாக அவ்வுபதேச மழை பாயும்படிச் செய்தார். அவ்விரண்டு அருவிகளும் சேர்ந்து ஆளவந்தார் என்னும் காட்டாறாக ஆயின. அக்காட்டாறு பெரிய நம்பி, திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் என்னும் ஐந்து கிளைகளாகப் பிரிந்தது.

ஐந்து கிளைகளும் ராமானுஜர் என்னும் ஏரியில் வந்து இணைந்தன. கடல்நீரோ, மழைவெள்ளமோ, அருவியோ, காட்டாறோ விவசாயத்துக்குப் பயன்படாது. ஏரி நீரே பயன்படும். அவ்வாறு ராமானுஜர் என்னும் ஏரியின் மூலம் தான் உலகில் அனைத்து மக்களுக்கும் எல்லா நல் அர்த்தங்களும் சென்று சேரும்.எனவேதான் ராமானுஜர் என்னும் ஏரியிலிருந்து எழுபத்து நான்கு மடுக்களைப் போலே எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகள் என்னும் ஆசார்யர்கள் உருவானார்கள். ராமானுஜர் அவர்கள் மூலம் சிஷ்யர்களுக்கு அனைத்து வித உபதேசங்களும் சென்றுசேர ஏற்பாடு செய்தார். குலம், பாலினம், கல்வி, செல்வம் உள்ளிட்ட எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் ஆசையோடு வருவோர் அனைவருக்கும் உபதேசிக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கொள்கையை வலியுறுத்தினார் ராமானுஜர்.

அதன் விளைவு, உலகில் சரணாகதர்கள் என்னும் பயிர்கள் நன்றாக விளைந்தார்கள். நம் போன்ற பாமரர் வரை அனைவருக்கும் ஞானம் என்பது வந்து சேர்ந்தது. அந்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளின் வழியில் வந்த மகான்கள் இன்றளவும் எழுந்தருளி இருந்து சிஷ்யர்களைத் திருத்திப் பணிகொண்டு ராமானுஜர் திருவடிகளில் சேர்த்து வருகிறார்கள்.அவர்கள் மூலம் நாம் பெறக்கூடிய அந்த உபதேசம் என்னும் அமுதம் உண்மையில் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், திருமால் என்னும் அமுதக் கடலிலிருந்தே வந்தது. தினகரன் அருள் தரும் ஆன்மீகம் இதழ்மூலம் நாம் அறியும் இந்தப் பொருள்களும் கூட உண்மையில் அந்த அமுதக் கடலில் இருந்து வந்தவையே.

இப்படி எல்லோருக்கும் புராதனமான, பழமையான குருவாக இருந்து, நாம் பெறும் அனைத்து உபதேசங்களுக்கும் மூலக் காரணமாக இருக்கு ர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 500வது திருநாமம்.
புராதனாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானத்தையும் குருபக்தியையும் திருமால் தந்தருள்வார்.

501. சரீர பூத ப்ருதே நமஹ (Shareera Bhootha Bhruthey namaha)

காஞ்சிபுரத்தில் புண்ணியகோடி விமானத்தின் கீழே எழுந்தருளியிருக்கும் அத்திகிரி அருளாளப் பெருமாளைத் தரிசிக்கப் போனால், கருவறைக்குச் செல்லும் வழியில் இருபத்து நான்கு படிக்கட்டுகள் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதென்ன 24 படிக்கட்டுகள் காயத்திரி மந்திரத்தின் இருபத்து நான்கு எழுத்துகளே படிக்கட்டுகளாக இருப்பதாகச் சிலர் சொல்வார்கள். மற்றொரு சுவாரசியமான விளக்கமும் இதற்கு உள்ளது.

இவ்வுலகில் ஜடத் தத்துவங்கள், அல்லது அசேதனத் தத்துவங்களின் எண்ணிக்கை 24. நிலம் நீர் காற்று நெருப்பு வானம் ஆகிய பஞ்ச பூதங்கள், பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் தொடுதல் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள், மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலன்கள், நாக்கு கை கால் மலத்துவாரம் ஜலத்துவாரம் ஆகிய ஐங்கருவிகள், மனம், அகங்காரம், மஹத் தத்துவம், உலகின் மூலப்பொருளான மூல பிரகிருதி ஆகியவையே அந்த 24 அசேதனத் தத்துவங்கள். இவைகள் எதற்குமே ஞானம் கிடையாது.

இவற்றுக்கு மேல் உள்ள 25-ம் தத்துவம் சேதனனாகிய ஜீவாத்மா. ஜீவாத்மாக்கள் அனைவருக்குமே அறியும் தன்மை உண்டு. இவை அனைத்துக்கும் மேல் 26-ம் தத்துவமாக இருந்து இவற்றை இயக்கி ஆள்பவன் பரமாத்மா. அவன் பரமசேதனன்.அத்திகிரி மலையில் உள்ள 24 படிக்கட்டுகள் 24 ஜடத் தத்துவங்களைக் குறிக்கின்றன. அதன்மேல் நடந்து போகும் நாம் 25-ம் தத்துவமாகிய ஜீவாத்மாக்கள். உள்ளே போய் தரிசிக்கும் அத்திகிரி அருளாளப் பெருமாள் 26-ம் தத்துவமான பரமாத்மா ஆவார். ஒரு ஜீவாத்மா 24 ஜடத் தத்துவங்களைக் கடந்து பரமாத்மாவை அடைவதைக் குறிப்பதுதான் நாம் காஞ்சியில் நாம் பெறும் தரிசனம்.

அது மட்டும் இல்லாமல், இந்த இருபத்துநான்கு அசேதனத் தத்துவங்களையும் இருபத்தைந்தாம் தத்துவமாகிய ஜீவாத்மாவையும் எப்போதும் தன் திருமேனியிலேயே அத்திகிரி அருளாளர் தாங்கியிருக்கிறார். அவர் திருமேனியில் இன்றும் நாம் காணலாம். இதை சுவாமி வேதாந்த தேசிகன் அழகாக விளக்கியுள்ளார்.

புருடன் மணிவரம் ஆகப் பொன்றா மூலப்
பிரகிருதி மறுவாக மான் தண்டாக
தெருள் மருள் வாள் உறையாக ஆங்காரங்கள்
சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக
இருபூதமாலை வனமாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம்
கண்ணன் கரிகிரி மேல் நின்று அனைத்தும்
காக்கின்றானே.


அத்திகிரி அருளாளர் திருமார்பில் அணிந்திருக்கும் கௌஸ்துப மணி தான் ஜீவாத்மாவுக்குப் பிரதிநிதி. மூலப் பிரகிருதிக்குப் பிரதிநிதியாகத் திருமார்பில் உள்ள ஸ்ரீவத்சம் என்னும் மறு. மஹத் தத்துவத்தின் பிரதிநிதியாகக் கௌமோதகி என்னும் கதை. நந்தகம் என்னும் வாள் ஞானத்தையும் அதன் உறை அஞ்ஞானத்தையும் குறிக்கின்றன.

மனத்தின் வடிவம் தான் சுதர்சனச் சக்கரம். ஐம்புலன்களையும் ஐங்கருவிகளையும் அம்பறாத் தூணியில் உள்ள அம்புகளாகத் தாங்கி இருக்கிறார். அகங்காரம் சார்ங்க வில்லாகவும் பாஞ்சசன்னியச் சங்காகவும் இரண்டு வடிவங்களில் உள்ளது. ஐம்பூதங்களும் ஐந்துவிதச் செயல்களும் கழுத்தில் அணிந்திருக்கும் வனமாலையாக உள்ளன. அவரது வாகனமாகிய கருடன் வேத வடிவமாக விளங்குகிறார்.

இப்படி அனைத்து விதத் தத்துவங்களையும் தன் சரீரமாகக்கொண்டு அவற்றைத் தாங்கியிருப்பதால், திருமால் சரீரபூத ப்ருத் என்று அழைக்கப்படுகிறார். சரீரம் என்றால் உடல் என்று பொருள். பூத என்பது இங்கே அசேதன மற்றும் சேதனத் தத்துவங்களைக் குறிக்கிறது. ப்ருத் என்றால் தாங்குபவர் என்று பொருள்.உலகில் உள்ள அனைத்துத் தத்துவங்களையும் தனக்குச் சரீரமாகக் கொண்டு அவற்றைத் தாங்கியிருப்பவர் சரீரபூதப்ருத். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 501-வது திருநாமம். சரீரபூதப்ருதே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தனது நெஞ்சுக்கு இனியவர்களாகக் கொண்டு, தாங்கிப் பிடித்துக் காத்தருள்வார் என்பதில் ஐயமில்லை.

502. போக்த்ரே நமஹ (Bhokthrey namaha)

தமது பரமாசார்யரான ஆளவந்தாரைத் தரிசிக்கப் பெரிய நம்பிகளோடு திருவரங்கத்துக்கு விரைந்தார் ராமானுஜர். ஆனால் ராமானுஜர் வருவதற்குள் ஆளவந்தார் பரம பதத்தை அடைந்துவிட்டார். ஆசார்யனைப் பிரிந்து துயரால் பலவாறு வாடி வருந்தினார் ராமானுஜர். பெரிய நம்பிகள் உள்ளிட்டோர் ஒருவாறு அவரைத் தேற்றினார்கள்.அதன்பின் ஆளவந்தாரின் சரமத் திருமேனியைத் திருவடி முதல் திருமுடி வரை உற்று நோக்கினார் ராமானுஜர். ஆளவந்தாரின் வலக்கரத்தில் மூன்று விரல்கள் மடங்கி இருப்பதைக் கண்டார். அதற்கு முன்பு அப்படி மடங்கி இருந்ததில்லை என்று சுற்றி இருந்தவர்களும் வியந்து கூறினார்கள். அப்படியானால் ஆளவந்தாருக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதேனும் உண்டா என்று விசாரித்தார் ராமானுஜர்.

1. வேத வியாசர், பராசர முனிவர் ஆகியோரின் பெயர்களைக் கொண்ட இரண்டு ஆசார்யர்களை உருவாக்க வேண்டும்.

2. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரையை உருவாக்க வேண்டும்.

3. போதாயன முனிவர் இயற்றிய விருத்தி நூலின் அடிப்படையில் வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கவுரை எழுத வேண்டும்.

ஆகிய இம்மூன்றுமே ஆளவந்தாரின் ஆசைகள் என்று சிஷ்யர்கள் தெரிவித்தார்கள். இந்த வரிசையை மாற்றியும் சொல்வதுண்டு, எப்படிக் கொண்டாலும் மூன்று ஆசைகளில் மாற்றமில்லை. இம்மூன்றையும் நிறைவேற்றியே தீருவேன் என்று ராமானுஜர் சபதம் செய்தவாறே மடங்கியிருந்த விரல்கள் மீண்டும் நீண்டுவிட்டன. கூரத்தாழ்வானின் இரு மகன்களுக்குப் பராசர பட்டர், வேதவியாச பட்டர் என்று பெயர்சூட்டி முதல் ஆசையை நிறைவேற்றினார் ராமானுஜர்.

திருக்குருகைப் பிரான் பிள்ளான் மூலம் ஆறாயிரப்படி என்ற திருவாய்மொழி விளக்கவுரையை உருவாக்கி இரண்டாம் ஆசையை நிறைவேற்றினார் ராமானுஜர். மூன்றாவது ஆசையின்படி பிரம்ம சூத்திர விளக்கவுரை எழுத, முதல்நூலான போதாயன விருத்தி என்ற நூலைத் தேடிக் காஷ்மீர் சாரதா பீடத்துக்குத் தம் சீடர் கூரத்தாழ்வானுடன் சென்றார் ராமானுஜர்.

அங்குள்ள பண்டிதர்கள் அவ்வளவு எளிதில் அந்த நூலைத் தருவதாக இல்லை. அவர்கள் அத்தனை பேரோடும் வாதம் செய்து அவர்களை வென்று போதாயன விருத்தி நூலைப் பெற்றார் ராமானுஜர்.அதைத் தமது இருப்பிடத்துக்கு எடுத்து வந்து நான்கு அத்தியாயங்களுள் ஓர் அத்தியாயத்தை மட்டும் முழுமையாகப் படித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டார் ராமானுஜர். மறுநாள் காலை காஷ்மீர் பண்டிதர்கள் வந்து இனி நூல் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பறித்துச் சென்று விட்டார்கள். அடடா இன்னும் மூன்று அத்தியாயங்களை நாம் படிக்கவில்லையே என்று ராமானுஜர் வருந்தியபோது, சீடர் கூரத்தாழ்வான், குருவே அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்.

உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு செயல் செய்துவிட்டேன். இரவு நீங்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் மொத்த போதாயன விருத்தியையும் படித்து மனப்பாடம் செய்துவிட்டேன். அவற்றை இங்கே ஒப்பிக்கட்டுமா அல்லது இரு காவிரிக்கு மத்தியில் திருவரங்கத்தில் வந்து ஒப்பிக்கட்டுமா என்று கேட்டார்.ஆஹா இப்படி ஒரு சிஷ்யன் கிடைக்க என்ன தவம் செய்தேனோ என்று மனம் மகிழ்ந்த ராமானுஜர் கூரத்தாழ்வானோடு திருவரங்கம் திரும்பினார். அவரது உதவியோடு பிரம்ம சூத்திர விளக்கவுரையை எழுதி நிறைவு செய்தார்.

பின்னாளில் ராமானுஜர் காஷ்மீர் யாத்திரை சென்றபோது, காஷ்மீர் சாரதா பீடத்தில் உள்ள சரஸ்வதி தேவி ராமானுஜரின் பிரம்ம சூத்திர விளக்கவுரையைப் பார்த்துவிட்டு, ஆஹா எனக்குக் குருவாய் விளங்கும் ஹயக்ரீவப் பெருமாளே இதில் தெரிகிறாரே என்று சொல்லி வியந்து தான் பூஜிக்கும் ஹயக்ரீவர் திருவடிகளில் அந்த நூலை அர்ப்பணித்தார்.

அதன்பின் அதை முழுமையாகப் படித்து விட்டு, இனி இது ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்படும் என்று கொண்டாடினார் சரஸ்வதி. தான் அதுவரை பூஜித்து வந்த ஹயக்ரீவ விக்கிரகத்தை ராமானுஜருக்கு அளித்தார் சரஸ்வதி. அதன்பின் ராமானுஜரின் அந்நூலுக்கு ஸ்ரீபாஷ்யம் என்றும், ராமானுஜருக்கு ஸ்ரீபாஷ்யகாரர் என்றும் பெயர் ஏற்பட்டது.வேதங்களை வழங்கிய பிரம்மாவுக்கும் கல்விக்குத் தலைவியான சரஸ்வதிக்கும் என அத்தனை பேருக்கும் குருவாக விளங்குபவர் ஹயக்ரீவர். எனவேதான் தேவர்கள் எந்த ஒரு பொருளைத் தாங்கள் பெற்றாலும் தங்களுக்கெல்லாம் குருவான ஹயக்ரீவருக்கு முதலில் அதை அர்ப்பணித்துவிட்டு அதன்பின் தான் தாங்கள் எடுத்துக் கொள்வார்களாம்.

எனவே தேவர்களுள் யாருக்கு எதை அர்ப்பணித்தாலும், அது ஹயக்ரீவருக்கு முதலில் போய்ச் சேர்கிறது. அவர் முதலில் அனுபவிக்கிறார். அவரது பிரசாதமாகவே தேவர்கள் அதன்பின் அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் நாம் சமர்ப்பிக்கும் அனைத்தையும் அனுபவித்து மகிழ்பவர் - போக்தா என்று ஹயக்ரீவர் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 502-வது திருநாமம்.போக்த்ரே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் குறையாத ஞானம் நிறைந்து பாரோர் புகழ விளங்கும்படி ஹயக்ரீவர் அருள்புரிவார்.

503. கபீந்த்ராய நமஹ (Kapeendhraaya namaha)


ஹயக்ரீவராகத் தான் உபதேசித்த வேத தருமங்களைத் தானே ராமனாக அவதரித்துத் திருமால் பின்பற்றிக் காட்டினார் என்பதை உணர்த்தவே மீண்டும் ஒருமுறை ராமனின் பெருமைகள் இங்கே ஹயக்ரீவரைத் தொடர்ந்து சொல்லப்படுகின்றன.கம்பராமாயணம் பால காண்டத்தில் வரும் காட்சி. தேவர்கள் அனைவரும் மேரு மலையில் உள்ள ஒரு மண்டபத்திலே ஒன்று கூடினார்கள். பிரம்மாவைப் பார்த்து, பிரம்மதேவரே ராவணன் போன்ற அரக்கர்களாலே நாங்கள் மிகவும் துன்புறுகிறோம்.

அவர்களிடம் இருந்து எங்களை நீங்கள்தான் காக்க வேண்டும் என்று வேண்டினார்கள். அப்போது பிரம்மா, நம் அனைவரையும் அரக்கர்களிடம் இருந்து காக்க வேண்டும் என்றால் அது திருமாலால் தான் முடியும். வாருங்கள், திருமாலைத் தியானிப்போம் என்றார். அதன்படி எல்லோரும் திருமாலைத் தியானிக்க, கருட வாகனத்தில் திருமால் அவர்கள் முன்னே தோன்றினார்.

கருமுகில் தாமரை நல்காடு பூத்து நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏந்தலர்த்
திருவொடும் பொலிய ஓர் செம்பொன்
குன்றின்மேல் வருவதுபோல் கலுழன்மேல்
வந்து தோன்றினான்


என்று வர்ணிக்கிறார் கம்பர். நீருண்ட கார்மேகத்தில் தாமரைக் காடு பூத்து, அம்மேகம் சூரிய சந்திரர்களை ஏந்தியபடி மின்னலை உள்ளடக்கி, தங்கமலை மேல் வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் திருமால் தோன்றினார் என்கிறார் கம்பர்.அதாவது, திருமாலின் கார்வண்ணத் திருமேனி கார்மேகம். அவரது திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் தாமரைக் காடு போல் விளங்குகின்றன. அவர் ஏந்தியிருக்கும் சங்கு சக்கரங்கள் சந்திர சூரியர்களைப் போல் இருக்கின்றன. திருமார்பில் உள்ள பிராட்டி மின்னலாய் ஒளிவீசுகிறாள். வாகனமான கருடன் பொன்மலை போல் விளங்குகிறார்.

இக்காட்சி வால்மீகி ராமாயணத்தில் வேறுமாதிரி இருக்கிறதே என்ற சிந்தனையில் ஆழ்ந்து விட்டால், இந்த அரிய காட்சியில் உள்ள இறைவனின் அழகையும் இலக்கியச் சுவையையும் இழக்க நேரிடும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.இப்படித் தோன்றிய திருமாலிடம் தேவர்கள் ராவணன் போன்ற அரக்கர்களிடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினார்கள். அப்போது அவர்களிடம் திருமால், நீங்கள் அஞ்சவேண்டாம், நான் பூமியில் அவதாரம் செய்து ராவணனையும் அவனது அரக்கர் கூட்டத்தையும் கூண்டோடு அழிப்பேன் என்று வாக்களித்தார்.

மேலும், தேவனாலோ யட்சனாலோ கந்தருவனாலோ சித்தனாலோ சாரணனாலோ கிம்புருஷனாலோ அசுரனாலோ அரக்கனாலோ தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம்பெற்ற ராவணன், மனிதன் மிருகம் இருவரையும் அலட்சியத்தால் விட்டுவிட்டான். ராவணனின் மரணத்துக்குக் குரங்குகளும் ஒரு காரணமாகும் என்று நந்தி சாபம் கொடுத்திருக்கிறார்.

எனவே, தேவர்களே, நான் தசரதன் மகனாக - மனிதனாக - அவதரிக்கிறேன். என் படுக்கையான ஆதிசேஷன் லட்சுமணனாகவும், சக்கரம் பரதனாகவும், சங்கு சத்ருக்கனனாகவும் தோன்றுவார்கள். வானவர்களான நீங்கள் வானரங்களாக வந்து பூமியில் பிறப்பீர்களாக. ராவணனை முடித்து விடலாம் என்றார் திருமால். அதன்படி, தேவர்களுள் இந்திரன் வாலியாகவும் அங்கதனாகவும் தோன்றினான். சூரியன் சுக்ரீவனாகவும், அக்னி நீலனாகவும், வாயுவும் சிவனும் அனுமனாகவும் தோன்றினார்கள்.

அச்வினி தேவர்கள் மைந்தன் துவிவிதன் என்ற வானரர்களாகத் தோன்றினார்கள். திருமாலின் அவதாரமாகிய ஸ்ரீராமன், இந்த வானரர்களுக்கு எல்லாம் தலைவனாக இருந்து அவர்களை வழிநடத்திச் சென்று ராவணனை வதைத்து, அவர்களுக்கு விடுதலை அளித்தான்.

ராவண வதம் நிறைவடைந்தவாறே, தேவர்கள் எல்லோரும் வானில் தோன்றி ராமனைத் துதித்தார்கள். அப்போது,

ஸர்வலோகேச்வரஸ் ஸாக்ஷாத் லோகானாம் ஹிதகாம்யயா
ஸர்வை: பரிவ்ருதோ தேவைர் வானரத்வம் உபாகதை:

என்று பிரம்மா துதிப்பதாக வால்மீகி தெரிவிக்கிறார்.

அனைத்துலகையும் ஆளும் திருமாலே, வானர வடிவில் தேவர்கள் புடைசூழ வந்து நீங்கள் அரக்கர்களை அழித்தொழித்தீர்கள் என்று துதிக்கிறார் பிரம்மா. இப்படி வானரர்களாக வந்த வானரர்களுக்குத் தலைவராக ராமன் விளங்குவதாலே, கபீந்த்ர: என்று ராமன் அழைக்கப்படுகிறார். கபி என்றால் வானரம் அல்லது குரங்கு. இந்த்ர என்றால் தலைவர். கபீந்த்ர: என்றால் வானரங்களின் தலைவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 503-வது திருநாமம்.கபீந்த்ராய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் எல்லாக் குறைகளையும் ராமன் போக்கி அருள்வார்.

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Anantan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!