இந்த வார விசேஷங்கள்

12-11-2022 - சனி  சங்கடஹர சதுர்த்தி

சங்கடங்களைத் தீர்த்து சகல காரியங்களையும் சித்தி தரும் சங்கட ஹர சதுர்த்தி விரதம் இன்று. விநாயகருக்கான பிரத்தியேகமான விரதம். விநாயகப்பெருமானுக்குரிய மந்திரத்தில் அவரைப்பற்றி ‘‘பிரசன்ன வதனம் சதுர்புஜம்” என்று  வருகிறது அல்லவா. அவர் நாற்கரங்களோடு, தேஜோ மயமான முகத்தோடு இருப்பதை, நான்காம் திதியான சதுர்த்தசி திதியில் வணங்கவேண்டும். இதனால், நன்மைகள் கூடிவரும். சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் காலை முதல் விரதமிருந்து, விநாயகருடைய பெருமையை எண்ணி, மாலை அவருடைய திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

எளிதில் கிடைக்கக்கூடிய அறுகம்புல் மாலை கட்டி அவருக்குச் சமர்ப்பிக்கவேண்டும். எல்லா விநாயகர் ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அதற்கு உதவலாம். விநாயகர் கவசம், விநாயகர் நான்மணிமாலை, விநாயகர் அகவல் முதலிய நூல்களைப் பாராயணம் செய்யலாம். இதனால் காரியங்களில் ஏற்படும் சிக்கல்கள் தீர்ந்துவிடும். நவகிரகங்களில் கேதுவால் ஏற்படும் அத்தனை தடைகளும் விலகும்.

13-11-2022 - ஞாயிறு  கூர குலோத்தும தாசர் திருநட்சத்திரம்

வைணவத்தில் ஆசாரியர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. அதில் கூர குலோத்தும தாசர், பிள்ளை லோகாச்சாரியாரின் சீடர். அவர் நியமித்தபடி திருவாய்மொழிப்பிள்ளை என்கின்ற ஆசாரியரை திருத்திப் பணி கொண்டவர். ஐப்பசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் அவதரித்தவர். திருவரங்கத்தில் அந்நியப் படையெடுப்பு நடந்தபோது, திருவரங்கநாதனுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தால், அவரைத் தனி பல்லக்கில் வைத்து, பிள்ளை லோகாச்சாரியார் மதுரைக்கு சென்றார். அவருக்கு நெருக்கடியான சமயத்தில் அணுக்கத் தொண்டராக இருந்தவர் கூர குலோத்துமதாசர்.

பிள்ளை லோகாச்சாரியார் தன்னுடைய அந்திமக் காலத்தில், 118-ஆம் வயதில், அப்பொழுது பாண்டிய நாட்டின் அரசனுக்கு மந்திரியாக இருந்த திருவாய்மொழிப் பிள்ளையிடம், வைணவ சமயத் தலைமையைத் தர வேண்டும் என்று தம் சீடர்களுக்கு சொல்லிவைத்தார். எப்படி ஆளவந்தார் தம்முடைய சீடர்களின் மூலமாக ராமானுஜரை அடுத்த தலைமைக்கு நியமித்தாரோ, அதைப்போலவே பிள்ளை லோகாச்சாரியார் தன்னுடைய சீடரான கூர குலோத்துமதாசர் மூலமாக திருவாய்மொழிப் பிள்ளையை நியமித்தார். ஆனால், திருவாய்மொழிப் பிள்ளையை அணுகுவது அத்தனை எளியதான காரியமில்லை.

பாண்டியநாட்டின் அரசன் இறந்து போனதால், அரசகுமாரன் பதவிக்கு வந்தார். அவனுக்கு தக்க ஆலோசனை கூறி அரசாங்கத்தை வழிநடத்த வேண்டிய கட்டாயம் இருந்தது அவருக்கு. எனவே வைணவ சமயத்தில் அதிக காலம் ஈடுபடுகின்ற வாய்ப்பு இல்லாமல் போனது. ஆயினும், அவரைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்த கூர குலோத்தும தாசர், ஒரு நாள் அவர் பல்லக்கில் வீதி வலம் வரும்போது ஆழ்வார் பாசுரங்களை மனமுருகிப் பாடினார்.

அப்போது, பல்லக்கில் இருந்தபடியே அந்த பாசுரத்தில் ஈடுபட்ட திருவாய் மொழிப் பிள்ளை, அதற்கான அர்த்தங்களைக் கேட்க, இப்படி பல்லக்கில் அமர்ந்து கொண்டு அர்த்தத்தை கேட்பது தகாது என்று கண்டித்த கூர குலோத்துமதாசர், அவருக்கு முகம் கொடுக்காது நடந்தார்.

இதைக் கண்டு வருந்திய திருவாய்மொழிப் பிள்ளை, தம் அன்னையாரிடம் நடந்த விஷயத்தைச் சொல்ல, அவர் கூர குலோத்தும தாசர் பெருமையைச் சொல்லி அவரிடம் சென்று வைணவநெறிகளின் அர்த்தங்களைக் கேட்கவேண்டும் என்று சொல்ல, மறுநாள் கூரகுலோத்தும தாசரை சந்தித்தார். தம்முடைய அரசியல் நெருக்கடிகளைச் சொல்லி, காலை பூஜை செய்யும்போது உள்ள அவகாசத்தில் தம் இல்லம் வந்து, தனக்கு நல்ல அர்த்தங்களை எல்லாம் சொல்லவேண்டும், வைணவ சமயத் தத்துவங்களை எல்லாம் சொல்லவேண்டும் என்று பிரார்த்தித்தார்.

கூர குலோத்துமதாசரும் தம் குருவின் கட்டளைப்படி, காலையில் திருவாராதனம் செய்கின்ற வேளையில் பல அர்த்த விசேஷங்களைச் சொன்னார். இதன் மூலம் அவர் திருத்தி பணிகொண்டார். அவரை திருப்புல்லாணி அழைத்துச் சென்று சகல கலைகளையும் கற்பித்தார். வைணவ சமய வளர்ச்சியில் ஈடுபடச் செய்தார். அப்படிப்பட்ட கூர குலோத்தும தாசர் அவதரித்த நட்சத்திரம் இன்றைய நட்சத்திரம் ஐப்பசி திருவாதிரை.

15-11-2022 - செவ்வாய்  சக்தி நாயனார் குருபூஜை

சோழநாட்டிலே வரிஞ்சை என்னும் ஊரிலே பிறந்தவர் சக்தி நாயனார். வேளாண்மைத்தொழில் செய்தவர். எப்பொழுதும், சிவ சிந்தனையோடு இருப்பவர். அவருடைய வழக்கம், சற்று வித்தியாசமானது. அவருடைய எதிரில் யாராவது சிவத்துரோகம் செய்தாலும், சிவ அபசாரம் செய்தாலும் சற்றும் பொறுத்துக்கொள்ள மாட்டார். சிவனை  இகழ்ந்து பேசினாலும், உடனடியாக அவரைக் கண்டிப்பார். தண்டிப்பார். இதற்கான காரணத்தைக் கேட்டபொழுது அவர் சொன்னார்; “சிவ அபசாரம் ஒருவனை நரகத்தில் தள்ளும். இப்பொழுதே தண்டனையைப் பெறுவது நல்லது. இல்லாவிட்டால், அவர்கள் மிகப் பெரிய ஆன்ம நாசத்திற்கு ஆளாகி, நரகத்தில் மீட்டெடுக்க முடியாமல் உழல்வார்கள்” என்பார்.

“ஒருவகையில் தண்டனை அவர்களுக்கு நல்லதுதான்” என்பார். அதனால் அவர் முன்னாலே சிவனைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு அனைவரும் அஞ்சுவார்கள். அவர் தம்முடைய செல்வம், நேரம், உடல் உழைப்பு இவற்றால் முழு நேரம், சைவச் சமய வளர்ச்சிக்கு தொண்டு புரிந்தார். எந்த சிவனடியார்களைக் கண்டாலும், அவர்களை அழைத்து வந்து அவர்களுக்குப் பாதபூஜை செய்து அன்னமிட்டு ஆதரித்துவந்தார். சிவன் கோயில்களுக்குத் தேவையான பல தொண்டுகளைத் புரிந்தார். நிறைவாக அவர் பிறந்த ஊரிலேயே சிவபதம் அடைந்தார். அவர் சிவபதம் அடைந்த தினம் ஐப்பசி பூசம் குருபூஜை தினமாகக்  கொண்டாடப்படுகிறது.

“கழல்சத்தி வரிஞ்சையார் கோன் அடியார்க்கும் அடியேன்” என்று அவருடைய பெருமையை சுந்தரர் போற்றுகின்றார். அவர் வாழ்வை சுருக்கமாகச் சொல்லும் பாடல் இது;

விரிதருகா விரிநாட்டு வரிஞ்சை யூர்வாழ்

வேளாளர் சத்தியார் விமலர் பாதத்

துரியவர்க ளடிபரவு மொருமை யார்நா

வோவாமே யைந்தெழுத்து முரைக்கு நீரா

ரிருளின்மிட றுடையபிரா னடியார் தம்மை

யிகழ்வார்நாத் தண்டாயத் திடுக்கி வாங்கி

யரியுமது திருத்தொழிலா வுடையார் மன்று

ளாடியசே வடிநீழ லடைந்து ளாரே.

பொருள்: சோழநாட்டிலே, வரிஞ்சியூரிலே, வேளாளர் குலத்திலே, சக்திநாயனார் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடித்தாமரைகளைச் சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்தார். அவர் சிவனடியார்களை இகழ்ந்து பேசுபவர்களை தண்டித்தார். நெடுங்காலம் பல தொண்டுகள் அன்போடு செய்துகொண்டிருந்து. சிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.

 

16-11-2022 - புதன் கடைமுகம்

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள். துலா மாதத்தில், காவிரி நிராடல் (ஸ்நானம்) மிகச் சிறப்பு. அதை செய்வதற்கான ஐப்பசி நிறைவு நாள் நீராடலுக்கு கடை முகம் அல்லது கடை முழுக்கு என்று பெயர். சைவ சமய மரபில், ஆறு தலங்கள் தென்னகத்தில் காசிக்கு நிகரான தலங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகளனைத்தும் காவேரிநதித் தீர்த்தத்தில் அமைந் ததலங்கள்.

மயிலாடுதுறை, திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு. காவிரியில், துலா கட்டம் உள்ள மாயூரத்தில் (மயிலாடுதுறை) காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே உள்ள காவிரியில், 66 கோடி தீர்த்தம் கலந்து புண்ணியம் பெருகும். மயூரநாதர், அபயாம்பிகை மற்றும் மயிலாடுதுறையைச் சுற்றி உள்ள பல்வேறு ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தவாரிக்கு வரும்பொழுது, முழுக்கு செய்வது மிகப் பெரிய புண்ணிய பலனைத் தரும்.

17-11-2022 - வியாழன்  முடவன் முழுக்கு

இன்றைய தினம் குருவாரம். கார்த்திகை மாதத்தின் முதல் நாள். மாதப்பிறப்பு. சூரியன் தனது நீசராசியான துலா ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு மாறுகிறார். விருச்சிக ராசி என்பது அவருக்கு நட்பு ராசி ஆகும். மாதப்பிறப்பு புண்ணிய காலம் என்பதால், காலையில் எழுந்து தூய்மையோடு நீராடி, மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்ய வேண்டும். இன்று ஒரு நாள் மட்டும் ஐப்பசியில் காவிரியில் நீராட இயலாதவர்கள், துலா ஸ்நானம் செய்யலாம். இந்த சிறப்பு முழுகைக்கு முடவன் முழுக்கு என்று பெயர். காவிரியின் வேறு எங்கு தீர்த்தம் ஆடினாலும், மாயூரம் (மயிலாடுதுறை) துலா கட்டத்தில் நீராடுவது மிகச் சிறப்பானது.

அபயாம்பிகை, ஈசனை வழிபட்ட கௌரி மாயூரம் அல்லவா இத்தலம். இங்கு ஓடும் காவிரியில் நீராடினால், அது புண்ணியங்களில் சிறந்த புண்ணியம் என்று அக்னி புராணம் கூறுகின்றது. அது சரி, அது என்ன முடவன் முழுக்கு? என்று கேட்கலாம். நாதசர்மா, அனவிதியாம்பிகை என்ற தம்பதியர்கள், காவிரியில் துலாஸ்நானம் செய்வதை மிகப் பெரிய புண்ணியமாகக் கருதி ஈசனை வழிபட்டார்கள். அவர்கள் கடை முகம் நாள் அன்று, மாயூரத்தில் தீர்த்தமாடி ஈசனை வணங்க வேண்டும் என்று நினைத்து, திருவையாறில் இருந்து புறப்பட்டு வந்தார்கள்.

ஆனால், அவர்கள் வந்து சேருகின்ற பொழுது கடைமுக நாள் முடிந்துவிட்டது. மாலை வந்துவிட்டது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நீராட்டம் செய்யக்

கூடாது என்கிற விதி இருப்பதால், அவர்கள் நீராடவில்லை. ஆனால், இவ்வளவு தூரம் வந்தும் தங்களால் துலா கட்டத்தில் நீராட முடியவில்லையே என்கிற ஏக்கத்தோடு ஈசனை எண்ணி வணங்கியபடி அன்றைய இரவுப் பொழுதில் ஒரு மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். அதேநேரம் கால் நடக்க முடியாத ஒரு அன்பர், எப்படியாவது கடைமுக நாள் என்று மாயூரத்தில் துலாக்கட்டத்தில் நீராடிப் பயன்பெற வேண்டும் என்று மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

அவரால் வேகமாக நடக்க முடியவில்லை. அவர் மாயூரம் வந்து சேர்வதற்குள் கடைமுகஸ்நானம் முடிந்துவிட்டது. இவ்வளவு தூரம் நடந்து வந்தும், தான் புண்ணியப் பேற்றினைப் பெற முடியவில்லையே என்று வருந்தி, ஈசனைத் துதித்தார். இவர்களுடைய நிலையைக் கண்ட ஈசன் அசரீரியாக, ‘‘நீங்கள் மூவரும் வந்து விட்டீர்கள். ஆகையினால், நீங்கள் கார்த்திகை மாதம் 1-ஆம் நாள், இந்த காவிரியில் நீராடி வணங்கினால், ஐப்பசி மாதத்தில் வணங்கிய பலனை இந்த ஒரு நாள் மட்டும் தருகின்றோம்.

நாளை காலை நீங்கள் காவிரியில் நீராடி பயன் பெறுக. நாளை (கார்த்திகை முதல் நாள்) யாரெல்லாம் காவிரியில் நீராடுகிறார்களோ, அவர்களுக்கு ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் செய்த பலன் முழுமையாகக் கிடைக்கும்” என்று சொல்லி மறைந்தார். ஆகையினால் கார்த்திகை முதல் நாள், முடவன் முழுக்கு என்ற பெயரோடு மிகச் சிறப்பாகத் துலாஸ்நான வைபவம் கொண்டாடப்படுகிறது.

தொகுப்பு: சங்கர்

Related Stories: