×

அன்னப்படையல் விழா

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வைரவர் சிறுத்தொண்டருக்கு அருள்புரிந்ததை, நினைவூட்டும் ஐதீக விழா, `அமுது படையல் விழா’ என்னும் பெயரில் திருச்செங்காட்டங்குடியில் ஐப்பசி பரணியன்றும் சித்திரைப் பரணியன்றும் நடைபெறுகிறது. அதில், வைரவராக விளங்கும் உத்திராபதியார் பகலில் உணவு கேட்டுத் திருவீதி எழுந்தருளி உலா வருகின்றார். பின்னர் ஆலயத்தின் முற்றத்திலுள்ள ஆத்தி மரத்தின் கீழ் எழுந்தருள்வார்.

அவருக்கான அன்றைய பூஜைக் காலங்கள் அங்கேயே நடத்தப்படும். நள்ளிரவில் ஆலயத்திற்குத் தென்மேற்கில் (தெற்கு மாடவீதியும், மேற்கு மாடவீதியும் கூடுமிடத்தில்) உள்ள சிறுத்தொண்டார் திருமாளிகைக்கு உணவுண்ண எழுந்தருள்கின்றார். அங்கு கதவை மூடிவைத்து, நிவேதனம் செய்கின்றனர். வெளியிலிருந்தவாறு, சிறுத்தொண்டர் புராணம் ஓதப்படுவதுடன், ஒற்றைத் தட்டாகப் பறையடிக்கப்படுகிறது.

அதிகாலையில், உத்திராபதியார் விரைந்து ஆலயத்திற்குத் திரும்புவதும், உடனே பெருமான் சோமாஸ் கந்தராக வெள்ளி இடப வாகனத்தில் காட்சியளித்தலும் நடைபெறுகின்றன. சிறுத்தொண்டர், சீராளதேவர், சந்தன நங்கை, வெண்காட்டு நங்கை ஆகியோரின், திருவுருவங்கள் தனித்தனியாக சுவாமிக்கு எதிரில் எழுந்தருளுதல் செய்து தீபாராதனை நடைபெறுகிறது.தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள பல ஊர்களில், அன்னக்கொடி உற்சவம் என்ற பெயரில் சிறுத்தொண்டர் அன்னம் படைத்த நிகழ்ச்சி, வெகு விமர்சியாக, கொண்டாடப்படுகிறது. இதற்கென ஊரின் மத்தியில், ஆத்தி மரத்தையும் வளர்த்துவருகின்றன.

சிறுத்தொண்டரிடம் சென்று பெருமான் உணவு கேட்பது, சீராளனைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்து சமைப்பது, அடியவருக்கு உணவிடுவது, சீராளன் உயிர்த்து வருதல் ஆகியவை நாடக வடிவில் நடித்துக்காட்டப்படும். மூட்டைக் கணக்கில் அரிசியை சமைத்து, ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவிடுகின்றனர். இதை அன்னப் படையல் விழா எனவும் அழைப்பர்.

அன்னக்கொடி

அன்பர்களுக்கு உணவளிக்கப்படும் இடம் என்பதைக் குறிக்கும் வகையில், ஏற்றி வைக்கப்படும் காவிக்கொடிக்கு அன்னக்கொடி என்பது பெயர். ஒரு வீட்டுவாசலில், காவிக்கொடி கட்டியிருந்தால், அன்பர்கள் அங்கே சென்று உணவருந்தலாம் என்பது அந்தக் காலத்தின் வழக்கம். அந்த காலத்தில், அன்பர்கள் யாரிடமும் சென்று உணவு கேட்பதில்லை. இப்படி, கொடி கட்டியிருக்கும் இடத்திற்குச் சென்று அங்கே உணவருந்துவர்.

சிறுத்தொண்டர், அன்பர்களுக்கு அவர்கள் விரும்பியவாறு உணவூட்டும் பணியைச் செய்து வந்ததால், காவிநிறம் படைத்த அன்னக்கொடியை ஏந்தியிருந்தார். திருவாவடுதுறையில், நமச்சிவாய மூர்த்திகளின் குரு பூஜை விழாவில், அன்னக்கொடி ஏற்றப்படும். சோறு மணக்கும் மடம் என்று இந்த திருமடம் சிறப்பிக்கப்படுவது இங்கே சிந்திக்கத்தக்கதாகும்.

தொகுப்பு: பரிமளா

Tags : Annapapayal festival ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?