விபூதி தேவர்

சைவர்களின் புனித அடையாளப் பொருளாக இருப்பது விபூதி. விபூதியை நெற்றிலும் உடலிலும் மூன்று கோடுகளாக இட்டுக் கொள்வர். இதையொட்டி இது திரிபுண்டரம் என்று அழைக்கப்படுகிறது. விபூதியானது சாம்பல் வடிவில் இருந்தாலும் அதனுள் நின்று இயங்கும் தெய்வ அருட்சக்தி ஆண் தெய்வ வடிவில் தோன்றி அருள்பாலிக்கிறது. இவ்விதம் தோன்றும் விபூதியின் தெய்வ வடிவத்திற்கு விபூதி தேவர் அல்லது பஸ்மதேவர் என்பது பெயர்.

எல்லாவிதமான ஜ்வரங்களையும் (ஜீரங்களையும்) நீக்குவதால் அவருக்கு ஜ்வரஹரர் என்பதும் பெயராயிற்று.இவர் மூன்று சிரங்களும், மூன்று கரங்களும் மூன்று கால்களும் கொண்டவர். அவரது மூன்று முகங்களும் மூன்று கண்களைக் கொண்டுள்ளன.

அவர் நடன கோலத்தில் இருக்கிறார். திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டிய நாட்டிற்குச் சென்றபோது, பாண்டிய மன்னனை சுரம் பற்றி வருத்த, அவர் ஆலவாய் அண்ணலான மதுரை சோமசுந்தரப் பெருமானைத் துதித்து விபூதியை அவனுக்கு அளித்துத் திருநீற்றுப் பதிகம் பாடினார்.

அப்பாடலைக் கேட்ட அளவில் அவனைப் பற்றியிருந்த வெப்பு நோய் நீங்கிவிட்டது. அன்று முதல் பாண்டிய நாட்டிலுள்ள நிறைய சிவாலயங்களில் விபூதிதேவரை (மூலவராக) கல் திருமேனியாகத் தனிச்சந்நதியில் எழுந்தருளுவித்து வழிபடும் வழக்கம் உண்டாயிற்று. பாண்டியனின் ஜுரத்தை நீக்கியது முதல் இந்த பஸ்ம தேவருக்கு ஜ்வரதேவர் என்ற பெயரே நிலைபெற்றுள்ளது.

இவர் சிவபெருமானின்சக்தியாக வெளிப்பட்டு, அன்பர்களுக்கு அருள்பாலிக்கிறார். வெப்புநோய் கண்டு அதனால் துன்பம் அடைந்தவர்கள், இவருக்கு மிளகு சீரகம் ரசம் சாதம் படைத்து, வெந்நீர் அபிஷேகம் செய்கின்றனர்.

தொகுப்பு : அருள்ஜோதி

Related Stories: