×

குலோத்துங்கச் சோழனின் ஆட்சியில் என்ன தண்டனை தெரியுமா?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மூன்றாவது குலோத்துங்கச் சோழன் ஆட்சிக் காலத்தின்போது (கி.பி.1178-1215). ஒரு வழக்கில் குற்றவாளிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது மான் வேட்டை ஆடும்பொழுது வேட்டைக்காரன் தவறுதலாக ஒரு மனிதனைக் கொன்றுவிட்டான். அக்கொலைக் குற்றத்துக்காக அவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத் தொகையினின்று கோயிலில் எப்பொழுதும் அணையாத நந்தா விளக்கு ஏற்றி வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இறந்துபோனவனுடைய ஆவியினால் கொலை செய்தவனுக்கு ஏற்படும் தீங்குகளினின்றும் அவனைக் காக்க வேண்டி இத்தகைய விளக்கேற்றிப் பாவ நிவாரணம் பெறுவதற்காக இத்தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தெய்வ உருவங்களுக்கு முன் ஆரத்தி சுற்றும் சமயச் சடங்குகளில் உபயோகப்படும் விளக்கு களுக்கும் இந்தப் பாவை விளக்குகளுக்கும் வேற்றுமைகள் உண்டு. தெய்வச் சிலைகளுக்கு முன்பாகத் தங்களின் உருவம் தீட்டிய பாவை விளக்குகளை வைத்து மூர்த்திகளின் அருகே விளக்கேந்தி நிற்பது பெரும் புண்ணியம் என்றே இந்த விளக்குக் காணிக்கைகள் அளிக்கப்பட்டன. இறைவனின் அருகில் பாவைவிளக்கை வைப்பதால் இறைவன் இவ்விளக்கைச் செய்து வைத்தவரே தமக்குத் திருத்தொண்டாற்றுவதாக எண்ணி இன்பம் தருவான், ஈடேற்றம் அளிப்பான் என்ற எண்ணங்களின் பலனாகவே பாவை விளக்குக் காணிக்கைகள் மல்கின.

இருளை யோட்டிப் பொருளைக் காட்டும் அரிய கருவி. அற்புதமான சிற்பச் சிறப்புப் பொங்க இன்பம் அளிக்கும் மங்கலப்பொருள்.எனவே, பண்டைக் காலத் தமிழர்கள் கோயில்களுக்கு இரவு பகலாக ஒளிவிட்டோங்கும் வாடாமணி விளக்கை, மங்காமணி விளக்கை, நந்தாப் பொன்விளக்கை, தூண்டா மணிவிளக்கை, குன்றாத குத்துவிளக்கை, பங்கயப் பாவை விளக்கையெல்லாம் காணிக்கையாக அளித்தார்கள். இவ்விளக்குகளுக்கு நெய் வார்ப்பதற்காக அவரவர்கள் சக்திக்கு ஏற்றவாறு ஆடுமாடுகளையும் அவைகள் மேய்வதற்காக நஞ்சை புஞ்சை நிலங்களையும் மானியங்களாக அளித்தனர். அவைகளை இன்று நாம் கல்வெட்டுகள் மூலமாகவும் செப்பேடுகள் மூலமாகவும் நன்கறிகிறோம்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

Tags : Kulothunga Chola ,
× RELATED சாத்தூர் அருகே மூன்றாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு