×

மூவர் தொடங்கிவைத்த அருளிச்செயல்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முதலாழ்வார்கள் அவதார விழா - 1:11:2022 முதல் 3:11:2022 வரை

சைவத்தில் தேவாரம் முதலிய திருமுறைகள் எப்படியோ, அப்படி வைணவத்தில் `நாலாயிரதிவ்யப் பிரபந்தம்’ என்று அழைக்கப்படும் அருளிச் செயல்கள். திருமுறைகள் ஓதாமல் சைவ வழிபாடு நிறைவு பெறுவதில்லை. `திவ்யப் பிரபந்தம்’ எனும் அருளிச் செயல் ஓதாமல் வைணவ வழிபாடு நிறைவு பெறுவதில்லை.

ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு ஏற்றம்

அதிலும், வைணவத்தில் ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு மிகப்பெரிய ஏற்றம் உண்டு. கருவறையில் ஆழ்வார்களின் தமிழ் பாடல்களைப் பாடித்தான் வழிபாடுகள் தொடங்கும். `சாற்றுமுறை பாசுரங்கள்’ என்று ஆழ்வார்களின் பாடல்களைப் பாடித்தான் வழிபாடு நிறைவுபெறும். நான்கு ஆயிரம் பாசுரங்களையும் பாடியவர்கள், 12 ஆழ்வார்கள். இந்த ஆழ்வார்களின் அவதாரத்தை மணவாள மாமுனிகள் தம்முடைய `உபதேச ரத்தின மாலை’ நூலில் வரிசைப்படுத்துகிறார்.

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
ஐய்யன் அருள்மாறன் சேரலர்கோன் - துய்யபட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு
2. 12 ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் மூவர்.

முதல் ஆழ்வார்கள்

பொய்கை ஆழ்வார், காஞ்சி மாநகரம் திருவெக்கா பகுதியிலுள்ள பொற்றாமரை மலரில் சித்தார்த்தி ஆண்டு, ஐப்பசித் திங்கள், வளர்பிறையில் அஷ்டமி திதியில் செவ்வாய்க்கிழமை திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். பூதத்தாழ்வார், சென்னைக்கு அருகில் திருக்கடல்மல்லை என்ற மகாபலிபுரத்தில், மல்லிகை புதரின் நடுவில் சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள், நவமி திதியில் புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தார். மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார், திருமயிலையில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் கிணற்றில், செவ்வல்லி மலரில் சித்தார்த்தி ஆண்டு ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் தசமி திதியில் சதய நட்சத்திரத்தில் வியாழக்கிழமையன்று அவதரித்தார்.

இவர்கள்தான் அருளிச் செயலை மூன்று அந்தாதிகள் பாடி தொடங்கி வைத்தவர்கள். ஆதியும் அந்தமும் இல்லாதவனுக்கு அந்தாதி பாடுவது தானே சிறப்பு. அதற்குப் பிறகுதான் மற்ற ஆழ்வார்கள் வருகின்றார்கள்.

திருக்கோவிலூர்

இவர்கள் அந்தாதி பாடிய இடம் நடு நாட்டு திருப்பதியான திருக்கோவிலூர். பஞ்ச கிருஷ்ண ஆரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்று. பெருமாளுக்கு `கோவலூர் ஆயன்’ என்ற திருநாமம். கோவலூர் இடையன் என்பார்கள். மூன்று ஆழ்வார்களுக்கும் இடையில் நெருக்கியடித்து நின்றதால் இடையன். இவர்களுடைய அவதாரத் திருநட்சத் திரங்களாக ஐப்பசி மாதம் திருவோணம், அவிட்டம், சதயம் என்ற மூன்றும் அடுத்தடுத்த நட்சத்திரங்கள் சொல்லப்படுகின்றன. இவர்கள் மூவரும் அவதரித்த இடத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறதே தவிர, மற்ற செய்திகள் குருபரம்பரை நூல்களில் காணப்படவில்லை.

இவர்கள் மூவரும் யோகிகள். ஒரு நாளுக்கு, இடத்தில் இல்லாமல் ஒவ்வொரு தலமாகச் சென்று இறைவனை சேவிப்பதை தங்கள் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்கள் என்ற குறிப்பு குருபரம்பரை நூல்களில் உண்டு.  

ஐப்பசி திருவோணம், அவிட்டம், சதயம்

இவர்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்பு முனையாக ஐப்பசி மாதத்தில், திருவோணம், அவிட்டம், சதயம் நாட்கள் சொல்லப்படுகின்றன. இந்த மூன்று தினங்களும் வரிசையாக திருநட்சத்திர வைபவமாக எல்லா திருமால் ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.

திருவோணம் சந்திரனின் நட்சத்திரம் அல்லவா. ஐப்பசி மாதம் இருள் அதிகரிக்கும் மாதம். அந்த மாதத்தில் வெளிச்சம் நிறைந்த சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில், முதல் ஆழ்வார்களின் சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பின் ஞான வெளிச்சம்தான் அவர்கள் பாடிய தமிழ் பாசுரங்கள். ஆழ்வார்கள் மூவரும் அன்றைய தினம் ஏற்றிய மொழி விளக்குதான், இன்றளவும் ஆன்மிக வெளிச்சம் தந்துகொண்டிருக்கிறது.

1500 ஆண்டுகளுக்கு முன்…

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன், ஒரு ஐப்பசி தினம். நடுநாட்டு திருப்பதி திருக்கோவிலூரில் இவர்கள் இறைவனை சேவிக்க வந்தபோது, மாலைநேரம். நல்ல மழை. இருள் கவிந்து எங்கும் நகர முடியாதபடி பெருமழை. அப்பொழுது, ஒரு ஆசிரமம் அவர்கள் கண்ணில் படுகின்றது. அது மிருகண்டு முனிவரின் ஆசிரமம். அந்த ஆசிரமத்துக்கு முதலில் மழையில் நனைந்தபடி ஒரு பெரியவர் ஓடிவருகிறார். ஆசிரமத்தின் கதவைத் தட்டுகிறார்.

உள்ளேயிருந்து வந்தவர் இவருடைய நிலையைக் கண்டு, ‘‘வாருங்கள், இப்படி வந்து இடைகழியில் (உள்ளுக்கும் வெளி வாசலுக்கும் இடைப்பட்ட பகுதி ரேழி என்று சொல்வார்கள்) சற்று அமருங்கள். சிறிய இடம்தான். ஆயினும் உங்களுக்கு போதும். ஒருவர் தாராளமாக படுக்கலாம் என்று நினைக்கிறேன். தயவுசெய்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். காலையில் பெருமாளைச் சேவித்துவிட்டு போகலாம்’’ என்று சொன்னார்.

``ஆஹா.. அப்படியே ஆகட்டும்’’ என்று சொல்லிய பெரியவர், அந்த சிறிய இடைவெளியில் சற்று படுக்கலாம் என்று தலையை வைக்கும் நேரம், ஐயா.. என்று மறுபடி ஒரு குரல் கேட்கிறது. பெரியவருக்கு புரிகிறது. ‘‘யாரோ வந்திருக்கிறார்கள்” உடனே மகிழ்ச்சியோடு வரவேற்றார். ‘‘வாருங்கள் அடியேனும் உங்களைப்போல் வந்தவன்தான். உள்ளே வாருங்கள். இங்கு அமர்வோம். ஒருவர் படுக்கலாம் இந்த இடத்தில். ஆனால் என்ன? இருவர் அமர்வதற்குப் போதுமே. வந்து அமருங்கள்” என்று சொல்லி வாய் மூடுமுன் அடுத்து ஒரு குரல் அழைக்கிறது. இப்போது இருவருமே சேர்ந்து மூன்றாமவரை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். ‘‘வாருங்கள். வெளியே மழை கொட்டு கிறது. உள்ளே வாருங்கள். இப்படி நிற்போம். இருவர் அமரக்கூடிய இந்த இடத்தில் மூவர் நிற்கலாம்.

நெருக்கியவன் யார்?

வெளியே மழையின் வேகம் அதிகரிக்கிறது. உள்ளே மூவரும் நின்று கொண்டு இறைவனுடைய பெருமையைப் பேசுகின்றார்கள். அப்போதுதான், அந்த அதிசயம் அரங்கேறுகிறது. யாரோ ஒருவர் வந்து அவர்கள் இடையில் நிற்பது போலத் தெரிகிறது. மூவரும் சற்று விலகி நிற்க முயல்கின்றனர். ஆயினும் நெருக்கம் அதிகரிக்கிறது. நான்காவதாக யாரோ ஒருவர் வந்திருப்பதாக உணர்கின்றனர். ஒரு விளக்கு இருந்தால், யார் வந்து இங்கே நெருக்குவது என்று பார்க்கலாமே? என்ன செய்வது? என்று யோசிக்கிறார்கள். யோசனை செயலாகிறது.

விளக்கு ஏற்ற அகல் வேண்டுமே...? எண்ணெய் வேண்டுமே?.. திரி வேண்டுமே?... எங்கே போவது.? ஆழ்வார் கவலைப்படவில்லை.இந்த உலகத்தையே அகலாக்கி, கடல்களை நெய்யாக்கி, கதிரவனை விளக்காக்கி அந்த எம்பெருமானுக்கு தன்னுடைய துன்பங்கள் குறையும்படியாக பாமாலை சூட்டுகின்றார்.
அவர்  ஏற்றிய முதல்மொழி விளக்கு இதுதான்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யக்  கதிரோன் விளக்காக செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.


இந்த விளக்கை, “வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும், செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு’’ என்பார் அமுதனார். அதாவது, உபநிடதங்களின் சாரமான பொருளை தமிழில் தோய்த்து எழுதப்பட்ட பாசுரங்கள் என்று பொருள்.

அக இருள் அகல அடுத்த விளக்கு

இவரைப் பார்த்தவுடன் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார், அடுத்த விளக்கு ஏற்றுகின்றார். அவர் அன்பை அகலாக்குகிறார். ஆர்வத்தை நெய்யாக்கு கின்றார். சிந்தையை இடுதிரியாக்கி, நன்றாக உருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகின்றார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகி சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்


ஒருவர், புறஇருளை அகற்ற விளக்கு ஏற்றினார். அடுத்து ஆழ்வார் அக இருள் அகல விளக்கு ஏற்றினார். ``இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும் நிறைவிளக் கேற்றிய பூதத்திருவடி” என்கிறார் அமுதனார்.

தெய்வ தரிசனம் கண்டார்கள்

மூன்றாவது ஆழ்வார் தங்கள் மூவரையும் நெருக்கியது பகவானே என்று உணர்ந்து, இறைவனை கண்குளிரத் தரிசிக்கின்றார்.

திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் -
செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்; புரிசங்கம்
கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று


வந்தவர் யார் என்பது புரிந்தது. யாரைத் தேடி சென்றார்களோ அந்த எம்பெருமானே இவர்களைத் தேடி வந்துவிட்டான். பரம பாகவதர்களுடைய ஸ்பரிசம் கிடைக்க வேண்டும் என்று அந்த எம்பெருமானே விரும்பிய நிகழ்வைக் காட்டுகின்றது இந்த நிகழ்ச்சி. எந்த இடத்தில் பாகவதர்கள்கூடி இருக்கின்றார்களோ, அந்த இடத்தில் பகவான் வந்துவிடுகிறான்.

வைகுண்டேது பரே லோகே ச்ரியா
ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ
(லிங்க புராணம்)
என்கின்ற ஸ்லோகம் இதை எடுத்துரைக்கிறது.

இந்த நிகழ்ச்சி சமுதாயத்திற்கு சொல்லும் செய்தி என்ன?

இந்த நிகழ்ச்சி தத்துவார்த்தமாக பல செய்திகளைத் தெரிவிக்கிறது. வழிப்போக்கர்கள் போல வந்து தங்கிய இடத்தில், “யான், எனது’’ என்று நாம் சொந்தம் கொண்டாடுகிறோம். பிறருக்கு எதுவும் தராமல் இருக்கிறோம். ஆனால், திருக்கோவிலூரில் வழிப்போக்கர்கள் போல, முதலில் வந்த ஒருவர், ஓரிடத்தில் வந்து மழைக்கு  தங்கும்போது அந்த இடம் வசதியாக இருக்கிறது. அடுத்தவர் வந்து அந்த இடத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் பொழுது வசதி குறைகிறது. வசதி குறையும்போது மகிழ்ச்சியளிக்கிறது. சுயநலம் அடிபடும் இடத்தில் விவேகம் வேலை செய்யும். அன்பு உணர்ச்சி இல்லாத இடத்தில ஆன்மீகம் ஏது? அன்பில்லாத வழிபாடு எரியாத திரி. அணைந்த விளக்கு. முளைக்காத செடி.

அன்பில்லாத இடத்தில் ஆண்டவன் வந்து அமர வாய்ப்பே இல்லை. நாம் கொடுப்பதற்கு தேவை முதலில் மனம். அந்த மனம், தான் இருக்கும் இடத்தை பகிர்ந்து கொள்ளச் செய்கிறது. இதை அப்படியே வாழ்வியலில் பொருத்திப் பாருங்கள். தேவைக்கு அதிகமாக எத்தனையோ பேர் செல்வத்தை வைத்து இருக்கிறார்கள். அந்த செல்வம் இங்கேயே இருக்கிறது. இங்கேயே இருக்கப் போகிறது. ஆனால், அதை பகிர்ந்து கொள்ளும் போது, ஆனந்தமும் மகிழ்ச்சியும் பிறக்கிறது.

இந்த அற்புத உண்மை, முதலாழ்வார்கள் மற்றவர்களுக்கு காட்டித் தருகிறார்கள். அதனால்தான், அவர்கள் தெய்வத்தை தேடிப்போக, தெய்வம் அவர்களைத் தேடி வந்த அதிசயம் திருக்கோவிலூரில் நடந்தது. தெய்வம் வருவதற்கான தயார் நிலையில் இருக்கும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் தெய்வம் பிரசன்னம் ஆகிறார். திருக்கண்டேன் என்ற வார்த்தையில் முதலில் இருப்பது திரு. அது செல்வத்தையும் குறிப்பது. செல்வத்தை தரும் மகாலட்சுமியையும் குறிப்பது. வைணவர்கள் நீங்காத செல்வத்திற்கு சொந்தக்காரர்கள். இழக்கும் போதுதான் நாம் பெறுகிறோம் என்பதை உணர்வதே ஆன்மீகத்தின் பலன்.

எதற்காக வந்தான்?

சரி, பகவான் இவர்களைத் தேடி வந்தாரே, அதற்கு வேறொரு காரணம் இருக்க வேண்டும். அது என்ன காரணம்? ஆழ்வார்கள் பாடிய தமிழைக் கேட்கலாம் என்பதற்காக பகவான் வந்தார். அப்படி அந்த பகவானை வரவழைத்தது ஆழ்வார்களின் அருந்தமிழ். அருளிச்செயலுக்கு முதல் போட்ட முதலாழ்வார்கள் அவதாரத் திருநாள் வைபவம், அவர்கள் ஐப்பசியில் சந்தித்த திருக்கோவிலூரில் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. மற்றும் வைணவத் தலங்களிலும் கொண்டாடப்படுகிறது.

முனைவர் ஸ்ரீராம்

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி