×

வேண்டும் வரம் தந்தருளும் ஸ்ரீவேணுகோபாலசுவாமி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டை கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவேணுகோபாலசாமி கோயில் அமைந்துள்ளது. நின்ற திருக்கோலம், சயனத் திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம் என ஒரே இடத்தில் மூன்று திருக்கோலத்திலும் விஷ்ணு பகவான் காட்சி கொடுத்த இடம் வெங்கடாம்பேட்டை  வேணுகோபால சுவாமி திருக்கோயில். கி.பி. 1464-ல் செஞ்சியை ஆட்சி செய்தவர் வேங்கடபதி நாயக்கர். தனது பாசத்துக்குரிய சகோதரி வேங்கடம்மாளின் பெயரில் இவர் நிர்மாணித்த ஊர்தான் வெங்கடாம்பேட்டை.

7 தலை பாம்பின் மீது சயனம்  

கருங்கற்களால் கோயில் கட்டப்பட்டுள்ளது, மூலஸ்தானத்தில் ஸ்ரீவேணுகோபாலன், ருக்மணி, சத்தியபாமா ஆகியோர் சமேதமாக காட்சியளித்து அருள்பாலிக்கின்றனர். கிழக்கு மேற்கில் 236 அடி நீளமும், தெற்கு வடக்கில் 129 அடி அகலமும் கருங்கல் சுவர் அமைந்துள்ளது. அதனுள் செங்கமலத்தாயார், ஆண்டாள் சன்னதிகள் தனித்தனியே உள்ளது. கோயில் வாயிலின் முன் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயிலின் எதிர்ப்புரத்தில் 50 அடி உயரத்தில் மிகப்பெரிய கருங்கல் ஊஞ்சல் மண்டபம் உள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு யானை மண்டபம், தேர் மண்டபம், ஒரு  ஏக்கர் பரப்பளவில் 7 கிணறுகளுடன் கூடிய தீர்த்தக்குளம் உள்ளது. ஸ்ரீரங்கத்தை காட்டிலும் இங்குள்ள அனந்தசயன ராமர் ஏழு தலைகள் கொண்ட பாம்பின் மீது சயனம் கொண்டிருக்கும் காட்சி வேறு எங்கும் காண முடியாது என்றும் கூறப்படுகின்றது. மேலும் சிவனைக் காப்பாற்ற கிருஷ்ண பகவான் மோகினி அவதாரம் எடுத்ததாக கூறப்படும் புராணக் கூற்றுக்கு ஏற்ப மோகினி அவதாரத்துடன் கூடிய கிருஷ்ணன் சிலையும் இங்குள்ளது.

3 திருக்கோலத்தில் மகாவிஷ்ணு

இத்திருத்தலத்தில் மகா விஷ்ணுவானவர், நின்ற திருக்கோலத்தில் பாமா - ருக்மணி சமேத ஸ்ரீவேணு கோபாலனாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் வைகுண்டவாசப் பெருமானாகவும், சயனத் திருக்கோலத்தில் அனந்தன் மீது அறிதுயில் கொண்ட ஸ்ரீஅனந்தசயன ராமனாகவும் காட்சி கொடுக்கிறார். இம்மூன்று திருக்கோலங்களையும் ஒருங்கே வணங்கும் அடியவர்கள் வேண்டிய வரங்களையும், அனைத்துச் செல்வங்களையும் பெற்று வாழ்வில் நிலையான வெற்றியைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

செல்வது எப்படி?

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், வடலூரில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதி உண்டு.

Tags : Srivenukopalaswamy ,
× RELATED வேண்டும் வரம் தந்தருளும் ஸ்ரீவேணுகோபாலசுவாமி