×

சூதாடி அடியவர்க்குச் சோறிட்ட நற்சூதன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மக்கள் பொழுது போக்கிற்காகப் பலவிதமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர். பல்லாங்குழி, பந்தாடல், கழங்காடல், சதுரங்கம் எனப் பலவாறு விளையாட்டுக்கள் அவ்வப்போது வெளிப்பட்டு, புதுமையும், பொலிவும் பெறுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் பலவிதமான கிளைகள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, பந்து விளையாட்டை எடுத்துக் கொள்வோம். பூப்பந்து, இறகுப்பந்து, வளைபந்து, எறிபந்து, உதைபந்து எனப் பலவகையாகிப் பலவிதமான சட்டதிட்டங்களைப் பெற்று வளர்ந்து வருகிறது.

விளையாட்டுக்கள், வீட்டுக்குள் இருந்து ஆடுதல், வெட்ட வெளியில் ஆடுதல், பெரிய களத்தில் ஆடுதல் என பலநிலையில் உள்ளன. விளையாட்டுக்கள் மன மகிழ்ச்சியை அளிக்கத் தோன்றியவைகளேயாகும். பின்னாளில் அவை மக்களுக்கான பொழுதுபோக்காக இருந்த நிலை மாறிப் பந்தயம் வைத்து வெற்றி தோல்வி அடிப்படையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. பந்தயப் பணத்தைக் குறிவைத்து ஆடப்படுவதால், அதில் சூதுவாதும் கைகோர்த்துக் கொண்டதால், பல விளையாட்டுக்கள் சூதாட்டமாக மாறிவிட்டன.

சூதாட்டம், மனிதனின் மனதில் வேகத்தை ஏற்படுத்துகிறது. அறிவை மறைக்கிறது. கவனத்துடன் சூதுகவ்விய மனத்தவனுடன் ஆடும்போது, எதிரில் ஆடுபவர் வேகத்தால் தன்னை இழந்து விடுகின்றனர். காலப்போக்கில், அதற்கு அடிமையாகி விடுகின்றனர். பெரியோர்கள் சூதாட்டத்தைத் தீயதென்று விலக்குகின்றனர். பொய், களவு, கொலை வரிசையில் சூதையும் சேர்த்துள்ளனர். சூதாடியதால், தருமபுத்திரன் நாட்டை இழந்தான். நளன், நாட்டையும் அரசாட்சியையும் இழந்தான்.

சூதாடி, நாடிழந்து வீடிழந்து நடுத்தெருவுக்கு வந்தவர்கள் அனேகர். அதுபோலவே, சூதினால் பிறர் பொருளைக் கவர்ந்தவர்களும் நெடுநாள் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. `தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ என்றாலும், இறுதியில் தர்மமே வெல்லும் என்பது இயற்கையின் நியதியாகும். அதனால், நேர்மையான வழியில் பணம் சேர்க்க வேண்டும். தேடியபொருளை உரிய வகையில் செலவிட்டுப் புண்ணியம் சேர்க்க வேண்டும் என்பது சான்றோர் மொழியாகும். தீமையால் சேர்த்த பொருள், தீமையையே விளைவிக்கும் என்பது உறுதியாகும்.

ஆனால், இயற்கைக்கு மாறாகச் சூதாடி, ஜெயித்த பணத்தைக்கொண்டு அடியவர்களுக்கு அமுதூட்டுவதையும், சிவனடியார்க்கு உதவுவதையும் தொண்டாகச் செய்து மேன்மை பெற்ற அடியவர் வரலாற்றையும் இங்கு காண்கிறோம்.

சூது, தீது என்றாலும் அரன் அடியவர் பால் அன்புகொண்டு செய்யப்பட்டதால், சூதும் நன்மையானது. அதனால், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவரை நற்சூதன் என்றார். அந்த நற்சூதன் வரலாற்றைப் பெரியபுராணம் விரிவாகக் கூறுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தலம் திருவேற்காடு. இந்நாளில் கூவம் என்றழைக்கப்படும் பாலியாற்றின் கரையில் அமைந்துள்ளது.

கூவம் ஏரியில் தொடங்கும் இந்த ஆறு, சென்னைக்குள் வரும்வரை இன்றும் தூயதாகவும், வளம் பெருக்குவதாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இப்போது நாம் காணும் திருவேற்காடு, ஆதியில் வேலங்காடாக இருந்த தென்றும், அந்த வெள்வேலங்காட்டில் முருகன் சிவபூஜை செய்தார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அகத்தியர், இந்த தலத்தில் தவம் செய்து இறைவனின் திருமணக்கோலக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். இதை நினைவூட்டும் வகையில், கருவறையில் லிங்கத்திற்குப் பின்புறம் திருமணக்கோலமான உமாமகேஸ்வர திருக்கோலம் அமைத்து வழிபடப்படுகிறது.

இவர்களுடன் திருமணத்திற்குச் சாட்சியாக இருந்த விநாயகரும் வீற்றிருக்கின்றார். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த இந்த தலத்தில், வேளாளர் குலத்தில் தோன்றியவர் நம்மால் கொண்டாடப்படும் மூர்க்க நாயனார். இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர் தனது நினைவு தெரிந்த நாள் தொடங்கி, அடியவர்களை வணங்குவதையும், அவர்களுக்காக அமுது சமைப்பதுடன், தான் சமைத்த உணவை அடியவர்கள் உண்ணுவதைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதையும், பெரும்பேறாகக் கொண்டு ஒழுகிவந்தார்.

சாப்பாடு என்றால் எளிய உணவு இல்லை, தூய வெண்ணிறமான அரிசிச் சோறு, புதியதாக உருக்கப்பட்ட நெய், கரும்பு போன்ற இனிய இன்சுவை பண்டங்கள், பலவிதமான கறிகள் ஆகியவற்றை வைத்து உயர்ந்த நிலையில் அமுதூட்டுவது வழக்கம்.அது மட்டுமல்லாது, அவர்கள் வேண்டும் பொருட்களோடு பணத்தையும் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது உணவூட்டல், அருட்கொடை வழங்குதல் ஆகியவற்றை அறிந்த அடியவர், அதிகளவில் இவரைத் தேடி வரத் தொடங்கினர்.

அடியவரும் தளராமல் தம்மை நாடிவரும் அடியவர்க்கு விரும்பியவாறு உணவிட்டும் வேண்டியவாறு பொருட்களை அளித்தும், தமது பணியை மகிழ்ச்சியுடன் தொடர்ந்து நடத்திவந்தார். பணம் கிடைக்காதபோது, தமது வீடு வாசல் காலஓட்டத்தில் நிலம், நகை என அனைத்தையும் விற்றார். இந்த செயலால் அவரது பெரும்செல்வம் கரைந்து போனது. என்றாலும், மூர்க்கர் பலவாறு முயன்று அடியவர்க்கு அமுதளிக்கும் பணியைத் தொடர்ந்துவந்தார்.

ஒரு நாள் அடியவர், தம்மை நாடி வந்தபோது அவருக்கு உணவூட்ட வகையின்றித் தவித்துப் போய்விட்டார். அவரிடம் தீயது என்றாலும் சூதாடும் திறமை மிகுதியாக இருந்தது. சூதாட்டத்தை நடத்தி அதில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அமுதூட்டினார். சூதாட்டத்தில் வல்லவர் என்று மார்தட்டிக் கொண்ட பலரும் இவரிடம் வந்து ஆடித் தோற்றுப் பொருளை இழந்தனர். சூதாட்டத்தில் இவரை எப்போதும் வெல்ல முடியாது என்ற நிலை உருவாகியிருந்தது. இவரோடு சூதாடுவதற்கு எவருமே முன் வருவதில்லை. அதனால் பொருள் வரவு இல்லாமல் போய்விட்டது.

மூர்க்கர், திருவேற்காட்டை விட்டுப் புறப்பட்டார். பல தலங்களுக்குச் சென்று அங்குள்ள ஆலயங்களைத் தரிசித்தார். தேவைப்பட்டபோதெல்லாம் சூதாடிவென்று பொருள் பெற்றார். அதைக் கொண்டு அமுதூட்டும் பணியைச் சிறப்பாகச் செய்தார். இவ்விதம் பயணித்த அவர், கும்பகோணத்தை அடைந்தார். அங்கு தங்கியிருக்கும் நாளில் ஊர் அம்பலத்திற்குச் சென்று தாயம் உருட்டி, சூதாடி பலரையும் வென்று பெரும்பொருளைச் சேர்த்தார்.

இவர் ஆட்டத்தின்போது, மற்றவர்களைக் கவரவும், அவர்களுக்குத் தொடர்ந்து ஆட வேண்டும் என்ற வேகத்தை உண்டு பண்ணவும் தொடக்கத்தில் தோற்பார். இதைக் கண்டு எதிரில் ஆடுபவர் மனம் மகிழ்வார். பெருந்தொகையைப் பந்தயம் வைப்பார். இப்படி எதிராளி ஆட்டத்தில் கவனம் செலுத்தி, ஆடும்போது இவர் சுலபமாக வெற்றி கொள்வார். சூதாட்டத்தில் வெற்றி பெற்ற பின், உரிய பந்தயப் பணத்தை அளிக்காது மறுப்பவர்களைச் சுரிகை (மூவளைவுக் கத்தி) யால் குத்தவும் செய்வார்.

இத்தகைய செயலால் இவரை மக்கள் பிடிவாதமும், அடங்காத மனமும் நிறைந்தவர் என்றும் பொருளில் மூர்க்கன் என அழைத்தனர். காலப்போக்கில் அவரது இயற்பெயர் மறைந்து, மூர்க்கன் என்னும் பெயரே நிலைத்துவிட்டது. சூதாட்டத்தில் மூர்க்கராக இருந்த போதிலும், சிவனடியார்களுக்குச் சிறந்த அடியவராகவே இருந்தார். சூதினால் வந்த பொருளைத் தான் தீண்டவும் (தொடவும்) செய்யாமல் அடியவர்களுக்கு அமுதூட்டவே பயன்படுத்தினார். இப்படி இனிய உணவிட்டு அடியவர்களுக்கு அன்பனாகத் திகழ்ந்த மூர்க்கர், காலகதியில் சிவகதி அடைந்தார்.

சிவனடிக் கீழ் இருந்து இன்பத்தில் திளைத்து வருகிறார் என்று புராணம் கூறுகின்றது. கார்த்திகை மாதத்து மூல நட்சத்திரத்தில் இவர் சிவனடி சேர்ந்ததாக வரலாறு கூறுகிறது.
சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் இவரது வரலாற்றைப் பாடல்களில் விவரித்துள்ளார். உயர்ந்த சிவனடியார்களைக் காக்கும் பொருட்டுச் செய்யப்படும் தீயசெயலும் நன்மையே தரும் என்பதே இவரது வரலாறு விளக்கி நிற்கின்றது.

தொகுப்பு: பூசை.ச.அருணவசந்தன்

Tags : Natsudan ,
× RELATED சுந்தர வேடம்