×

தெரிஞ்சுக்கலாம் வாங்க!: சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

‘துலுக்கானத்து’ அம்மன் என்கிறார்களே; அந்த அம்மன் பற்றி..?

ஸ்ரீதேவி, பாகவதத்தில் வியாசரால் துதிக்கப்பட்ட அம்மன். `துர்கமன்’ எனும் அசுரனால் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு காய், கனி, கீரை, கிழங்கு, தானியங்கள் முதலானவற்றைத், தற்கால ‘ஃபாஸ்ட் ஃபுட்’ போல உடனடியாக அளித்து, அவர்களின் பசியைப் போக்கி, உணர்வூட்டிய ‘சாகம்பரி’ எனும் அன்னை இவர். இந்த அன்னையைப்பற்றி ஸ்ரீஆதிசங்கரர் ‘கனகதாரா’ துதியில், ‘சாகம்பரி’ எனக் குறிப்பிடுகிறார்.

பயிர் - பச்சைகள் இல்லாவிட்டால், ஜீவராசிகள் தவிக்காதா? அவற்றை அளித்துக் காக்கும் இந்த அன்னையைத் தூய தமிழில் ‘துளிர் கா வனத்து’ அம்மன் என்கிறோம். நவராத்திரியின்போது மரம், செடி - கொடிகள், பழங்கள், கீரைகள் என அம்மன் ஆலயங்களில் வைத்து அலங்கரிப்பது இந்த ‘துளிர் கா வன’ அம்மனைக் குறித்தே செய்யப்படுகிறது. ‘துளிர் கா வனத்து’ அம்மன், ‘துலுக்கானத்து’ அம்மனாக மருவிவிட்டது.

சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக?

உயர்ந்ததான ஆரோக்கியத்தைப் பெறுவதற்காகச் செய்யப்படுவதே ‘முடி இறக்குதல்’ எனும் சடங்கு. கடல்நீரில் ஒரு விரலை ஒரு அங்குலம் நனைத்துவிட்டு, பிறகு துடைத்துவிட்டு, நாவில் வைத்துப்பார்த்தால், உப்புக் கரிக்கும்.

விநாடி நேரம் உப்புநீரில் நனைந்த விரலின் சிறுபகுதியியே, இப்படிப் பாதிப்பு அடைந்திருக்கும்போது, நம் உடம்பு? ஆம்! நாம் தாயின் வயிற்றில் இருந்தோமே; ஒரு நாளா, இரண்டு நாட்களா? முந்நூறு நாட்கள்! அம்மாவின் வயிறு என்ன ஐந்து நட்சத்திர விடுதியா? மலம் - சிறுநீர், ரத்தம் எனப் பலவும் இருக்கும். உண்ணும் உணவு வகைகள் வேறு! இவ்வளவுக்கும் மத்தியில்தான், முந்நூறு நாட்கள் கிடந்து ஊறினோம். அந்த அவ்வளவு கழிவுகளும் நம் உடம்பில் பெரும் அளவு ஊறியிருக்கும்.

ஊறிய அந்தக் கழிவுகள், கழுத்துக்குக் கீழே உள்ள உடல் பகுதிகளில் இருந்து, வியர்வை நாளங்கள் (துவாரங்கள்) வழியாகவும், மல - சலம் மூலமாகவும் வெளியேறிவிடும். கழுத்துக்கு மேல் உள்ள பகுதியில் ஊறிய அந்தக் கழிவுகள், கண்கள், காதுகள், மூக்குத் துவாரங்கள், வாய் ஆகியவற்றின் மூலம் வெளியேறும்.

கண்களுக்கு மேலே, தலைப்பகுதியில், மூளையில் ஊறிய அந்தக் கழிவுகள் எப்படி வெளியேறும்? வெளியேறாவிட்டால், பல விதமான நோய்களைக் கொண்டு வந்துவிடுமே! அந்தக் கழிவுகள் தலைமுடித் துவாரங்கள் வழியாக வெளியேறி தலையில் இருக்கும். அதைப்போக்கவே குலதெய்வப் பிரார்த்தனை என்ற பெயரில் முடி இறக்குகிறோம். மிச்சம் மீதி இருக்கும் கழிவுகளும் வெளியேறிய காலத்தில், இஷ்ட தெய்வப் பிரார்த்தனை என்ற பெயரில், இரண்டாவது முறையும் முடி இறக்குகிறோம்.முடி இறக்குதல் என்று முன்னோர்கள் செய்தது, ஆரோக்கியத்தின் அடிப்படையிலேயே அமைந்தது.

Tags : Swami ,
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்