×

இதய பாதிப்பை தவிர்க்கும் வழிகள்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

சென்னை: உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்.29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், இதயவியல் துறை சார்பில், மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி 3 நாட்களுக்கு முன் நடந்தது. இதில், புகைப்பிடித்தலை தவிர்ப்போம், மாரடைப்பை தவிர்ப்போம், சீரான உடல் எடையை பராமரிப்போம், மன அழுத்தத்தை குறைப்போம், கொழுப்பு சத்து உணவுகள் குறைந்த அளவில் சாப்பிடவும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். நிகழ்வில், இதயவியல் துறை தலைவர்   பாலாஜி பாண்டியன், உதவி நிலைய மருத்துவர் தினேஷ் குமார் மற்றும்  டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மணி கூறியதாவது: நல்ல உணவு, உடற்பயிற்சி, நல்ல உறக்கம், மன உளைச்சல் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை கடைப்பிடித்தாலே, இதய பாதிப்பு இல்லாமல் வாழலாம். மேலும், இதய நோய் இல்லாமல் வாழ, புகைப்பழக்கத்தை கைவிட்டு, மன அழுத்தத்தை குறைத்து, உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதே போல் ரத்த சர்க்கரை, ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்து, பழங்கள், நார்ச்சத்து நிறைந்த காய்களை அதிகளவில் சாப்பிட்டால், இதய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். பாஸ்புட் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சைக்கிள், நடைபயணம் மேற்கொள்வது நல்லது. மேலும், அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் 24 மணி நேர தீவிர இதய சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. ஒரு நாளைக்கு 3 முதல் 5 நோயாளிகள் மாரடைப்பு வந்து இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். வயது வரம்பின்றி 20 வயது முதல் 70 வயது இருக்கும் நபர்களும் வருகின்றனர். ஒரே நேரத்தில் 80 முதல் 100 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அளவிற்கு தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. முதல் மாடியில் 30 படுக்கைகளும், நான்காவது மாடியில் 20 படுக்கைகளும் கொண்டு சிறப்பாக ராயப்பேட்டை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மக்கள் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு ராயப்பேட்டை மருத்துவமனையை அனுகி சிறப்பான முறையில் சிகிச்சை பெற்று நலமுடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

The post இதய பாதிப்பை தவிர்க்கும் வழிகள்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rayapet Government Hospital Superintendent ,Chennai ,World Heart Day ,Rayapet Government Hospital ,Department of Cardiology ,Rayapet Government Hospital Superintendent Information ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு