×

நிவேதனத்தில் வடைகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வடைகள், எண்ணெயில் பொரித்து எடுத்த பலகார வகையாகும். பொரித்தல் என்று சொல்லாமல், நடைமுறையில் சுடுதல் என்று வழங்குகிறோம்.

சருகு வடை

உளுந்தை தோல் நீக்கி ஊறவைத்து, அதனுடன் பெருங்காயம், மிளகு (அல்லது) மிளகாய் வற்றல், உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து இலை அல்லது துணியில் லேசாகத் தட்டி எண்ணெயில் இட்டு வேகவைத்து எடுத்தால், அது மெல்லிய மொறுமொறுப்பான வடையாகும். தோலோடு அரைப்பதும் உண்டு. இதனை இலை வடை, சருகு வடை எனப் பல பெயர்களால்  அழைக்கிறார்கள். இவற்றை, 54, 108, 1008 என்ற எண்ணிக்கைகளால் கோர்த்து வடைமாலை தயாரிக்கின்றனர்.

வீரபத்திரர், துவார பாலகர் அனுமன் போன்ற தெய்வங்களுக்கு, வடைமாலை அணிவித்து வழிபாடு செய்யப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1008, 10008, லட்சத்தெட்டு என்ற எண்ணிக்கைகளில் வடைமாலைகள் அணிவிக்கின்றனர். இது வாரக்கணக்கில் கெடாததாகும். திருவையாற்று ஆலயத்தில், தெற்கு வாயிலில் இருக்கும் துவாரபாலகரான ஆடகொண்டாருக்கு வடை அணிவித்து வழிபாடு செய்வது சிறந்த பிரார்த்தனையாக உள்ளது.

உளுந்து வடை

உளுந்தை தோல் நீக்கி நன்கு ஊறவைத்த பின்னர், உரலில் (தற்போது, மிக்சி, கிரைண்டர்) தளர ஆட்டி அதில் மிளகைத் தட்டிப் போட்டு உப்பு சேர்த்து வட்டமாகத் தட்டி எண்ணெயில் இட்டு வேகவைத்து எடுக்கின்றனர். இது, மெதுமெதுப்பாக இருப்பதால் மெதுவடை என்றும் கூறுவதுண்டு. பொதுவாக கடலெண்ணெயில் சுட்டு எடுப்பர். பைரவருக்கு மட்டும் நெய்யில் சுட்டு எடுப்பர். போதுமான நெய் இல்லை என்றால், நெய்யில் முக்கி எடுத்து நிவேதிப்பர். இது நெய்வடை எனப்படும். வடையை தேனில் நனைத்து நிவேதிப்பதுடன், ஹோமத்திலும் இடுகின்றனர். மேலும், தாளித்த தயிரில் போட்டு தயிர் வடை, மோர்க்குழம்பில் ஊறவிட்டு மோர் குழம்பு வடை, ரசத்தில் ஊறவைத்து ரச வடை, சாம்பாரில் ஊறவிட்டு சாம்பார் வடை என பலவாறு செய்து படைக்கின்றனர்.

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் இடும் தளிகைகளில், தயிர்வடையை நிவேதிக்கின்றனர். ஜ்வரஹரேஸ்வருக்கு மிளகு ரசத்துடன் வடை நிவேதனம் செய்யப்படுகிறது. பொதுவாக ஆலயங்களில் மாலை வழிபாட்டில் வடைகளை சுட்டு நிவேதனம் செய்கின்றனர். ஆவுடையார் கோயிலில் தினமும் இரண்டாம் கால பூஜையை ஒட்டி செய்யப்படும் ஆறு நிவேதனங்களில் மெதுவடையும் ஒன்றாகும்.இதுவுமின்றி கடலை பருப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பருப்பு வடைகளும் நிவேதிக்கப்படுகின்றன.

தொகுப்பு: அ.வசந்தன்

Tags : Nivedana ,
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்