×

திட்டமிட்ட பெண் வராததால் புதையல் எடுக்கும் போட்டியில் நண்பரை நரபலி கொடுத்தேன்; கைதான காவலாளி திடுக் வாக்குமூலம்

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலம் பொம்மதாதனூர் ஊராட்சி புதூர் கிராமத்தை சேர்ந்தவிவசாயி லட்சுமணன்(52). கடந்த 28ம்தேதி வீட்டின் அருகே வெற்றிலை தோட்டத்தில், ஒன்றரை அடி ஆழ குழியில் அமர்ந்த நிலையில் லட்சுமணன் இறந்து கிடந்தார். அருகே கோழி மற்றும் எலுமிச்சம் பழம் அறுக்கப்பட்ட நிலையில், பூஜை பொருட்களும் கிடந்தது. கெலமங்கலம் போலீசார், லட்சுமணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் கட்டையால் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக லட்சுமணனின் நண்பரான தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த மணி(65) என்ற காவலாளியை போலீசார் கைது செய்தனர். அப்போது மணி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: லட்சுமணனும், நானும் கடந்த காலங்களில் ஒன்றாக வேலை செய்தோம். 6 மாதங்களுக்கு முன்பு லட்சுமணனின் மகளுக்கு பேய் பிடித்திருந்ததால், பேய் ஓட்ட சிரஞ்சீவி என்ற சாமியாரை அழைத்து வந்துள்ளார். பேய் ஓட்டி விட்டு போகும் போது, சாமியார் சிரஞ்சீவி, அருகில் உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையல் இருப்பதாக கூறி, இடத்தையும் காட்டிச் சென்றுள்ளார். லட்சுமணன், என்னை தொடர்புகொண்டு சாமியார் கூறியது பற்றி தெரிவித்தார். எனக்கும் புதையல் ஆசை ஏற்பட்டது. ஆனால் நரபலி கொடுத்தால்தான், புதையல் கிடைக்கும் என சாமியார் கூறியதாக லட்சுமணன் தெரிவித்தார். இந்நிலையில், புதூர் கிராமத்தை சேர்ந்த ராணி என்ற பெண், பேய் பிடித்து உள்ளது. அதை ஓட்ட சாமியாரை வரவழையுங்கள் என லட்சுமணனிடம் தெரிவித்துள்ளார். நாங்கள், ராணிக்கு பேய் ஓட்டுவதாக கூறி அவரையே நரபலி கொடுத்து, புதையலை எடுப்பது என முடிவு செய்தோம். அதற்காக ராணியை வெற்றிலை தோட்டத்திற்கு வருமாறு லட்சுமணன் கூறியிருந்தார். இதற்காக புதையல் இருப்பதாக சாமியார் சிரஞ்சீவி கூறிய இடத்தில், ஒன்றரை அடி ஆழ குழியைதோண்டி வைத்தோம். ஆனால் எதிர்ப்பார்த்தபடி ராணி அங்கு வரவில்லை. அந்த நேரத்தில் புதையலை தான் மட்டும் அடைய நினைத்த லட்சுமணன், என்னை தாக்கியதுடன், நரபலி கொடுப்பதற்காக கழுத்தை கடிக்க வந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட நான், அவனை நரபலி கொடுத்து புதையலை எடுக்க முடிவு செய்தேன். அதன்படி அருகில் கிடந்த கட்டையை எடுத்து, லட்சுமணன் தலையில் சரமாரியாக அடித்தேன். இதில் அவன் இறந்தான். பின்னர் பூஜைகள் செய்தேன். அங்கு தோண்டி பார்த்தும் புதையல் ஏதும் கிடைக்கவில்லை. எனவே ஏமாற்றத்துடன் அனைத்தையும் போட்டுவிட்டு தப்பியோடி விட்டேன். இவ்வாறு மணி தெரிவித்ததாக போலீசார் கூறினர். …

The post திட்டமிட்ட பெண் வராததால் புதையல் எடுக்கும் போட்டியில் நண்பரை நரபலி கொடுத்தேன்; கைதான காவலாளி திடுக் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Kelamangalam ,Krishnagiri District ,Thenkanikotta ,PomMadathanur Puradashi Pudur Village ,Vasayi Lakshmanan ,Dinakaran ,
× RELATED கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம்...