×

கருணையோடு வீடு தேடி வந்த கங்கை

திருவிசநல்லூர், கும்பகோணம்

கார்த்திகை அமாவாசை என்றாலே திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் நினைவுக்கு வந்து விடுவார். ஸ்ரீதர ஐயாவாள் மிகச் சிறந்த சிவபக்தர்.அகமும் புறமும் சிவ நாமம் தான். அவர் மைசூர் சமஸ்தானத்தில் மிக உயர்ந்த அரசாங்க பதவியில் இருந்தவர். சிவபூஜைக்கும் சிவ சிந்தைக்கும் அரசாங்க காரியங்களும், பதவிகளும், தடையாக இருப்பதை அறிந்தவர்,ஒரு கட்டத்தில்  தன்னுடைய பதவியைத் துறந்துவிட்டு கும்பகோணம் காவிரிக்கரையில், திருவிடை மருதூர் அருகே உள்ள திருவிசநல்லூர் என்கின்ற இடத்தில் வந்து தங்கினார்.

தினமும் அவர் இரண்டு காரியங்களைத் தவறாமல் செய்வார். ஒன்று கங்கையின் புனிதமான காவிரி ஸ்நானம். இரண்டு திருவிடைமருதூர் சென்று மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்வது. இந்த இரண்டையும் செய்யாமல் வேறு எந்தக் காரியத்தையும் அவர் செய்வது கிடையாது. மருத மரத்தைத் தல மரமாகக் கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று. முதலாவது ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில்.

இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர். மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற திருநெல்வேலிக்கு அருகே [அம்பாசமுத்திரம்] அருகில் உள்ள திருப்புடைமருதூர். இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன. ப்ரம்மஹத்தி தோஷம் போக்கும் தேவார மூவரும் பாடிய தலம் திருவிடைமருதூர். இது இப்படியிருக்க   ஸ்ரீதர ஐயாவாள் சிவ பக்தியை ஊருக்குப் பறை சாற்ற ஒரு லீலையைச் செய்தான் ஈசன்.

கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தில் ஸ்ரீதர ஐயாவாள் தந்தையாரின் நினைவு நாள் வந்தது. அன்றைக்கு வைதிகர்களை அழைத்து முறையாக தந்தையாரின் சிராத்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நினைத்தார். அதற்கான வைதிகர்களும் இவர் வீட்டுக்கு வந்தனர். அவர்களுக்கான சிரார்த்த சமையல் ஆகிக்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்துவிட்டு காவிரிக்குச் சென்று ஸ்நானம் செய்து விட்டு வந்து விடலாம் என்று புறப்பட்டார்.

முறையாக சங்கல்பம் செய்து காவிரியில் நீராடி காவிரியில் செய்யவேண்டிய தர்ப்பண அர்க்கியாதிகளை தந்துவிட்டு அவர் தம்முடைய இல்லத்துக்கு நடந்து வரும் வழியில் ஒரு வயதான ஏழை வந்தான். பலநாள் உணவுக்காக தவித்தவன் போல் தளர்ந்து காணப்பட்டான். ஸ்ரீதர ஐயாவாளை வணங்கியவன் ‘‘என்னுடைய உயிர் நிற்காது போலிருக்கிறது. ஏதேனும் எனக்கு உடனடியாக ஒரு உணவு தாருங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்’’ என்று கேட்க, அவனுடைய நிலையைக் கண்ட ஸ்ரீதர ஐயாவாள், அவனை அழைத்து வந்து, தம்முடைய வீட்டின் ஒரு பகுதியில் தயாரான சிரார்த்த சமையலை, பெரிய வாழை இலை போட்டு பரிமாறினார்.

அன்னமே பிராணன். அன்னமே தேகம். அன்னமே பிரம்மம் என்றெல்லாம் உபநிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அன்னத்தால் தான் இந்த சரீரம் நிற்கிறது. இந்த சரீரத்தால் தான் வழிபாடுகளை நடத்த முடியும் என்று பல உபநிடத வாக்கியங்கள் இருப்பதை உணர்ந்த ஸ்ரீதர ஐயாவாள், ‘‘இன்று சிராத்த தினமாக இருந்தாலும் ஏதோ பகவான் சோதிக்கிறான் என்று நினைத்து, ஒரு ஏழையின் வயிறு நிறைந்தால், அது முன்னோர்களின் வயிறு நிறைந்தது போல்’’ என்கின்ற சூட்சும உண்மையை உணர்ந்து உணவிட்டார்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே


என்ற திருமந்திரப் பாடல் நினைவுக்கு வந்தது. இதை அறிந்த வைதிகர்கள் “ஆசாரம் கெட்டு விட்டதே” என்று கருதி, உடனடியாக “இனி சிரார்த்தம் செய்ய மாட்டோம்” என்று கடுமையாகக் கூறிப் புறப்பட்டார்கள். ஸ்ரீதர ஐயாவாள் அவர்களைத் தடுத்து சமாதானம் சொன்னார். ‘‘இது தவறுதான். என்றாலும் இது ஒரு விதமான நிர்பந்தத்தில், ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தினால் ஏற்பட்டது. மன்னிக்க வேண்டும். நீங்கள் பாதியில் இப்படி சிரார்த்த பூஜையை விட்டு விட்டுச் செல்வது தகாது.

அதனால் என்னுடைய தகப்பனார் ஆன்மா சங்கடப் படும். இறையருளும் கிடைக்காது.  ஒரு விஷயத்தை செய்யாமல் விடுவதை விட, பாதியில் விட்டு
விடுவது பாவம். அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து சிராத்த பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு உடனடியாகத் தனியாக தூய்மையான ஒரு சமையலை ஏற்பாடு செய்து விடுகிறேன்’’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. ‘‘எதுவாக இருந்தாலும், ஒரு செயலை தவறாகச் செய்து விட்டால், அதற்குப் பிராயச்சித்தம் என்று இருக்க வேண்டுமே.

என்ன பிராயச்சித்தம் செய்தால் நீங்கள் சிரார்த்தத்தை இன்றைக்கே தொடர முடியும்?’’ என்று கேட்க, அவர்கள் இதற்கு உடனடியாகச் செய்ய வேண்டிய ஒரே பிராயச்சித்தம் “கங்கையில் நீராடிவிட்டு வருவதுதான்” என்று சொன்னார்கள். சாத்தியமில்லாத இந்த பிராயசித்தத்தைச் சொன்னதும் திகைத்தார்.
‘‘கங்கை எங்கே? காசி எங்கே?’’காவிரிக் கரையிலிருந்து அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று கங்கையில் நீராடுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயம் அல்லவா. வாகன வசதி இல்லாத காலத்தில் காசிக்குச் செல்லவே பல மாதங்களாகுமே...

தந்தைக்கு தரவேண்டிய நீத்தார்கடன் பாதியில் விடப்பட்டதை எண்ணி வருந்திய ஸ்ரீதர ஐயாவாள் “இதற்கு வேறு வழியே இல்லையா?’’ என்று வருத்தமாகக் கேட்க, அவர்கள் ‘‘அதெல்லாம் வேறு வழியே இல்லை. சாஸ்திரம் என்றால் சாத்திரம் தான். இன்றே கங்கையில் நீராடி விட்டு வாருங்கள். சிரார்த்தத்தை தொடரலாம்’’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு புறப்பட்டனர். இனி இந்த சிரார்த்தம் நின்று போனதுதான். தந்தைக்கு நீர்க்கடன் சரியாகச் செய்ய முடியாத பாவியாகி விட்டோமே என்று வருத்தத்துடன் மகா லிங்கேஸ்வரரை நினைத்து சற்று கண்ணயர்ந்தார்.

அப்பொழுது அன்பே சிவமான மஹாலிங்கேஸ்வரர் அவருடைய மனதில் தோன்றி ‘‘நீ கவலைப்பட வேண்டாம். கங்கைக்கு நீ சென்றால் என்ன? உன்னிடத்தில் கங்கை வந்தால் என்ன?  உன் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கங்கை பிரவாகம் ஆகும். நீ கவலைப்பட வேண்டாம்’’ என்றார். அவர் உடனடியாக ஊர் மக்களை எல்லாம் கூட்டி தன்னுடைய கிணற்றடிக்குச் சென்று ‘‘இதோ, இங்கே, இப்போதே கங்கை பிரவாகம் எடுக்கட்டும்’’ என்று சங்கல்பம் சொன்னவுடன், சிலருக்கு நம்பிக்கை வந்தது. சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

சிராத்தத்தை நடத்த வந்தவர்கள் ‘‘இது என்ன இவருக்கு விபரீதமான புத்தி போய் விட்டது. சிரார்த்தம் நடத்த முடியவில்லையே என்று புத்தி மாறி விட்டதா? கங்கையாம். பிரவாகமாக வருமாம்.’’ என்றெல்லாம் கேலி செய்தபடி, ‘‘சரி பார்ப்போம்’’ என்று நின்று கொண்டிருந்தனர். சிவபெருமானை நினைத்து உன்னுடைய முடியில் உள்ள கங்கை இப்போது இங்கே பிரவாகம் எடுக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு கங்கா அஷ்டகத்தை மனம் உருகி பாட ஆரம்பித்தார். ஒவ்வொரு சுலோகமாக சென்று கொண்டிருந்தது.

ஆதா வாதி பிதாமஹஸ்ய நியம வ்யாபார பாத்ரே ஜலம்

பஸ்சாத்பன்னக ஸாயினோ ப க வத: பாதோ த கம் பாவனம்|
பூ ய: ஸாம்பு ஜடாவிபூஷண மணிர்ஜஹ்னோர்மஹர்ஷேரியம்
கன்யா கல்மஷனாஸினீ பகவதீ பாகீரதீத் ருஸியதே

என்ற ஸ்லோகத்தை அவர் பாடி முடிக்கும் பொழுது, கிணற்றிலிருந்து குபுகுபு என்று கங்கை பொங்கி வந்தது. கிணற்றின் மேலேறி வழிந்து ஊர் எல்லாம் வெள்ளக்காடாக மாறியது. கண்டவர்கள் அதிசயித்தனர். அனைவரும் அன்று கங்கைதீர்த்தத்தில் நீராடினர். கங்கையைத் தேடிப்போக, சாட்சாத் அந்த கங்கையே, பக்தனின் வேண்டுகோளுக்காக சிவனின் ஜடாமுடியில் இருந்து இறங்கி வந்து, இந்த பூமியை குளிர்வித்த தினம் என்று வைதீகர்கள் மனம் திருந்தினர்.

அவர்களும் கங்கையில் நீராடி ஸ்ரீதர ஐயாவாளின் தந்தையின் சிரார்த்தத்தை முறையாக நிறைவேற்றினர். 300 வருடங்கள் கழித்தும்,கங்கை பொங்கி வந்த கார்த்திகை அமாவாசை தினத்தில் இன்றைக்கும் திருவிசநல்லூர் சென்று கிணற்றில் ஊறிவரும் கங்கையில் சகல மக்களும் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.  

தொகுப்பு: விஷ்ணுபிரியா

Tags : Ganga ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நிலம் மீட்பு