×

சிங்காரத் தமிழால் மகிழும் சிங்கம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அற்புதமான சோழ வள நாடு. அதன் அழகான மலை முகடுகளில், இரண்டு குதிரைகள் சென்றுகொண்டிருந்தது. ஒன்று, பல விதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதன் மீது இருப்பவரும் பரம கம்பீரமாக, மணி முடி தரித்தபடி இருந்தார். அவரது கம்பீர தோரணையே, அவர்தான் சோழப் பேரரசு என்று சொல்லாமல் சொல்லியது. இன்னொரு குதிரையில் அறிவின் ஒளியோடு, பொலிவோடு இருந்தார் கம்பர் பெருமான்.

இருவரும் உல்லாசமாக உலா வந்து கொண்டிருந்தார்கள். மலையின் தென்றல் காற்றைவிட, கம்பரின் தமிழ் தென்றல், மன்னனை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தது. அந்த ஆனந்தத்தில் மிதந்தபடியே, ‘‘பரந்து விரிந்த இந்த நிலமும், நிலத்தில் உள்ளவை அனைத்தும் என் சொந்தம்’’ என்று இறுமாப்புடன் மீசையை முறுக்கிய படியே சோழப் பேரரசன் சொன்னான். மன்னனின் இந்த கர்வம் கம்பனை குத்தியது.

நாடாளும் மன்னனுக்கு வீரம் வேண்டும். விவேகம் வேண்டும். ஆனால், கர்வம் கூடாது. இறுமாந்த மன்னர்கள் பலர் இல்லாமல் போனதை, கல்வியில் தேர்ந்த கம்பன் அறிவான். அந்தப் பட்டியலில், தன் மன்னனும் இடம் பெற வேண்டாம் என்ற எண்ணத்தோடும், மன்னனின் கர்வத்தை அடக்கும் பொருட்டும், கம்பன் புத்தி சாதுர்யமாக பேச ஆரம்பித்தார்.

‘‘தரணி எல்லாம் தாங்கள் ஆண்டாலும், தங்களையே கன்னித் தமிழால் என்னைப் போன்ற புலவர்கள் அல்லவா ஆள்கிறார்கள்? ஆகவே, கன்னித் தமிழே சிறந்தது இல்லையா?’’ கம்பன் கவிநயத்தோடு கூறினார். கம்பரின் இந்தக் கூற்றை கேட்ட மன்னனுக்கு, ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. கண்கள் சிவந்தது, உதடு துடித்தது. ‘‘கம்பனே முடிமன்னனையும் முத்தமிழ் ஆளும் என்று வாதாடும் நீர், அதை நிரூபித்துக் காட்டும்.

நிரூபித்த பின், உன் திருமுகத்தை எனக்கு முன் வந்து காட்டும்.’’ என்று பொரித்துத் தள்ளிவிட்டு கம்பனை நடுக்காட்டில் விட்டுவிட்டு மன்னன், திரும்பிக் கூட பார்க்காமல் வேகமாக குதிரையை செலுத்தி அங்கிருந்து மறைந்தான். நொடியில் நடந்துவிட்ட இந்த விபரீதத்தை எண்ணி, கம்பர் பல கணங்கள் திக்பிரமை பிடித்தவர் போல நின்றிருந்தார். விளையாட்டாக சொல்லவந்தது இப்படி வினையில் வந்து முடியும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. கம்பர், கனத்த மனத்தோடு சொந்த மண்ணை, மன்னன் ஆணையால் பிரிந்தார்.

பல நாட்கள் கழிந்தது. ஆனால், கம்பன் பற்றிய ஒரு செய்தியும் இல்லை. திடீரென்று எதிரி நாட்டு மன்னனான, பிரதாப ருத்திரன் வருவதாக சோழனுக்கு செய்தி வந்தது. சோழ வள நாட்டின் வளமையை விட பல மடங்கு வளமை வாய்ந்த நாடு, அவனுடையது. படை பலத்தை பற்றி சொல்லவே வேண்டாம். அவனது படை முன்பு சோழனின் படை ஒரு நொடிகூட நிற்காது. அதனால், பிரதாப ருத்திரன் என்றால் அஞ்சாத அரசர்களே கிடையாது.

அப்படிப் பட்டவன் பெரும் படையோடு சோழ நாட்டை நோக்கி வருகிறான் என்ற செய்தி கேட்டு, அரசனுக்கு குலையே நடுங்கியது. மண்டி இடுவதற்கு பதில், வீர சொர்க்கமே மேல் என்று முடிவு செய்தான் சோழன். வேறு வழி இல்லாமல், இருக்கும் சொச்ச படையை வைத்துக்கொண்டு, நகர எல்லையில் போருக்கு ஆயத்தமாக நின்றான். ஆனால், அவனுக்கு ஒரு பெரிய ஆச்சரியம்தான் காத்திருந்தது.

பிரதாப ருத்திரன், தனது படையை சோழ தேசத்தின் எல்லையில் நிறுத்திவிட்டு, ஒரே ஒரு பல்லக்கை மட்டும் தனது வேலையாட்கள் சுமந்து வர, நிராயுத பானியாக, கையில் வித விதமாக பொன்னும் பொருளும் இருக்கும் தட்டை சுமந்து கொண்டு வந்தான். சோழன் அருகில் வந்தவன், சோழனை பரம கம்பீரமாக வணங்கி, கொண்டு வந்த பொன்னை பரிசாகத் தந்தான். பிறகு, கனிவோடு பேச ஆரம்பித்தான்.

‘‘சோழரே! பல்லக்கில் இருக்கும் மாமனிதர் எனக்கு மிகவும் வேண்டியவர். சொந்த நாட்டிலேயே இடம் இல்லாமல் என்னிடம் வந்தார். சிங்கார ராமனை பற்றிச் சொல்லிச் சொல்லி என் மனமெல்லாம் கொள்ளை கொண்டு விட்டார்.’’ பிரதாப ருத்திரன், போர் புரிய வரவில்லை என்பதை அவனது பேச்சின் மூலமாகவும், நடவடிக்கை மூலமாகவும், உணர்ந்த மன்னன், பெருமூச்சு விட்டான். ஆனாலும், தனது பெருமூச்சை ருத்திரன் கவனிக்க கூடாது என்று கவனத்தோடு விட்டான். ஆபத்தில்லை என்று தெரிந்தவுடன், நிம்மதியாக ருத்திரனோடு உரையாட
ஆரம்பித்தான்.

‘‘கற்பார் ராமனை அல்லால் மற்றும் கற்பரோ? என்பதைப் போல, கல்வியில் சிறந்த உங்களை, ராமனை பற்றிச் சொல்லி மயக்கி விட்டார்’’ சோழன், ருத்திரனிடம் தோழமையோடு பேசினான். ‘‘உண்மைதான் சோழரே! குருவாக வந்து ராமன் அருமையை சொன்னவரை கவுரவிக்க வேண்டாமா? ஆகவே, குரு தட்சணையாக என் நாட்டையே அவருக்கு காணிக்கையாக்கி, அவருக்கு நான் சேவகனாகிறேன் என்றேன்.’’ அரசுரிமையை நேசிக்கும் சோழனுக்கு, ருத்திரன் கூற்று விந்தையாக இருந்தது.

‘‘உங்கள் ராம பக்தியும் குரு பக்தியும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது’’ என்று தனது ஆச்சரியத்தை காட்டினான். மேலும் தொடர்ந்த ருத்திரன்; ‘‘ஆனால் அந்த புங்கவரோ, சோழ தேசமே என் சொந்த தேசம். அதையே நான் என்றும் கனிவாக நேசிப்பேன். ஆகவே, அங்கேயே என்னை இருக்கும் படி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். குரு கேட்டதை செய்யாமல் இருப்பது பெரும் பாவம் இல்லையா? ஆகவே, அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறேன்.’’ என்று கூறி ருத்திரன் நிறுத்தினான்.

‘‘ஆஹா.. ஆஹா..! ராமனை பற்றிச் சொல்லி தங்களையே மயக்கியவர், சோழத்தில் வாழ சோழ தேசமும் நானும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தமரை நான் தரிசிக்க வேண்டுமே. அவர் பல்லக்கில் தானே இருக்கிறார்?’’ என்ற சோழன் கேள்விக்கு ‘‘ஆம்’’ என்று கம்பீரமாக தலை அசைத்தான் ருத்திரன். அதை கேட்ட சோழன், தோளில் இருந்த வஸ்திரத்தை இடையில் கட்டிக் கொண்டு, பவ்யமாக வணங்கிய உடலோடு, பல்லக்கின் அருகே சென்றான். நிமிர்ந்து அதில் இருப்பவரை பார்த்தான்.

சோழனுக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. நிலம் பிளப்பது போல இருந்தது. அவன் அடைந்த தோல்வியை, அவனது ஆழ் மனது குத்திக் காட்டியது. அதனால், மவுனமாக பல கணம் சிலையாக நின்றான் மன்னன். மவுனத்தை கம்பர்தான் உடைத்தார் ‘‘வணக்கம் சோழ மன்னா’’ என்று. ஆம்! வந்திருப்பது கம்பரேதான். ஆனால், அவனுக்கு கம்பரின் வணக்கம் காதில் கேட்க வில்லை. ‘‘முடி மன்னரையும் முத்தமிழ் ஆளும்’’ என்று பல நாள் முன்பு கம்பன் சொன்னது இன்று செவிவழியே சென்று ஆழ் மனதை தைத்தது.

பிறகென்ன, ருத்திரனுக்கு பயந்து வேண்டா வெறுப்பாக கம்பருக்கு, சோழன், மரியாதை செய்தான். ‘‘நாடாளும் மன்னரையும் தமிழ் ஆளும்’’ என்று கம்பர் நிரூபித்ததோடு நிற்கவில்லை. தான் அடைந்த வெற்றியை, சோழ நாட்டிலேயே தங்கி சோழன் முகத்தில் பூசினார். அதனால், சோழனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

மன்னன் மனதில், ஆற்றாமை பொங்கி வழிந்தது. ருத்திரன் சொல்லிய படி, கம்பரை சென்று தினமும் வணங்கும் போதெல்லாம், அது மேலும்மேலும் வளர்ந்தது. வளர்ந்து கொண்டே வந்த வஞ்சம், கம்பரின் உயிரை பறிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணத்தை மன்னனுக்கு ஏற்படுத்தியது. ஆனால், கம்பருக்கு ஏதாவது தீங்கு செய்தால், ருத்திரன் படையெடுத்து வருவான் என்ற பயம், அவனை தடுத்தது. கம்பரை, ஒரு புலியை வைத்து அடித்து கொலை செய்து, அதை ஒரு விபத்து போல சித்தரித்துவிட்டால், நமக்கு ஒரு குந்தகமும் வராது என்று மன்னனுக்கு தோன்றியது. தனது விபரீத எண்ணத்தை செயல்படுத்த தீர்மானித்தான்.

கம்பர் வரும் வழியில், காட்டிலிருந்து வேடுவர்கள், இதற்காகவே பிடித்து வந்த புலியை, சோழன் கூண்டில் அடைத்து வைத்திருந்தான். அந்தப் புலியை பலவாறு இம்சித்து அதற்கு சினத்தை ஏற்றி, சோழனின் சேவகர்கள் தயாராக வைத்திருந்தார்கள். கம்பர் வருகிறார் என்ற செய்தி வந்ததும் கூண்டை, மறைவில் இருந்து சேவகர்கள் திறந்தார்கள். விடுபட்ட புலி, எதிரில் இருந்த கம்பரை நோக்கி வேகமாக பாய்ந்து வந்தது.

வரும் ஆபத்தை உணர்ந்த கம்பர், இனி தெய்வமே தன்னை காப்பாற்ற இயலும் என்று முடிவு செய்தார். தான் தினமும் தொழுது வணங்கும் நரசிம்மரை நெஞ்சார நினைத்து சரணாகதி செய்தார். அவரது இதழ்கள் மெல்ல பாடல்கள் சிந்த ஆரம்பித்தது.‘‘வெங்கண் சிவந்து வெடி வான் முறுக்கி வெகுண்டெழுந்து என் அங்கம் பிளக்க வரும் புலியே! அன்று இரணியனை பங்கம் படப் பட வள்ளுகிராலுரம் பற்றியுண்ட சிங்கமிருப்பது காண் கெடுவாய் என் சிந்தையுள்ளே’’என்று கம்பர் பாடினார்.

‘‘கண்கள் சிவக்க, வாலை முறுக்கி கொண்டு வெகுண்டு எழுந்து என்னை தாக்க வரும் புலியே! அன்று இரணியன் உடலை கிழித்து எறிந்த சிங்கம் என்னுள்ளே இருப்பதை காண்பாய். அந்த சிங்கத்தை நீ எதிர்த்தால் அழிந்து போவாய்.’’ என்பது பாடலின் தேர்ந்த பொருள். கம்பர் இந்த அற்புத பாடலைப் பாடி நரசிம்மரை வணங்கிய அடுத்த நொடி, அவரை தாக்க வந்த புலி ஏதோ இடி விழுந்தது போல, பெரிதாக ஓலமிட்டபடி விழுந்து மாண்டது.

கம்பனை ராமாயண அரங்கேற்றத்தின் போது காத்த நரசிங்க வள்ளல், இன்று கொடும் புலியிடமிருந்தும் காத்துவிட்டது. ஆம்! தமிழ், மாமன்னரை மட்டுமில்லை மாதவனையும் ஆளும் என்பதை கம்பர் நிரூபித்துவிட்டார். ஆபத்தில் தன்னை காத்த ஆளரியை எண்ணிஎண்ணி போற்றித் துதித்து கண்ணீர் சிந்தி அகமகிழ்ந்து போனார் கம்பர். இரணியனுக்கு அடங்காத அந்த சிங்கம், என் தமிழுக்கு அடங்குவதை அறிந்த பின், நாம் என் தமிழால் அந்த இன்னமுதை துதிக்க வேண்டாமா?

தொகுப்பு: ஜி.மகேஷ்

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!