×

காதல்னாலே திரில்லுதான்! ஸ்ரீகாந்த் பேசுகிறார்

2002ல் ‘ரோஜா கூட்டம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீகாந்த், மிகக்குறுகிய காலத்தில் 35 படங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மும்மொழிகளிலும் நடித்த நடிகர். தமிழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கடைசியாக ‘நம்பியார்’ படத்தில்தான் பார்த்தோம். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘உன் காதல் இருந்தால்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். தமிழ், மலையாளம் என்று இருமொழிகளிலும் இப்படம் தயாராகிறது. ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் பேயாக மிரட்டிய சந்திரிகாரவி, பிரபல மலையாள நடிகை லெனா ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தில் ரிலீஸ் பரபரப்பில் இருந்த ஸ்ரீகாந்தை சந்தித்தோம்.

“வருஷத்துக்கு நாலு படம்லாம் சலிக்காம நடிப்பீங்க. ஏன் சார் இவ்வளவு பெரிய இடைவெளி?”

“எனக்கு இந்த பிரேக் தேவைப்பட்டது. நடிகனா என்னை ஏத்துக்கிட்ட ரசிகர்கள், தயாரிப்பாளனாகவும் ஏத்துப்பாங்கன்னு நெனைச்சேன். அது நடக்கலை. சினிமாவுக்கு வந்து 15 வருஷத்துக்கும் மேலே ஆயிடிச்சி. எப்பவும் ஷூட்டிங்கில் பிஸியாவே இருந்து பழகிட்டேன். இப்போ என்னை நானே புதுப்பிச்சுக்க வேண்டியிருந்தது. அதனாலேதான் லீவ் எடுத்துக்கிட்டேன். இதோ இப்போ மறுபடியும் பிரெஷ்ஷா கிளம்பிட்டேன். ‘உன் காதல் இருந்தால்’ தவிர்த்து மூணு தமிழ்ப் படங்களில் நடிக்கிறேன். அதுலே ஒண்ணு தனுஷ் இயக்குகிற படம். இன்னொண்ணு ஹன்சிகாவோட நடிக்கிற ‘மஹா’, அப்புறம் லட்சுமிராயோட நடிக்கிற ‘மிருகா’. இவை தவிர்த்து தெலுங்கு, மலையாளம்னு ரெண்டு படம் பண்ணிக்கிட்டிருக்கேன்.”

“சாக்லேட் ஹீரோவா இளம் ரசிகைகள் உள்ளத்தை கொள்ளை கொண்ட நீங்கள், ‘உன் காதல் இருந்தால்’ படத்தில் வில்லனா நடிக்கிறதா சொல்லுறாங்களே?”

“அப்படியா சொல்லுறாங்க? இது ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். இயக்குநர் ஹாசிம் மரிக்கர், மலையாளத்தில் பெரிய தயாரிப்பு குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறவர். எனது நண்பர். அவர் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. ‘நீங்க சொன்ன மாதிரியே படத்தை எடுத்துட்டீங்கனா கண்டிப்பாக சக்சஸ் ஆகும்’னு சொன்னேன். அப்படியே செய்திருக்கார். இதுல நான் ஒரு சக்சஸ்புல் சினிமா டைரக்டரா நடிச்சிருக்கேன். வெற்றிக்காக எந்த லெவலுக்கும் இறங்குகிற ஒரு கேரக்டர். என்னை காதலிக்கும் நடிகையாக சந்திரிகா ரவிவும், எழுத்தாளராக லெனாவும் நடிச்சிருக்காங்க. யார் நல்லவர், யார் கெட்டவர்னு யாராலும் தீர்மானிக்க முடியாது. என்பதுதான் படத்தின் ஒன் லைன். இதில் ஹீரோ, ஹீரோயின்னு யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது, எல்லோருக்குமே முக்கியத்தும் இருக்கு.”

“சைக்காலஜிக்கல் திரில்லர் என்கிறீர்கள்? ஆனால் தலைப்பு காதலை குறிக்கிறதே?”

“இதே கேள்வியைத்தான் நான் இயக்குநரிடமும் கேட்டேன். எல்லாவற்றும் மூல காரணமே காதல்தான். அதிலிருந்துதான் பிரச்சினைகள் தொடங்குகிறது என்றார். இதையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கு. படம் சஸ்பென்ஸ் ஜார்னர்ங்றதால சொல்ல முடியல. ஆனா ஒண்ணு என் அனுபவத்துலே சொல்லுறேன். காதலும் திரில்தான்!”

“லெனாவைப் பத்தி நீங்க புகழ்ச்சியா பேசுறீங்களே?”

“அவங்க ரொம்ப ஆச்சர்யமான நடிகை. எல்லாத்தையும் கண்ணுலேயே பண்ணிட்டு போயிடுவாங்க. அவுங்களோட பிரேமுல நின்னா நல்லா நடிச்சே ஆகணும். இல்லேன்னா காணாம போயிடுவோம். அவுங்க நடிச்ச மலையாளப் படங்கள் நிறைய பார்த்திருக்கேன். அவுங்க கூட நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். அவுங்கிட்டேருந்து நிறைய கத்துக்கிட்டேன். தமிழ்ல அனேகன் படத்துல மட்டும் நடிச்சாங்க. தொடர்ந்து அவுங்க தமிழ்ல நடிக்கணும் அவுங்ககிட்ட கேட்டுக்கிட்டேன். இப்போ விக்ரம்கூட ‘கடாரம் கொண்டான்’ படத்துலே நடிக்கிறதா சொன்னாங்க. வாழ்த்து சொன்னேன்.”

“சந்திரிகா ரவிங்கிறதாலே முரட்டுத்தனமா கிளாமர் எதிர்ப்பார்க்கலாமா?”

“ஒரு நடிகனையோ, நடிகையையோ அவங்க நடிச்ச ஏதோ ஒரு படத்தை வெச்சு எடைபோடக் கூடாது. சந்திரிகா, இதுக்கு முன்னாடி நடிச்ச  ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ இமேஜை உடைக்கிறதுக்காவே இந்தப் படத்துலே வெறித்தனமா நடிச்சிருக்காங்க. படத்துலே அவுங்க கேரக்டரும் ஒரு கிளாமர் நடிகையோட கேரக்டர்தான். ஆனால் அந்த நடிகையோட இன்னொரு வாழ்க்கையை திரையில கொண்டு வந்திருக்காங்க”

“இயக்குநராக நடிக்க யாரை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டீங்க?”

“நான் நடித்திருப்பது ஒரு சிக்கலான இயக்குனர் கேரக்டர். இதுல நான் யாரையும் நினைவு படுத்துற மாதிரி நடித்தால் அவர்கள் ்இமேஜூக்கு பாதிப்பு வரலாம். அதனால் படத்தோட இயக்குநரிடம் என்னை ஒப்படைச்சிட்டேன். அவர் சொன்னதை செய்தேன். அவர் யாரை மனதில் வைத்துக் கொண்டு எனது கேரக்டரை உருவாக்கினார் என்று எனக்குத் தெரியாது.”

“திடீர்னு மலையாளப் படத்துலே நடிப்பது ஏன்?”

“சில வருடங்களுக்கு முன்பு ‘ஹீரோ’ங்குற படத்துலே பிருத்விராஜோடு நடிச்சிருக்கேன். அந்த ஒரு படமே என்னை மலையாள ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துச்சு. அதற்கு பிறகு இந்த வாய்ப்பு கிடைச்சது. அடுத்தும் ஒரு படத்துல நடிக்கிறேன். இப்போ மலையாளம் பேச கத்துக்க
ஆரம்பிச்சிருக்கேன்.”

“இப்போது ஹீரோக்கள் வில்லனாக நடிக்கிற காலம், நீங்களும் வில்லனாக நடிப்பீர்களா?”

“நடிகன்னா எல்லா ரோலும் பண்ண ரெடியாதான் இருக்கணும். ‘மிருகா’ படத்தில் நான்தான் ஹீரோ, நான்தான் வில்லன். ‘சிகப்பு ரோஜாக்கள்’ மாதிரியான கதை. நிச்சயம் அதில் இன்னொரு ஸ்ரீகாந்தை நீங்க பார்க்கலாம். ‘சவுகார்பேட்டை’, ‘நம்பியார்’ படங்களிலேயே எனக்கு இருந்த சாக்லேட் பாய் இமேஜை உடைச்சிட்டேன். மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் வில்லன் கேரக்டர் என்றால்... அது வலுவாக இருந்தால் நடிக்க எனக்கு தயக்கம் இல்லை.”

“அடுத்த ரவுண்டுல பிசியாயிட்டீங்க... என்ன மாறுதல் உங்களிடம்?”

“நான் எப்போதுமே பழைய ஸ்ரீகாந்த்தான். படங்களை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். முன்பு என்னுடைய நல்லவன் இமேஜ் முக்கியமா இருந்திச்சு. ஆனா இப்போ அப்படியில்லை. நடிப்புன்னு வந்துட்டா இறங்கி அடிக்க வேண்டியதுதான்னு முடிவு பண்ணியிருக்கேன்.”

Tags : Srikanth ,
× RELATED பாலியல் தொல்லை தொடர்பாக அனைத்து...