முருகன் வழிபாட்டின் நோக்கும் போக்கும்

முருக வழிபாட்டை மனித குலத் தோற்றத்தில் இருந்து தேடிக் கண்டறியலாம். முருக வழிபாட்டின் தோற்றம், காலந்தோறும் முருக வழிபாடு அடைந்த மாற்றம், கௌமாரம் என்ற தனி மதம், சைவம், வைணவம், பௌத்தம் என்று பல்வேறு மதங்கள் எப்படி முருகனை தம்முடையவனாக்கிக் கொண்டன. வட நாட்டிலும் தென்னாட்டிலும் காணப்படும் முருக வழிபாடு, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் காணப்படும் முருக வழிபாடு என முருகனின் வழிபாடு குறித்து நீண்ட சமூகப் பண்பாட்டு ஆய்வு வரலாறு உள்ளது.

ஆதி பெண் தெய்வ வழிபாட்டுக்கு அடுத்த நிலையில் மனித சமுதாயம் கண்டறிந்த வழிபாடு குமரன் அல்லது முருகன் வழிபாடு. இவன் அழகன்; குமரன்; வேல் தாங்கிய வீரன். அவன் தாயே தலைவி ஆவாள். அவளே அன்னை மகா சக்தி. அவள் காட்டிய வழியில் அவள் அளித்த ஆயுதமாகிய வேலைக் கொண்டு இவன் பல வீரச்செயல்களை நடத்தி வந்தான். அனைவரையும் காக்கும் அன்னை அவளது  வீரப்புதல்வன் என்ற இருவருமே ஆதி தெய்வங்கள். இவன் தாயின் குழந்தை என்பதால் இவன் சிறுவன் என்ற பொருளில் சேயோன் எனப்பட்டான்.

சங்க காலத்து முருகன்முருகன் என்ற பொதுச் சொல்லை மக்கள் அதிகம் பயன்படுத்தினாலும் அவன் ஒவ்வொரு இடத்திலும் காலத்திலும் மதத்திலும் நாட்டிலும் வெவ்வேறு பெயரால் குறிப்பிட்டுள்ளனர். தொல்காப்பியம் முருகனை சேயோன் என்கிறது. அவன் குறிஞ்சி நிலத்தின் தெய்வம் ஆவான். சங்க இலக்கியத்தில் குறிஞ்சி நிலமே கூடலுக்குரிய இடமாகும்.

தலைவன் திருமணத்துக்கு முன்பு தலைவியுடன் கூடி மகிழ்ந்து காலங்கழித்த பின்னர் அவளைத் தேடி அவன் வராதபோது அவனைக் காண வேண்டும் என்ற ஏக்கத்தால் அவள் உண்ணாமல் உறங்காமல் தவித்து உடல் நலிந்து மகளின் இந்நிலையைக் கண்ட தாய் அவளுடல் நலிவுக்கான காரணத்தை அறிய அவ்வூர் சாமியாடியும் மருத்துவனுமான [SHAMAN] வேலனை அழைத்துக் குறி கேட்கிறாள்.

இங்கு வேலன் என்பவன் குறிஞ்சி நிலத்துத் தெய்வமான சேயோனின் பிரதிநிதி ஆவான், தெய்வமேறி ஆடல் என்பது மந்திரச் சமயச் சடங்குகளில் [magico religious ritual.] ஒன்றாகும். இன்றைக்கும் தொடரும் இந்நடைமுறை மனிதன் தன் வாழ்வில் தெய்வம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்த காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. ஆக, குறிஞ்சி நிலத் தெய்வமான சேயோனின் சாமியாடி வேலன் எனப்பட்டான்.

சங்க காலத்தில் வேலனை முருகன் என்றும் அழைத்ததாக இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. குறிஞ்சித் திணையின் கருப்பொருள் கூடலும் கூடல் நிமித்தமும் என்பதாகும். அகத்திணையியலை களவியல் [திருமணத்துக்கு முந்தைய காதல் நிகழ்வுகள்]. கற்பியல் [திருமணத்துக்குப் பிந்தைய இல்லற நிகழ்வுகள்] எனப் பிரித்த தொல்காப்பியர் களவு என்பதில் குறிஞ்சித்திணை ஒழுக்கத்தைச் சேர்த்தார். வேலன், சேயோன், முருகன் மற்றும்  வள்ளித் திருமணம் ஆகியவை சங்க காலம் தொட்டு இருந்து வந்த பழந்தமிழ்த் தெய்வங்களும் கதை நிகழ்வுகளும் ஆகும்.

சங்க காலத்தில் கந்து வழிபாடுதொல்காப்பியர் வழிபாடுபற்றி குறிப்பிடும் நூற்பாவில் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றினைக் குறிப்பிடுகிறார். சங்க காலத்தில் நடுகல் நட்டு வழிபடுவதும் கந்து எனப்படும். கம்பம் வைத்து வழிபடுவதும் வீரவழிபாட்டின் சின்னங்கள் ஆகும். கந்தழி என்பது புலிவேட்டையில் மறைந்த வீரன், நாட்டை காப்பாற்றுவதில் பகைவனின் வேலுக்கு பலியாகி இறந்த வீரன் என ஆண்மகனின் வீரத்தைப் போற்றி கல்லோ கம்பமா நட்டு வணங்கி வந்த முன்னோர் வழிபாட்டு முறை ஆகும். கம்பும் கழியும் இறந்த சிறந்த ஆண் மகனுக்கு அடையாளமாக இருந்து ஆண்மைக்கும் அடையாளமாயிற்று.

பவுத்தம் தமிழ்நாட்டில் பரவிய போது பல்லவர்களின் ஆதரவு பெற்று விளங்கியது பல்லவ மன்னர்கள் முதலில் குகைக் கோயில்களை உருவாக்கினர். சம நிலங்களில் கந்து [கம்பம்] இந்திரன் கோயிலுக்கு அடையாளச் சின்னமாயிற்று. பூம்புகாரில் இருந்த இந்திரனின் கோயிலை ‘கந்துடைப் பொதியில்’ என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில், மருத்துவா மலை [வள்ளிமலை, இந்திரன் பொத்தை], சபரி மலை, சதுரகிரி, பழனி, பொதிகை [பொதியில்] போன்ற மலைப்பகுதிகளில் பவுத்தர்கள் மறைந்து வாழ்ந்தனர்.

காலத்தால் பிந்திய திருமுருகாற்றுப் படையும் முருகனின் கோயில்களை, மன்றம், பொதியில், கந்துடை நிலை என்ற பெயர்களில் குறிப்பிட்டுள்ளது. கந்தனை தேவர்களின் காவலனாகக் கருதினர். கந்தனுக்கு தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தைக் கொடுத்து அசுரர்களைக் கொல்லப் புறப்பட்ட  படையின் சேனாதிபதி ஆக்கினான்.

கந்தன் தேவர்களைக் காத்து அசுரர்களை அழிக்கும் பணியில் உதவிய மாவீரன் என்பதால் இந்திரன் தன் மகளை இவனுக்குத் திருமணப் பரிசாக கொடுத்துத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டான். வடநாட்டிலிருந்து பௌத்த சமயம் தென்பகுதிக்குப் பரவி அங்குள்ள காஞ்சிபுரத்திலிருந்து போதி தர்மர் வழியாக சீனா, ஜப்பான் எனப் பரவியபோது மண்ணின் கடவுளரும் சேர்ந்தே பயணப்பட்டனர். அவ்வாறு பயணித்த சரஸ்வதி, பிரம்மன்,

கணபதி ஆகியோருள் ஸ்கந்தனும் இடம்பெற்றான்.

தேவசேனாதிபதி ஸ்கந்தன்ஸ்கந்தனுக்கு  சீனாவில் வியே து ஓ என்று பெயர்; [ஜப்பானில் இதா தென்]. இவன் அங்கும் தேவேந்திரனின் படைத் தளபதியே ஆவான். தேவேந்திரன் அளித்த வஜ்ராயுதத்தை படுக்கைவசமாக தன் திருக்கரங்களில் ஏந்தி இருப்பான். புத்தர் கோயில்களில் புத்தருக்கு நேரே ஸ்கந்தனுக்கு சந்நதி உண்டு. சீனாவில் ஸ்கந்தன் புத்த மடங்களின் காவல் தெய்வம். புத்த தர்மத்தை தனக்குப் பிறகு மாரனிடமிருந்து [ஆசை] பாதுகாக்கும்படி புத்தர் இவனுக்கு ஆணையிட்டார். பவுத்தக் கடவுளான காவல் தெய்வம் என்ற கருத்து சீனா, ஜப்பானில் இருப்பதை போலவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலக் கோயில்களிலும் உண்டு. இங்கு சுப்பிரமணியன் என்ற பெயரில் நாகங்கள் சூழ காணப்படும் இவன் புதையலின் காவலன் ஆவான்.

சிவசக்தி இணைப்பும் முருகனும் சிவனை குறிக்கும் நேர் முக்கோணமும் சக்தியைக் குறிக்கும் தலை கீழ் முக்கோணமும் சேர்ந்ததே கந்தனின் அறுகோண வடிவம் ஆகும் என்ற கருத்தியலும் நிலவுகிறது. அறுவகைச் சமயங்களுள் சைவம், சாக்தம் இரண்டையும் இணைத்து கௌமாரச் சிந்தனைக்குள் கொண்டு செல்கின்றனர். ஏனெனில் கந்தம் என்ற சொல் தூண், மணம், அணு ஆகிய பொருட்களை அளிக்கிறது. கந்தம் என்பது வழமை குறியீடாக விளங்குகிறது.

அறுகோணம் என்பது சிவசக்தி  சேர்க்கையைக் குறிப்பதால் கந்தன் என்பவன்  மக்கட்செல்வத்தை அளிக்கும் வளமையின் அடையாளம் ஆகிறான். தமிழில் கச்சியப்ப சிவாச்சார்யாரால் கந்த புராணம் என்று கி.பி. 1350ல் இயற்றப்பட்டது. இந்த மூலக் கதையை கச்சியப்ப சிவாச்சார்யார் வள்ளியின் மணாளனான முருகனுடன் இணைத்து ஒரே கதையாக்கி அதற்குப் புராண வடிவம் கொடுத்தார். கந்தனின் பிறப்பு, கார்த்திகைப் பெண்கள் வளர்த்தது, சக்தி வேல் வழங்கியது, வள்ளி தெய்வானை  திருமாலின் கண்ணீர் துளிகளில் இருந்து பிறந்தது, நவ காளி, நவ வீரர்கள் என பலரின் பங்களிப்பும் இக்கதையில் இடம் பெற்றது.

சைவம், வைணவம் பவுத்தம் என்று பல சமயங்கள் முருகனை, கந்தன் என்றும் கார்த்திகேயன் என்றும் கொண்டாடி வந்த நிலையில் சித்தரியம் அவனை வேறு விதமாகப் போற்றியது. பவுத்தர்களும் சமணர்களும் மாமன்னர்களின் செல்வாக்கு இழந்து வைதிக சமயவாதிகளிடம் வாதில் தோற்றனர். அவர்களில் சமணர்கள் சைவர்களாக மாறினர். அவர்கள் முருகனையும் சிவனையும் [நடராசர்] மறைசமயக் கோட்பாடுகளின் அடையாளமாக்கிக் கொண்டனர். மனிதனின் புவியுலக வாழ்க்கை சிறப்பாக இருக்க உடல்நலம் பற்றி கவனம் செலுத்தினர். பரிபாஷையைப் பின்பற்றினர். பிராணாயாமம், இரசவாதம், ஜோதிடம், வானசாஸ்திரம், தற்காப்புக் கலை என்று அறிவியல்களில் நாட்டம் செலுத்தினர்.

வள்ளலார், அறுவகை சக்கரம் மற்றும் குண்டலினி என்ற கருத்தாக்கத்திற்குள் முருகனைக் கொண்டு போய் அவனைச் சுப்பிரமணி என்று குறிப்பிட்டார். சிறந்த மணி, அப்பழுக்கற்ற மணி அல்லது வெண்மை மணி என்ற பொருளில் சுப்பிரமணி என்ற சொல்லைப் பயன்படுத்தினார். விசுக்தி எனப்படும் இதயப் பகுதியில் அதன் இடது புறத்தில் ஆறு தலை உடைய  ஒரு நாடி உண்டு, அதைச் சுப்பிரமணி என்று குறிப்பிட்டார். புருவ மத்தியில் ஆறு பட்டையாகத் தோன்றிய ஜோதிமணியை ஆறுமுகம் அல்லது சண்முகம் என்றார். ஆறு ஆதாரச் சக்கரங்களில் தோன்றும் ஆறு ஒளியையும் சுப்பிரமணி சுத்தமான ஒளி என்றார்.

அந்தணர்களின் சுப்பிரமணிசித்தர்கள் [பவுத்தர்கள்] முருகனை சித்த சுத்த கோட்பாடாக வணங்கிப் போற்றிய காலத்தில் மீண்டும் வைதிகர்கள் முருகனை தமக்கென்று சொந்தம் கொண்டாடினர். ‘ சு பிராமணர் என்றால் நல்ல பிராமணன், தேர்ந்த பிராமணன்; பிரமம் என்றால் சத்யமான பரமாத்மா சொரூபம் என்று மாத்ரமே அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். பிரம்ம என்ற பதத்துக்கு இன்னொரு முக்கியமான அர்த்தம், வேதம் என்பது. வேதத்தை அனுசரிப்பது. அனுஷ்டிப்பது.

அதாவது வைதிகம் என்பதுதான் பிராமண்யம். அதை முக்கியமாகக் கொண்டவர்கள் பிராமணர்கள்; வேதங்களின் பரம தாத்பர்யமான பிரம்மமாகிற பரமார்த்த சொரூபமாகவே இருப்பதால் சுப்பிரமணியராக இருக்கப்பட்ட மூர்த்தி’ என்று சந்திரசேகரேந்திர சுவாமிகள் சுப்பிரமணியரை வேதமாகவும் பிரம்மமாகவும் கருதி சிறந்த பிராமணர் என்று கொண்டாடுகிறார்.  

சங்க இலக்கியத்தில் காணப்பட்ட சேயோன், அவனது சாமியாடி வேலன், வட நாட்டிலும் பவுத்தத்திலும் உள்ள இந்திர சேனாதிபதி ஸ்கந்தன், புராணங்களில் சிவனின் குடும்பத்தைச் சேர்ந்த கந்தன், சித்தர்களின் முருகன் [சுப்பிரமணி]. இன்று வைதிகர்கள் சுப்பிரமணியராக கோட்பாட்டளவில் வளர்ந்து வந்துள்ளான்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Related Stories: