ரயிலில் கொள்ளையடிக்கிறார் விக்ரம் பிரபு!

“அசுரன் பாதி குரு பாதிங்கிறதுதான் படத்தோட கான்செப்ட். அதை நிஜ சம்பவமும் கற்பனையும் கலந்து ஆக்‌ஷனோடு சொல்ற படமா அசுர குரு இருக்கும்” என்கிறார் அறிமுக டைரக்டர் ராஜ்தீப்.

“முதல் பட வாய்ப்பு எப்படி கிடைச்சது?”
“திருச்சி ரங்கம்தான் சொந்த ஊர். டிகிரி முடிச்ச பிறகு சினிமா ஆசையால சென்னை தரமணி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்தேன். 2011ல டைரக்‌ஷன் கோர்ஸ் முடிச்சேன். அப்போ கோர்ஸ் முடிச்சதுல கோல்டு மெடல் வாங்கினேன். அதோடு நான் எடுத்த ஷார்ட் ஃபிலிம், தமிழக அரசோட சிறந்த குறும்படத்துக்கான விருதும் எனக்கு வாங்கிக் கொடுத்துச்சு. அதுக்கும் சேர்த்து இன்னொரு கோல்டு மெடல் கிடைச்சது. அந்த சமயத்துல டைரக்டர் ராஜா சார் தன்னோட ‘வேலாயுதம்’ படத்துக்காக என்னை உதவியாளரா சேர்த்துக்கிட்டார். ‘தனி ஒருவன்’ படத்துலேயும் அவர் கூட ஒர்க் பண்ணினேன். அதுக்கு பிறகு தனியா படம் பண்றேன்னு சொல்லிட்டு வந்தேன். 2015ல் நான் எழுதிய கதை சில தயாரிப்பாளர்கள்கிட்ட சொன்னேன். கேட்ட எல்லோருமே நல்லா இருக்கு பண்ணலாம்னு சொன்னாங்க. ஆனா, அது உடனே டேக் ஆஃப் ஆகல. அது சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை. பட்ஜெட் அதிகம்கிறதால தள்ளிப்போயிட்டே இருந்துச்சு. அதுக்கு இடையே நான் பண்ணின கதைதான் ‘அசுர குரு’. இந்த கதையை தயாரிப்பாளர்கிட்ட சொன்னதும், கமர்ஷியலா ஒர்க் அவுட் ஆகுற மாதிரி இருக்கு. விக்ரம் பிரபுகிட்ட கதை சொல்ல சொன்னாங்க. அவருக்கும் கதை பிடிச்சிருந்துச்சு. 2017 அக்டோபர் மாசம் படம் ஆரம்பிச்சோம். கடந்த வருஷம் ஸ்டிரைக்னால படம் தாமதமாச்சு.”

“அப்போ விக்ரம் பிரபுவுக்காக எழுதின கதை கிடையாதா இது?”
“எந்த ஹீரோவையும் மனசுல வச்சு இந்த கதையை எழுதல. இது ஆக்‌ஷன் சப்ஜெக்ட். திரைக்கதையோட ஹாட் திரில்தான். படம் செம விறுவிறுப்பா போகும். இளம் ஆக்‌ஷன் ஹீரோ நடிக்கிற மாதிரியான கதைதான். அதனால விக்ரம் பிரபுகிட்ட கதை சொல்ல சொன்னப்போவே, கண்டிப்பா இந்த கேரக்டர்ல அவர் உட்காருவாருன்னு தெரிஞ்சு போச்சு. அவருக்கு கதை பிடிச்சுப்போனப்போ, பிறகுதான் கதையில லேசான சில மாற்றங்கள் பண்ணினேன்”.

“என்ன மாற்றம்?”
“விக்ரம் பிரபு உயரமான ஹீரோ. அதுக்கேற்ப சில காட்சிகள்ல சில நுணுக்கங்களை புகுத்த முடிஞ்சது. அதேபோல, அவர்கிட்ட இருக்கிற மேலும் பல பிளஸ் பாயின்ட்டுகளை அவரோட கேரக்டரை இன்னும் மெருகேற்ற பயன்படுத்திக்கிட்டேன்.”

“ரயில் கூரையில துளை போட்டு கொள்ளையடிக்கப்பட்ட நிஜ சம்பவம்தான் கதையா?”
“அந்தச் சம்பவம் நடந்தப்போதான் இந்த கதையை எழுதினேன். பேப்பர்ல அந்த செய்தியை படிச்சி அதிர்ச்சி அடைஞ்சவங்கள்லே நானும் ஒருத்தன். உடனே அந்த சம்பவத்தை இந்த கதையில ஒரு முக்கிய சம்பவமா கொண்டு வந்தேன். படத்துல முக்கிய காட்சியா அந்த கொள்ளை சம்பவம் இருக்கும். ஆனா அது கதை கிடையாது. படத்துலேயும் அஞ்சே முக்கால் கோடி பணம் கொள்ளைனு தான் காட்சி வச்சிருக்கேன்”.

“டிரெய்லர் பார்க்கும்போது விக்ரம் பிரபுவைத்தான் கொள்ளையனா காட்டியிருக்கீங்க. படத்துல அவருக்கு நெகட்டிவ் ரோலா?”
“விக்ரம் பிரபு கொள்ளையடிக்கிற மாதிரி காட்சி டிரெய்லர்ல வரும். படமும் அப்படித்தான் போகும். அந்த சம்பவத்துலேருந்து படம் ஆரம்பிச்சாலும் படத்தோட மெயின் தீம் வேற. ‘ஆளவந்தான்’ படத்துல ரெண்டு கமல் இருப்பாங்க. ஒருத்தர் நல்லவர், இன்னொருத்தர் கெட்டவர். இந்த ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே கேரக்டரா இருந்தால் எப்படி இருக்கும். அந்த கேரக்டர்தான் படத்துல விக்ரம் பிரபு. அசுரன் மாதிரியானவரும் அவர்தான். குரு போன்ற ஆசிரியரும் அவர்தான். சின்ன தப்பை மறைக்கும்போது பல பெரிய குற்றங்கள் வரை அது கொண்டு போய் சேர்க்கும். இந்த செய்திதான் படத்துல சொல்ல வருகிறேன்”.

“மகிமா நம்பியாருக்கு என்ன ரோல்?”
“வழக்கமான கமர்ஷியல் பட ஹீரோயினா அவங்களை பார்க்க முடியாது. இந்த ரோலும் அதுபோல கிடையாது. படத்துல அவங்க டிடெக்டிவ்வா வர்றாங்க. விக்ரம் பிரபுவை ஃபாலோ பண்ணி, அவரோட நிஜத்தை கண்டுபிடிக்கிற கேரக்டர். படம் முழுக்கவே வருவாங்க. கதையோட முக்கிய திருப்பமா இந்த கேரக்டரை பார்க்கலாம்.  அது மட்டும் இல்ல, இந்த கேரக்டருக்கு 5 முன்னணி ஹீரோயின்களை அப்ரோச் பண்ணினேன். கதை கேட்டுட்டு, இதுல ஹீரோயின் ரோலுக்கு இருந்த முக்கியத்துவம் காரணமா, அவங்க ரொம்பவே இம்பிரஸ் ஆனாங்க. ரெண்டு பேர் சில காரணங்களால நடிக்க முடியல. கால்ஷீட் பிரச்னையால மத்தவங்களால இந்த படத்துக்கு தேதி ஒதுக்க முடியாம போச்சு. இந்த வேடத்துல நயன்தாராவை கூட அப்ரோச் பண்ணியிருக்கலாம். அந்த அளவுக்கு ஹீரோயின் கேரக்டர் படத்துல பலமா இருக்கும்”.

“காமெடிக்கும் படத்துலே தனி முக்கியத்துவம் கொடுத்திருக்கீங்க போல?”
“ஆமாம். இந்த மாதிரி ஆக்‌ஷன் திரில்லர் படங்கள்ல காமெடிக்கு முக்கியத்துவம் தரமாட்டாங்க. ஆனா, கண்டிப்பா இதுல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கணும்னு முடிவு பண்ணியே படத்துல ஹியூமர் காட்சிகளை வச்சிருக்கேன். ஆனா கதை பண்ணிட்டு, அதை திணிக்கல. கதையோடு சேர்ந்துதான் எல்லாமே வரும். யோகி பாபு மெயின் காமெடியன். அவர் தவிர, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோரும் காமெடிக்கு இருக்காங்க. விக்ரம் பிரபு, கூரியர் கம்பெனியில ஒர்க் பண்றவரா நடிச்சிருக்கார். அந்த கம்பெனி மேனேஜரா மனோபாலா வருவார். குமரவேலுக்கு போலீஸ்காரர் வேடம். அவர் பேசுற வசனங்கள்ல நாட்டு நடப்போட உண்மைகளை காமெடி கலந்து சொல்ற மாதிரி இருக்கும். நாகிநீடு வில்லனா வர்றார். வடசென்னையில கடத்தல் தொழில் பண்றவரா அவரோட கேரக்டர் இருக்கும்”.

“படத்துல சிஜி ஒர்க் அதிகம் இருக்கிறதால லேட் ஆகுதா?”
“அப்படி கிடையாது. இன்னிக்கு பெரும்பாலான படங்கள்ல சிஜி தவிர்க்க முடியாத அங்கம் ஆயிடுச்சி. இந்த படத்துலேயும் அது இருக்கு. ரயில் கொள்ளை சம்பவம் உள்பட சில ஆக்‌ஷன் காட்சிகள்ல சிஜி இருக்கும். அதுக்காக படம் லேட்டாகல. நாங்க பிளான் பண்ணினப்படிதான் முடிச்சிருக்கோம்”.

× RELATED வங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி