×

வராக மூர்த்தி தரிசனம்..வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் தரும் ஏழுமலையான் வழிபாடு..!!

வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களையெல்லாம் தந்தருளும் ஒப்பற்ற தெய்வம் ஏழுமலையான் வேங்கடாசலாபதி. திருப்பதிக்குச் சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்பது ஐதீகம். தன்னை நாடி வரும் பக்தர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் வேண்டுகோள் இருந்தாலும் அவர்களின் எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் வேங்கடவன். நினைத்ததையெல்லாம் ஈடேற்றிக் கொடுப்பார் ஏழுமலையான்.

திருவேங்கடத்தானை, திருப்பம் தரும் ஏழுமலையானை வணங்குவதற்காக, தரிசிப்பதற்காக, எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வருகிறார்கள். பெரும்பாலான பக்தர்கள், திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசித்துவிட்டு பின்னர் மற்ற தெய்வங்களை வணங்கிச் செல்கின்றனர். ஆனால், முதலில் ஸ்ரீவராக மூர்த்தியைத்தான் வணங்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதாவது, திருப்பதி க்ஷேத்திரத்தில், பெருமாள் எழுந்தருளுவதற்கு முன்பாகவே வராக மூர்த்தி எழுந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.

முனிவர் பெருமக்கள், வைகுண்டத்துக்குச் சென்றனர். பரந்தாமனை தரிசிக்கச் சென்றனர். அங்கே, ஸ்ரீமந் நாராயணமூர்த்தி, மகாலக்ஷ்மித் தாயாருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். துவாரபாலகர்கள் முனிவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்தார்கள் முனிவர்கள். துவாரபாலகர்கள் இருவரையும் மண்ணுலகில் பிறக்கும்படி சாபமிட்டனர்.

முனிவர்கள் வந்திருப்பதை அறிந்த நாராயணப் பெருமாள் அவர்களை வரவேற்றார். அப்போது துவாரபாலகர்கள், முனிவர் இட்ட சாபத்தைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட பெருமாள், ‘சாபத்தை என்னால் நீக்கமுடியாது. முனிவர்களின் சாபத்தை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும். பூமியில் பிறப்பெடுத்து, நல்லவர்களாகத் தொடர்ந்து பல பிறவிகள் எடுத்த பின்னர் என்னை அடையலாம். அல்லது அசுரர்களாக தொடர்ந்து மூன்று பிறவிகள் எடுத்து, என்னால் அழிக்கப்படுவீர்கள். பிறகு என்னை அடைவீர்கள். உங்களுக்கு எது விருப்பமோ அப்படியே பிறப்பெடுங்கள் என்றார்.

‘நாங்கள் அசுரர்களாகப் பிறந்தால்தான் உங்கள் விரைவில் வந்தடைய முடியும். எனவே அசுரர்களாகவே பிறக்கிறோம். எங்களை சீக்கிரமே அழித்துவிடுங்கள். உங்கள் திருப்பாதங்களில் விரைவிலேயே சேர்த்துக் கொள்ளுங்கள்’ என நமஸ்கரித்தார்கள்.

அதன்படி, இரண்யகசிபு மற்றும் இரண்யாட்சனாக பிறப்பெடுத்தார்கள். இரண்யாட்சனை வதம் செய்ய பெருமாள் எடுத்த அவதாரமே வராக அவதாரம். அசுரனை அழித்ததும் பிரம்மதேவர், இந்திராதி தேவர்கள் அனைவரும் வராக மூர்த்தமாக இருந்த ஸ்ரீமந் நாராயணனிடம் ‘உலக க்ஷேமத்துக்காகவும் மக்களின் நன்மைக்காகவும் பூமியில் இருந்தபடி அருள்பாலிக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, சேஷாத்ரி மலையில் வராக மூர்த்தியாக எழுந்தருளி சேவை சாதிக்கத் தொடங்கினார்.

வராக மூர்த்தியை முதலில் தரிசித்துவிட்டு, பிறகு என்னை எல்லோரும் தரிசிக்கட்டும் என ஸ்ரீமந் நாராயணன் தெரிவித்தார் என்று விவரிக்கிறது ஸ்தல புராணம். அதன்படி திருப்பதி திருமலையில் வராகரை முதலில் வணங்கிவிட்டுத்தான் வேங்கடவனைத் தரிசிப்பது பக்தர்களின் வழக்கமாயிற்று என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திருப்பதி திருத்தலத்துக்குச் சென்று, வராக மூர்த்தியையும் ஏழுமலையானையும் கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களை ஏற்படுத்தித் தந்திடுவார் ஏழுமலையான்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?