×

மஹாபலியைவிட கர்ணன் ஏன் உயர்ந்தவன்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கிருஷ்ண அமுதம் - 35


(பகவத் கீதை உரை கர்ம யோகம்)

பிரதிபலனை எதிர்பாராது மேற்கொள்ளும் கர்மாக்களே உயர்வானது என்கிறார் கிருஷ்ணன். தன்னுடைய முந்தைய ஒரு அவதாரத்திலேயே சம்பவபூர்வமாக அதை உறுதி செய்தவர். ஆமாம்! மஹாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்ததே பிரதிபலனை எதிர்நோக்குவதாகிய அகந்தையை அழிக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

அந்த அகந்தையும் செல்வச் செருக்கால் ஏற்பட்டதல்ல, மெத்தப் படித்ததால் ஏற்பட்டதல்ல, அனைவருக்கு இல்லையென்னாது ஈதல் செய்த தன் நற்குணத்தால் ஏற்பட்டது!வித்தியாசமான, ஆழ்ந்த சிந்தனைக்குரிய ‘அகந்தை’ அது. ஆமாம், சக்கரவர்த்தி மகாபலி, தான் செய்யும் தான நற்பண்பில் அவனே அறியாமல் அவனுக்குள் விதைக்கப்பட்டிருந்த அகம்பாவம் என்ற சிறு பொறியை அந்த அளவிலேயே அணைத்துவிடத்தான் வாமனன் வந்தான்.

சிறுவன் கேட்டது மூன்றடி மண்தானே என்ற அலட்சியம், மகாபலி நீர்க்கெண்டியைத் தூக்கிய பாவனையிலேயே தெரிந்தது. வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என்ற உண்மையைத் தெரிந்துகொண்ட குருநாதர் சுக்கிராச்சார்யார், மறைமுகமாக தடுத்தபோதும் அவனிடமிருந்த அலட்சியம் விலகவில்லை. ‘யார் எவ்வளவு கேட்டாலும் அளிக்கக்கூடிய அளவுக்கு செல்வம் உடையவன்நான். அதனால் தானே, என் புகழ் வைகுண்டம் வரைக்கும் பரவியிருந்ததால்தானே, மஹாவிஷ்ணுவே என்னிடம் யாசகம் கேட்டு வந்திருக்கிறார்! இதைவிட பெரும்பேறு எனக்கு வேறு என்ன வேண்டும்! அதே சமயம், என்னிடம் வெறும் மூன்றடி மண் கேட்டு, ஒரு பாலகனாக இவர் வந்திருப்பதுதான் என்னை அவமானப்படுத்தும் செயலாக எனக்குப்படுகிறது. அவருடைய இயல்பான தோற்றத்துடன் வந்து, என்னை கௌரவப்படுத்தும் வகையில் மிகப் பெரிய யாசகம் எதையேனும் இவர் கேட்டிருக்கலாம். அற்பமான மூன்றடி மண்… ஹும்… எடுத்துக் கொள்ளட்டும்’ என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டான்.

வாமனன் விஸ்வரூபம் எடுப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லைதான். மண்ணையும், விண்ணையும் ஈரடிகளால் ஒருசேர அளந்த விஸ்வரூபன், மூன்றாவது அடிக்கு இடம் கேட்டபோதுதான் அவனுடைய அறிவு விழித்துக் கொண்டது. அகந்தையும், ஆணவமும் விலகி ஓடின. தலை தாழ்த்தி, தன்னையே தானமாக அளித்தான் மகாபலி. வசதிகளையும், செல்வங்களையும் இறைவன் வாரி வழங்கியிருக்கிறான் என்றால், அவற்றை தேவைப்படுவோருக்கு தானமாக அளிக்கத்தான் என்பதையும் அதில் பெருமைப்பட்டுக்கொள்ள அந்த இறைவனைத் தவிர, அவ்வாறு செல்வம் படைத்த யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் அந்த சக்கரவர்த்தி புரிந்து கொண்டான்.

மகாபாரத இதிகாசத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கர்ணன். கலைஞன் என்று சொல்வதுபோல, இவனை கொடைஞன் என்றே சொல்லலாம். மிகவும் இளகிய மனம் கொண்ட கொடைஞன். இத்தனைக்கும் இவன் அள்ளிஅள்ளிக் கொடுத்தது எதுவுமே இவன் சம்பாதித்தது இல்லை. எல்லாமே நண்பன் துரியோதனன் அளித்தவை. அதனாலேயே ஆரம்ப கட்டத்திலேயே அந்தப் பொருட்கள் எதுவும் தனக்கு உரிமையானதல்ல என்ற அழுத்தமான எண்ணம் அவனுக்குள் வேரூன்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்! தான், தன் சொந்த உழைப்பால் சேகரித்த பொருளையே இல்லாதோருக்கு வழங்கத்தான் இறைவன் பணித்திருக்கிறான் என்றிருக்கும்போது, வெறும் நட்புக்காகத் தன்னிடம் வந்து சேர்ந்திருக்கும் செல்வ வளங்களை தானே சுயார்ஜிதம் செய்துகொள்ள தனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று யோசித்த, கொஞ்சம்கூட சுயநலமில்லாத தூயமனதுடையவன் கர்ணன்.

வெற்றுடலுடன் ஒரு நதியால் அடித்து வரப்பட்டு கரைசேர்க்கப்பட்டானே அதை அவன் மறக்கவில்லை. அதனாலேயே அதே நிலையிலும், எதையும் தனக்கு உரிமையானதாக, உடைமையானதாக ஏற்றுக்கொள்ள விரும்பாமல் அவனால் வாழ முடிந்தது. இவ்வளவு ஏன், பிறவியிலிருந்தே தன்னுடலுடன் ஒட்டி வந்த, தனக்கே, தனக்கு மட்டுமே சொந்தமான கவச குண்டலங்களை கொஞ்சமும் யோசிக்காமல் தானமளித்த பெருந்தகை அல்லவா அவன்!  

தான் ஈட்டியதாக இல்லாவிடினும் தன்னிடம் ஏகப்பட்ட சொத்துகள் வந்து சேர்ந்திருக்கின்றன. அதனாலேயே அவற்றைத் தனக்கு சொந்தமென்று உரிமை கொள்ள முடியாது. இந்த கட்டத்தில் அந்த சொத்துகளையெல்லாம் வறியோருக்கு தானமாக அளிப்பதுதானே முறை? இப்படித்தான் கர்ணன் சிந்தித்திருக்க வேண்டும். அதனால்தான் அவன் மகாபலி சக்கரவர்த்தியைவிட மேலானவனாகத் திகழ்கிறான். ஏனென்றால் கர்ணனுடைய தானத்தில் கர்வமில்லை. எதிர்பார்ப்பு இல்லை. விளம்பரம் தேடும் ஆர்வமில்லை.

ஆகவே, தானம் என்றில்லை, மனிதன் செய்யும் எந்த கர்மாவிலும் அவன் பலனை எதிர்பார்க்காத துறவுநிலையைக் கொள்ளவேண்டும் என்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்வதுபோல நமக்கு அறிவுறுத்துகிறார்.சரி, இப்படி நல்லெண்ணத்துடன் கர்மாவை இயற்றவேண்டிய கடமையிலிருந்து மனிதன் விலகினானால் அவனுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? இதற்கு கிருஷ்ணன் பதிலளிக்கிறார்:

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நானுவர்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த்த ஸ ஜீவதி (3:16)

‘‘மனிதன் கர்மாக்களை இயற்றவேண்டும் என்பது இறைவன் அமைத்துத் தந்த இயற்கைத் திட்டம். இத்தகைய உலக பிரவிருத்திச் சுழற்சியில் கலந்து கொண்டு, யாகங்களையும், கர்மாக்களையும் செய்துவர வேண்டியவனே மனிதன். ஆனால், இந்தச் சுழற்சிக்கு உட்பட விரும்பாதவன் பாப வாழ்க்கை, வாழ்பவனாகக் கருதப்படுவான். தன் புலன்களால் ஆட்டுவிக்கப்படும் அறிவிலியாவான். இத்தகையவர்கள் பிறந்தும் பிறவாதிருப்பவர்களேயாவார்கள்!’’

பூவுலகில் உயிர்களைப் பேணிக் காப்பதற்கும், அவற்றை மேம்படுத்தவும், இறைவனால் இயற்கைச் சக்கரம் இயக்கப்படுகிறது. இந்த சக்கரத்தின் சுழற்சிக்கு உட்பட்டு இயங்கவேண்டியவன் மனிதன். அவ்வாறு இயங்காதவன் மனிதப் பிறவி எடுத்தும் பயனில்லாதவனாவான். ஒரு சிறுவன் பள்ளிக்கூடம் போகிறான். அங்கே அவன் ஆசிரியருக்கு உரிய மரியாதை செலுத்தி, தன்னுடைய வகுப்புப் பாடங்களைப் பயில வேண்டியது அவனுடைய கடமை. ஆனால், அவன் அவ்வாறு பயிலாமல், கல்விக் கடமையை மேற்கொள்ளாதவனாக இருந்தானானால் அவன் பள்ளிக்குப் போயும் மாணவனாகக் கருதப்படமாட்டான். அதாவது அவன் பள்ளிக்குப் போவதற்குப் போகாமலேயே இருந்திருக்கலாம்.

ஏதேனும் ஒரு வேலையை முடிக்க வேண்டி ஒருவன், ஒரு ஊருக்குச் செல்கிறான். அங்கே போயும் அவன் தன்னுடைய வேலையை முடிக்க முடியாதவனாக இருந்தானானால் அவன் அந்த ஊருக்குப் போயும், போகாதவனாகவே ஆகிறான். அதாவது தன்னுடைய வேலையை, முடிக்கவேண்டிய இடத்துக்குச் சென்றும் முடிக்க இயலாதவனாக அவன் ஆகிவிடுகிறான். அதுபோல, இந்த உலகத்தில் பிறந்த ஒருவன் இறைவன் படைத்திருக்கும் இயற்கைச் சுழற்சிக்குள் தன்னை உட்படுத்திக்கொண்டு இயங்க விரும்பாதவனாக இருந்தால், அவன் பிறந்தும் பிறவாதவனாகவே கருதப்படுவான். வாழ்ந்தும் வாழாதவனாவான்.

தான் ஐம்புலன்களுடனேயே பிறந்திருப்பதால், அந்தப் புலன்களின் இச்சைப்படிதான் வாழ்க்கையை நடத்துவேன் என்று அவன் வீம்பாக நடந்து கொள்வானானால், அவன் பிறப்பின் அர்த்தத்தையும், புலன்களின் சரியான செயல்பாடுகளையும் அறியாதவனாகவே இருக்கிறான். பார்ப்பது, கேட்பது, சுவாசிப்பது, உண்பது, ஸ்பரிசிப்பது ஆகிய எல்லா நடவடிக்கைகளிலும் நன்மையானவையும் இருக்கின்றன; தீமையானவையும் இருக்கின்றன.

இவற்றில் எது நன்மையோ, எது எல்லோருக்கும் நன்மை பயக்குமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டியது மனிதனின் பொறுப்பு. அதை விட்டுவிட்டு தற்காலிக சுகத்தையும், விரைவில் மறைந்துவிடும் பலனையும் அனுபவிப்பதுதான் வாழ்க்கை என்று சுய சந்தோஷத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து, அந்த ஐம்புலன்களின் தீய சுகங்களுக்கு அடிமையாகி வாழ்வது மனித இயல்பல்ல.

இப்படி ஐம்புலன்களும் அவற்றுக்குரிய ஆக்க பூர்வமான பொறுப்புகளை நிறைவேற்றினால் மட்டுமே மனிதனால் கர்மாவை எளிதாக ஈடேற்ற முடியும். சரி, இப்படி முறையாக கர்மம் ஆற்ற வேண்டியது மனிதனின் தலையாய கடமை என்றால், அவ்வாறு ஆற்றாமலிருப்பது அவன் பிறப்பெடுத்ததற்கே இழுக்கு என்றால், இதில் விதிவிலக்கு என்று உண்டா? இன்னார் தம் கர்மாக்களை ஆற்ற வேண்டாதவர் என்று யாரையாவது குறிப்பிட முடியுமா?

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மானவ
ஆத்மன்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே (3:17)

‘‘விதிவிலக்கு உண்டு. யார் ஒருவன் ஆன்மாவில் இன்புற்று ஒழுகுகிறானோ அவன் கர்மங்கள் செய்வதிலிருந்து விடுபடலாம். ஏனென்றால், அவன் ஆன்மாவில் திருப்தி அடைபவன். ஆன்மாவிலேயே மகிழ்ந்திருப்பான். ஆகவே அவனுக்குக் கர்மாவை ஆற்ற வேண்டிய கடமை இல்லை.’’

மனதுக்கும் ஆன்மாவுக்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மனது, ஐம்புலன்களால் ஆட்டுவிக்கப்படுகிறது என்றாலும், சில விநாடிகளில் அதுவே அந்த புலன்களுக்கு அதிபதியாகவும் ஆகிவிடுகிறது. ஆமாம், ஒரு நல்ல காட்சியை ஒருவன் காண்கிறான் என்றால் மனம் அந்தக் காட்சியின்பால் ஈர்க்கப்படுகிறது. காட்சியின் கவர்ச்சியில் நிலைக்கிறது.

அந்தக் கவர்ச்சியை முழுமையாக அனுபவித்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கிறது. ஆனால், எது முழுமை என்பதை அந்த மனம் அறியாது. சோர்வுறும் கட்டம்தான் முழுமை என்று வைத்துக்கொண்டால், அந்தச் சோர்வினால், அதுவரை நுகர்ந்த காட்சிக் கவர்ச்சி மீது வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே முழுமையாக அனுபவித்தல் என்பதில் தன் கணக்கு தவறு என்பதை அவனால் உணரமுடிகிறது.

இதற்கு இன்னொரு சரியான உதாரணம், சாப்பிடுவது. பசியாயிருக்கும்போது உணவில் ஆர்வம் ஏற்படுகிறது. இந்த உணவும் மிகவும் மணம் மிக்கதாக, சுவையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்போதைய பசி தீர்ந்தால் போதும். இந்தப் பசி எப்போது தீரும்? வயிறு நிரம்பினால் தீரும். சரி, வயிறு நிரம்பிவிட்டது, பசியும் ஆறிவிட்டது. ஆனாலும் உணவின் மணத்திலிருந்தும், சுவையிலிருந்தும் மனம் விலக மறுக்கிறது. அது இன்னும் கொஞ்சம் சாப்பிடச்சொல்லி வாயை, நாவை வற்புறுத்துகிறது.

(‘எப்போது இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே’ என்று தோன்றுகிறதோ அப்போது எழுந்து கைகழுவிவிட வேண்டும்’ என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. அதே சீனத்தில் ‘வயிற்றைக் கேட்டுக்கொண்டுதான் வாய் சாப்பிடவேண்டும்’ என்ற பழமொழியும் உண்டு!) இப்படி தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தால், வயிறு உப்பி, கெட்டுப்போய் விடுகிறது. விளைவு? அதன்பின் எதையுமே சாப்பிட முடியாதபடி வயிற்றில் உபாதை சேர்ந்துவிடுகிறது. அது முழு உடலையும் ஒட்டுமொத்தமாகப் பாதித்துவிடுகிறது. தன்னால்தானே வயிறு கெட்டது என்று வாயும் நாவும், அதற்கான தண்டனையாகக் கசப்பு மருந்தையும் விழுங்கவேண்டியிருக்கிறது!

இப்படி புலனுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றின் இச்சையைப் பெருக்கி பெரும் வேதனையை சம்பாதித்துக்கொள்வதைவிட, ஆன்மாவில் மகிழ்ந்திருப்பதாகிய செய்கை உன்னதமானது. இப்படி உலகப் பொருட்களைப் புலன்களால் பற்றுவோமானால் அப்போது கர்மம் நீடித்ததாகிறது. ஏனென்றால் ஆன்மா என்பது முற்றிலும் ஆனந்த சொரூபமானது. ஆகவே மனம் ஆன்மாவைப் பற்றுமானால் அதற்கு நிலைத்த இன்பம் ஏற்படுகிறது. அது இப்போதுதான் முழுமையாக மகிழ்வடைகிறது. இப்போதுதான் உண்மையாக திருப்தி கொள்கிறது.

இயல்பான கர்மங்களை ஈடேற்றிக் கொண்டு இருக்கும்போதே, அது ஆன்ம வயப்பட்டதாகவும் இருக்குமானால் அப்போது மனம் அமைதியடைகிறது. மேன்மையடைகிறது. ஒரு நதியின் செயல், ஓடிக்கொண்டேயிருப்பதுதான். தன் பாதையில் அது எத்தனையோ மேடுபள்ளங்களைச் சந்திக்கிறது. தன் வழியிலிருக்கும் பயிர்களை வாழவைக்கிறது. தன் வேகத்துக்கேற்ப பலவற்றை அடித்துக் கொண்டும் செல்கிறது. இப்படி ஆரவாரமும், ஆர்ப்பாட்டமும் கொண்டு ஓடுகிற நதி நேரே கடலில் போய் கலக்கிறது. அப்படி கலந்துவிட்டபின், அது அமைதியாகி விடுகிறது. அதற்குமேல் அது தன் கர்மத்தினைத் தொடர்வதில்லை, அதற்கான அவசியமும் இல்லை.

இதேபோலத்தான் ஆன்மாவில் இன்புற்று ஒருவன் செயலாற்றுவானானால், அவன் தொடர்ந்து கர்மங்களை இயற்ற வேண்டியிருக்காது. அதாவது ஜீவாத்மா, பரமாத்மாவோடு இணைந்து ஒரு சுகாநந்த அனுபூதியில் திளைக்கும் நிலைமை அது. இதற்குச் சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி ஜீவாத்மா காத்திருக்க வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இந்த இணைவிற்கு கடிகார முட்களை உதாரணமாகக் காட்டுகிறார். நிமிட முள்ளும், மணி முள்ளும் தனித்தனியேதான் ஒரு கடிகாரத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், ஒவ்வொரு மணி நேரத்துக்குள்ளும் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்துவிடுகின்றன. மணி முள்ளை பரமாத்மாவாக வைத்துக்கொண்டால், எந்நேரமும் சுற்றிக்கொண்டிருக்கும் நிமிட முள்ளை ஜீவாத்மாவாகக் கொள்ளலாம். இந்த ஜீவாத்மா, பரமாத்மாவைத் தேடித்தேடிச் சென்று அதனுடன் சந்தோஷமாக இணைகிறது. மீண்டும் லௌகீக கடமைகளால் பிரிந்து, ஒரு சுற்று சுற்றிவந்து அடுத்த மணிநேரத்தில் மீண்டும் இணைகிறது. இப்படி ஆத்மாவில் மகிழ்ந்திருக்கக்கூடிய மனிதன், தன் வினைகளை ஆற்றும் கடமையிலிருந்து விடுபடக் கூடியவனாக இருக்கிறான்.  

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

Tags : karnan ,Mahabali ,
× RELATED கம்பர் – இராமாவதாரம்