×

திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுர சிற்பங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: ராஜ கோபுரம் (கிழக்கு வாசல்), அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை, தமிழ்நாடு.

காலம்: விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரால் பொ.ஆ. 1516ல் துவக்கப்பட்டு, தஞ்சாவூர் நாயக்க ஆட்சியாளர் செவ்வப்ப நாயக்கரால் பொ.ஆ.1590ல் கட்டி முடிக்கப்பட்டது. சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களில் `அக்னி’யின் அம்சமாக விளங்கும் இவ்வாலயம், தமிழகத்தின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்று. இவ்வாலய இறைவன் (அண்ணாமலையார்/ அருணாசலேஸ்வரர்), இறைவி (உண்ணாமுலை) பற்றி சமயக்குரவர் நால்வர் என அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பதிகம் பாடப்பெற்று பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது.

‘‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்    
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ    
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்    
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே’’
- தேவாரம் (1.10.1)


1200 ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த இந்தக்கோயிலின் வளர்ச்சிக்கு தென்னிந்தியாவின் பல முக்கிய ஆட்சியாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள், நகரத்தார்கள் பல பங்களிப்புகளைச் செய்து தற்போதைய விஸ்தீரணத்திற்கு விரிவுபடுத்தியுள்ளனர்.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வாலய வளாகத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. ராஜகோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும்.

அவற்றில், கிழக்கு ராஜகோபுரம் (கோயிலின் பிரதான நுழைவாயில்) மிக உயர்ந்தது. பதினொரு நிலைகளுடன் 217 அடி உயரம், அடித்தளத்தில் 135 அடி நீளம், 98 அடி அகலம் கொண்ட இக்கோபுரம், தமிழ்நாட்டின் இரண்டாவது உயரமான கோயில் கோபுரம். இந்த ராஜகோபுரம் விஜயநகர பேரரசர் ஸ்ரீகிருஷ்ணதேவராயரால் பொ.ஆ.1516-ல் ஆரம்பிக்கப்பட்டு, பொ.ஆ.1590-ல் செவ்வப்ப நாயக்கரால் (விஜயநகரப் பேரரசரால் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டவர், பின்னர் தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்) கட்டி முடிக்கப்பட்டது.

ஒவ்வொரு கோஷ்டத்திலும், சிவ பெருமானின் பல்வேறு பேரெழில் சிற்பங்கள், அழகிய லதா கும்பங்கள், தோரணங்கள், அலங்காரத்தூண்கள் நிறைந்துள்ள அதி அற்புத கலைப்பெட்டகமாக இந்த ராஜ கோபுரத்தை உருவாக்கியுள்ளனர்.சிவ-பார்வதி திருக்கல்யாணம், கங்காளர், பிட்சாடனார், ராவண அனுக்கிரஹ மூர்த்தி, சோமாஸ்கந்தமூர்த்தி, ரிஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், திரிபுராந்தகர், துவாரபாலகர்கள் என ஒவ்வொரு சிவ வடிவத்தின் கலையழகைக்கண்டு ரசிக்க கண்கள் போதாது.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

Tags : Tiruvannamalai East Rajagopura Sculptures ,
× RELATED சுந்தர வேடம்