×

ஐயப்பன் அறிவோம்! - 1 குருவுக்கு மரியாதை

கார்த்திகை பிறந்து விட்டது. இந்தாண்டு மண்டல பூஜை மற்றும் மகரஜோதி விழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மாலை திருநடை திறக்கப்பட்டது. பக்தர்கள் மாலையணித்து விரதம் துவங்கி விட்டனர். சபரிமலை ஐயப்பனின் புராண வரலாறு அற்புதமானது. மும்மூர்த்திகளான பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகியோரின் தவத்தால் ஜோதி வடிவில் (நாளடைவில் உருவம்) கிடைத்த ஆதி சாஸ்தாவின் (அய்யனார்) அவதாரங்களான ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பாலசாஸ்தா உள்ளிட்ட 8 அவதாரங்களில் முக்கியமானது ஹரிஹர புத்திரனாக அவதரித்த தர்மசாஸ்தா என்ற சுவாமி ஐயப்பனின் அவதாரமாகும்.

மகரஜோதி தெரிகிற காந்த மலையில், பிரம்மனின் புதல்விகளான பூரணை, புஷ்கலை எனும் இரண்டு தேவிகளுடன் அருளாட்சி நடத்தி வந்த சாஸ்தா, மஹிஷியை வதம் செய்து, சாப விமோசனம் அளிப்பதற்காக மனித அவதாரமாே தோன்றிய கடைசி அவதாரமாகும். ‘தட்சிண கங்கை’ எனப்படும், கங்கையை விட புனித ஆறாக கருதப்படும் பம்பையின் ஆற்றங்கரையில் பரமசிவன், விஷ்ணு அளித்த துளசியிலான நவரத்தின மாலையை அணிந்திருந்த அந்த குழந்தை, மணிகண்டன் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். பந்தள மன்னரான ராஜசேகரபாண்டியன் வளர்ப்பில் பாலபிரம்மச்சாரியான மணிகண்டன், மஹிஷியை வதம் செய்தார். சாப விமோசனம் அளித்த கலியுக வரதனான ஐயப்பனுக்கு, சபரிமலையில் பரசுராமரால் சிலை அமைக்கப்பட்டது.

உலக நன்மைக்காக தவயோகத்தில் ஆழ்ந்து தவக்கோலம் பூண்ட மணிகண்டன், ஆண்டிற்கு ஒருநாள் மகரஜோதி அன்று கண்விழித்து பக்தர்களுக்கு காட்சி தருவதாக வாக்களித்தார். சபரிமலை கோயிலில் ‘தத்வமஸி’ என பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பொருள், ‘நீயே கடவுளாக இருக்கிறாய்’ என உணர்த்தப்படுகிறது. மேலும் கார்த்திகை 1ம் தேதி மாலை அணிவிக்கப்படுகிறது. காரணம், தான் கூறியபடி சபரிமலை கோயில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது கார்த்திகை மாதம் 1ம் தேதி ஆகும்.

ஐயப்பன் உத்தரவின்படி, பரசுராமர், நாரத முனிவர், அகஸ்திய முனிவர் ஆகிய மூவரின் ஆலோசனைப்படி 18 மலையை கொண்ட சபரிமலையில் 18 தத்துவங்களை குறிக்கும் படிகளுடன் சபரிமலை திருக்கோயில் அமைந்த நாள், இந்த கார்த்திகை 1 ஆகும். இதனால் கார்த்திகை முதல் நாள் மண்டல விரதம் துவங்க உகந்த நாளாக கருத்தப்படுகிறது. 41ம் நாளில் விஷேசமான மண்டல பூஜையும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது.

மேலும், குருசாமிக்கு முக்கியத்துவம் தரப்படுவதற்கும் காரணமுண்டு. கோயில் அடிக்கல் நாட்டு விழா நடந்த பூமி பூஜையின்போது தன்னை வளர்த்த மன்னர் ராஜசேகரபாண்டியன், ரிஷிகளான பரசுராமர், அகஸ்திய முனிவர், நாரத முனிவர் உள்ளிட்ட தேவர்கள் இருக்கும் போது, கோயில் கட்டுமானத்திற்கு முதல் கல்லை எடுத்து வைக்கும் பாக்கியத்தை தனக்கு வில்வித்தை, குதிரையேற்றம் உள்ளிட்ட சகல வீர விளையாட்டுகளுடன் குருகுல கல்வியை வழங்கிய குருவிற்கே முக்கியத்துவம் அளித்து ஐயப்பன் அசிரீரி வாக்கு மூலம் உத்தரவளிக்கிறார். இதனாலேயே குருவிற்கு குரு என ஐயப்பன் அழைக்கப்பட்டு, விரதமுறையிலும் குருசாமி முக்கிய இடம் வகிக்கிறார்.

(நாளையும் தரிசிப்போம்...)

Tags : Iyappan ,
× RELATED புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை...