×

ரகுராம் ராஜன், பொருளியலாளர் எஸ்தர் டப்லோ வழிகாட்டுதலில் இளைஞர்களது புதுமையான சிந்தனைகள் தமிழக அரசுடன் கைகோர்க்க வேண்டும்: ‘புத்தாய்வு திட்டம்’ குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: இளைஞர்களது புதுமையான சிந்தனைகள் அரசுடன் கைகோர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் புத்தாய்வு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சரின் புத்தா ய்வு திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: தனி மனிதராக இருந்தாலும் – நிறுவனமாக இருந்தாலும் – ஆட்சியாக இருந்தாலும், தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்தகைய புத்தாய்வு திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இதில் முப்பது இளைய – தனித்திறமைசாலிகள் இணைக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர்கள் இந்த பணியில் ஈடுபட போகிறார்கள். நமது இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி, அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதுதான் இத்திட்டத்தின் மைய நோக்கம்.அரசின் திட்டங்கள், அவற்றின் குறிக்கோள்களை முழுமையாக அடையவும், குக்கிராமம் வரை திட்டத்தின் பயன்கள் மக்களை சென்று சேரவும் இது உதவும். திட்டங்கள் மக்களை சென்று சேர்வதில் எங்கெல்லாம் குறைபாடு நேர்கிறது என கண்டறிவது, அவற்றிற்கான தீர்வை முன்வைப்பது, திட்டங்களின் சிறப்பான செயலாக்கத்துக்கு புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்துவது, தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது – இவைதான் இத்திட்டத்தில் நாம் முக்கியமாக கவனம் செலுத்தவுள்ள பணிகள்.இவர்களுக்கு உலக அளவில் தலைசிறந்து விளங்கும் வல்லுநர்கள் பயிற்சியளிக்க உள்ளார்கள். பயிற்சியின் முடிவில், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் தங்கள் துறையில் பணியை தொடங்குவார்கள். இரண்டு ஆண்டுகளில், பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதில் பெற்ற பாடங்கள், அனுபவங்கள், சேகரித்த தரவுகளின் அடிப்படையில் ஓர் அறிக்கையை அவர்கள் அளிக்க வேண்டும். நீர்நிலைகளை மேம்படுத்துதல், வேளாண் உற்பத்தி வளர்ச்சி, அனைவருக்கும் வீடு, கல்வி தரத்தை உயர்த்துதல், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்களை வளர்த்தெடுத்தல் முதலிய 12 முக்கியமான துறைகளில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் கவனம் செலுத்த உள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் எஸ்தர் டப்லோ முதலிய உலக புகழ்பெற்ற அறிஞர்கள், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள் ஆகியோர் இதில் வழிகாட்ட உள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திராவிட மாடல் திட்டங்களை பற்றி அறிந்துகொள்வதற்கும், அவற்றின் வெற்றிக்கு பங்களிக்கவும் ஒரு மிக சிறந்த வாய்ப்பாக இது இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. இளைஞர்களின் ஆற்றல், தமிழ்நாட்டின் தனித்துவமான ஆட்சி நிர்வாகம், உலக அளவிலான சிறந்த உத்திகள் ஆகிய மூன்றும் ஒரு புள்ளியில் இணைவதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம்.இரண்டாண்டு முடிவில் ‘பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மை’யில் முதுகலை சான்றிதழ் பெறுவதுடன், தகுதியின் அடிப்படையில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளவும் இதில் வழியுள்ளது என்பதை உணர்ந்து, இளைஞர்கள் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பலரது சிந்தனைகள், பலரது கனவுகள் ஆகியவற்றின் கூட்டு சேர்க்கையாக ‘திராவிட மாடல்’ அரசு திகழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இளைஞர்களது புதுமையான சிந்தனைகள் அரசுடன் கைகோக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அரசு இயந்திரத்தில் இளைய, புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது. புதுமையான தமிழகத்துக்கான பாதை வகுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post ரகுராம் ராஜன், பொருளியலாளர் எஸ்தர் டப்லோ வழிகாட்டுதலில் இளைஞர்களது புதுமையான சிந்தனைகள் தமிழக அரசுடன் கைகோர்க்க வேண்டும்: ‘புத்தாய்வு திட்டம்’ குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Rakuram Rajan ,Esther Dablo ,Tamil Nadu Government ,Chief Minister ,BCE ,G.K. ,Chennai ,G.K. Stalin ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...