×

பாதுகாப்புத்துறை பணியாளர் தேர்வில் முறைகேடு: ப்ளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதிய 29 மாணவர்கள் கைது

சென்னை : வசூல்ராஜா MBBS படத்தில் ப்ளூடூத் பயன்படுத்தி கமலஹாசன் தேர்வெழுதுவது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கும். அதே பாணியில் சென்னையிலும் பாதுகாப்புத்துறை தேர்வில் ப்ளூடூத் பயன்படுத்திய 29 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ பப்ளிக் பள்ளியில் நேற்று பாதுகாப்புத்துறையின் C பிரிவு பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. கார்பெண்டர், சமையலர், காவலாளி, மெசேஜர் போன்ற பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய இந்த தேர்வு நடைபெற்றது. சென்னை மையத்தில் மட்டும் 1728 பேர் தேர்வு எழுதினார்கள். நேற்று காலை 8 மணி முதல் மாலை 5.30 வரை தேர்வு நடைபெற்றது. ஆங்கிலம், பொதுஅறிவு உள்ளிட்ட பிரிவுகளில் 150 மதிப்பெண்களுக்கு காலை, மாலை என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது. அப்போது அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 28 இளைஞர்கள் சிறிய அளவிலான ப்ளூடூத் கருவிகளை பயன்படுத்தி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு மையத்துக்கு வெளியே நின்ற நபர் மூலம் ப்ளூடூத் உதவியுடன் விடைகளை அறிந்து எழுதியவர்கள் கையும், களவுமாக சிக்கினர். அதேபோல் சஞ்சய் என்பவருக்கு பதில் வினோத் சுக்ரா என்பவரை வைத்து ஆள்மாறாட்டம் நடந்ததையும் தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர். கையும், களவுமாக மாணவர்கள் பிடிபட்டதால் தேர்வு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முறைகேடு செய்த மாணவர்களும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் வரவேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தினர். பொதுவாக, தேர்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவது உண்டு. ஆனால், அரியானா மாநில மாணவர்கள் அனைவரும் உடனே காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டது ஏன் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தேர்வுக்காக சென்னையை தேர்வு செய்தது ஏன், அவர்களின் மோசடிக்கு துணை போனவர்கள் யார் யார் எனவும், அவர்களும் சிக்குவார்களா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான தேர்வில் ப்ளூடூத் பயன்படுத்தியும் ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வெழுதிய சிக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சென்னை பல்கலைக்கழகத்தில் தொலை நிலை கல்வி பிரிவு நடத்திய ஆன்லைன் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து, பல்கலைக்கழகத்தின் சட்ட பிரிவு இயக்குனர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. அப்போது 116 பேர் போலி மாணவர்களாக தேர்வெழுதி ஆள் பாஸ் முறையில் பட்டம் பெற முயன்றதும், இதற்கு பல்கலைக்கழக ஊழியர்கள் லஞ்சம் பெற்று உடந்தையாக இருந்ததும் உறுதியானது. இதையடுத்து மோசடியில் தொடர்புடைய உதவி பதிவாளர்கள் தமிழ்வாணன், மோகன்குமார், உதவி பிரிவு அதிகாரிகள் எழிலரசி, சாந்தகுமார் உதவியாளர் ஜான்வெஸ்டின் ஆகியோர் 5 பேரை துணை வேந்தர் கௌரி சஸ்பேண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது….

The post பாதுகாப்புத்துறை பணியாளர் தேர்வில் முறைகேடு: ப்ளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதிய 29 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vasulraja ,MBBS ,Kamalahaasan ,
× RELATED நீட் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு