×

ராமேஸ்வரத்தில் ஆன்மீக கதா நிகழ்ச்சிக்காக வடமாநிலத்தவர் மொத்தமாக ‘புக்கிங்’ சாதாரண பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் சிரமம்-20 சதவீதம் அறைகளாவது புக்கிங் செய்யாமல் வைத்திருக்க கோரிக்கை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் வடமாநிலத்தவரின் ஆன்மீக கதா நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் இங்குள்ள தங்கும் விடுதிகளில் அனைத்து அறைகளும் புக்கிங் செய்யப்படுவதால் அன்றாடம் சுற்றுலா வரும் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.இந்துக்களின் புனித ஸ்தலமாகவும், தேசிய சுற்றுலா தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் இங்குள்ள பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஊர் திரும்புகின்றனர். ரயில், பஸ், கார் மற்றும் வேன்களில் வரும் சுற்றுலா பயணிகளில் 80 சதவீதத்தினர் இங்குள்ள தங்கும் விடுதிகளில் வசதிக்கு தகுந்தாற்போல் வாடகைக்கு அறைகள் எடுத்து குடும்பத்துடன் தங்குகின்றனர். இவர்கள் தங்கிச்செல்வதற்கு வசதியாக பல்வேறு கட்டணங்களில் அரசு, கோயில் நிர்வாகம் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஆனால் சமீப காலமாக ராமேஸ்வரத்தில் வடமாநிலத்தவர்களால் பல நாட்கள் நடத்தப்படும் ஆன்மீக கதா நிகழ்ச்சிகளால் அன்றாடம் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆன்மீக கதா நிகழ்ச்சி நடத்துபவர்கள் இங்குள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் இருக்கும் அனைத்து அறைகளையும் பல நாட்களுக்கு வாடகை கட்டணம் செலுத்தி மொத்தமாக புக்கிங் செய்து விடுகின்றனர். இதனால் இங்குள்ள நிலை அறியாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் ராமேஸ்வரம் வருபவர்கள் வேறு வழியின்றி வாகனத்திற்குள்ளேயே முடங்கிக் கொள்கின்றனர். ரயில், பஸ்களில் வருபவர்கள் கோயிலை சுற்றி சாலையோரம், தீர்த்த கடற்கரை, ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். எனவே தங்கும் விடுதிகளில் ஒரே நேரத்தில் ஒரே குழுவினருக்கு குறித்த நாட்களுக்கு அனைத்து அறைகளையும் புக்கிங் செய்யக்கூடாது. அன்றாடம் வந்து செல்லும் பக்தர்கள் நலன் கருதி குறைந்தது 20 சதவீதம் அறைகளாவது மற்றவர்களுக்காக புக்கிங் செய்யாமல் வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.பக்தர்கள் கூறுகையில், ‘‘ஆன்மீக கதா நிகழ்ச்சிக்காக மொத்தமாக பல மாதங்களுக்கு முன்பாகவே அறைகளை முன்பதிவு செய்து விடுகின்றனர். இதனால் குறிப்பிட்ட நாட்களில் ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லாமல் வாடகைக்கு விடப்படும் தனியார் வீடுகளில் அதிகப் பணம் கொடுத்து தங்கிச்செல்லும் சூழ்நிலை உள்ளது. மேலும் திருவிழா காலங்கள், பள்ளி, கல்லூரி பருவகால விடுமுறை நாட்களில் பிள்ளைகளுடன் குடும்பமாக வரும் பக்தர்கள், பயணிகள் தங்கிச்செல்ல இடம் கிடைக்காமல் திண்டாடுவதுடன் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இந்த நிலையை தவிர்க்க ராமேஸ்வரத்திற்கு அன்றாடம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி தங்கும் விடுதிகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்படாமல் குறிப்பிட்ட அறைகளை அன்றாடம் வரும் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.பூட்டி கிடக்கும் அறைகள் மீண்டும் திறக்கப்படுமா?ராமேஸ்வரம் கோயிலை சுற்றி கோயில் இடத்தில் தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பல தங்கும் விடுதிகளும், காட்டேஜ்களும் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த நிலையில் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் பல ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 200க்கும் மேற்பட்ட அறைகள் பக்தர்களுக்கு பயன்படாமல் உள்ளது. இந்த நிலையால் ரயில், பேருந்துகளில் ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அறைகளில் தங்கிச்செல்லும் வாய்ப்பு பறிபோயுள்ளது. மேலும் கோயில் நிர்வாகத்தினால் ராமேஸ்வரம் நகருக்கு வெளியில் பல கோடி செலவில் கட்டி திறக்கப்பட்டுள்ள யாத்திரை நிவாஸ் பயணியர் தங்கும் விடுதியும் கோயில் பகுதியிலிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ளதால் காரில் வரும் வசதி படைத்தவர்கள் மட்டுமே தங்கும் நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய பக்தர்கள் தங்கிச்செல்லும் வசதி இங்கு இல்லாமல் போய்விட்டது….

The post ராமேஸ்வரத்தில் ஆன்மீக கதா நிகழ்ச்சிக்காக வடமாநிலத்தவர் மொத்தமாக ‘புக்கிங்’ சாதாரண பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் சிரமம்-20 சதவீதம் அறைகளாவது புக்கிங் செய்யாமல் வைத்திருக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,
× RELATED ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆனி...