×

பயணியின் பிரார்த்தனை

பயணம் இன்று மிகமிக எளிதாகிவிட்டது என்கிறார்கள். எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. முன்பு மாட்டு வண்டியில் போய்க் கொண்டிருந்த மனிதன் இன்று அதிவிரைவுத் தொடர் வண்டியிலும், வானூர்தியிலும் பறக்கிறான். வேகத்தில் தான் வேறுபாடே தவிர அலுப்பிலும் சலிப்பிலும் களைப்பிலும் எல்லாக் காலத்துப் பயணங்களும் ஒன்று போலத்தான் இருக்கின்றன.

கோவையில் இருந்து நண்பர் ஒருவர் சென்னை வந்தார். இத்தனைக்கும் பதிவு செய்யப்பட்ட இருக்கைதான். காலையில் ஆறுமணி சுமாருக்குத் தொடர்வண்டியில் உட்கார்ந்தவர் நண்பகல் இரண்டரை மணி வாக்கில் சென்னை சென்ட்ரல் வந்து இறங்கினார். முடியெல்லாம் கலைந்து, முகமெல்லாம் கறுத்து, சட்டை அழுக்காகி, உஸ்புஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டே நிலையத்திற்கு வெளியே வந்து எப்படியோ ஒரு ஆட்டோ பிடித்து வீடு போய்ச் சேர்ந்தார்.

அரைநாள் பயணக் களைப்பைப் போக்க மறுநாள் முழுக்க ஓய்வு எடுத்துக்கொண்டார். உட்கார்ந்தபடியே வந்ததால் ஏற்பட்ட முதுகுவலி ஓய்வெடுத்த பிறகுதான் குறைந்தது. இன்றைய நவீன காலப் பயணங்கள் இப்படித்தான் இருக்கின்றன. சரி, அந்தக் காலத்து மாட்டு வண்டிப் பயணங்களின்போது வழிப்பறிக் கொள்ளையர்களின் பயம் இருந்தது என்றால் இன்றைக்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்? பயணங்களின்போது பயணிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? உயிருக்கும் உடைமைக்கும் சேதம் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தால் கடவுள் புண்ணியம்தான்..!

உல்லாசப் பயணங்களை விடுங்கள். அவற்றில் கொஞ்சம் அலுப்பு சலிப்பு ஏற்பட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால், பஞ்சம் பிழைப்பதற்காகவோ, பணம் சம்பாதிப்பதற்காகவோ, வேலை தேடியோ, படிப்பிற்காகவோ பயணம் மேற்கொள்ளும்போது கிட்டதட்ட மனிதன் தன்னந்தனியனாய், நிர்க்கதியாய்த்தான் இருக்கிறான். உதவி செய்ய யாரும் இருப்பதில்லை.

பயணத்தின்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். பணம் பறி போய்விடலாம். கடவுச்சீட்டு களவு போய்விடலாம். முக்கியமான முகவரி தொலைந்துபோகலாம். கட்டாயம் உதவுவார் என்று நம்பிக்கையோடு நாடிச் சென்றவர் கைவிரித்துவிடலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம். அப்பொழுதெல்லாம் அந்தப் பயணிக்கு யார் துணை?

ஆம், படைத்த இறைவன் மட்டுமே துணை! திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதுபோல் குறிப்பிட்ட திசை நோக்கிப் பயணிப்பவர்களுக்கும் படைத்தவனே துணை. பயணிகளை இஸ்லாமியத் திருநெறி இப்னுஸ் ஸபீல் பாதையின் மைந்தர்கள் என்று அழகாக, இலக்கிய நயத்துடன் குறிப்பிடுகிறது. அவர்களின் உரிமைகளையும் வரையறுத்துள்ளது.

ஜகாத் தொகை விநியோகிக்கப்பட வேண்டிய எட்டுப் பிரிவினரில் பயணிகளும் அடக்கம். ஊர் விட்டு ஊர் வந்து அல்லல்படும் பயணிகளின் துயர் துடைப்புப் பணிகளுக்காக அந்தத் தொகை செலவிடப்பட வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.

நபிகளார் அவர்கள், ‘‘பயணிகளின் பிரார்த்தனை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ளப்படும்’’ என்று கூறி பயணிகளுக்கு ஆன்மிக ரீதியான ஆறுதலையும் அளித்துள்ளார்கள். இனி நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது முடிந்த அளவு இறைவனைப் பிரார்த்திப்போம். இறைவனின் பாதுகாப்பைப் பெறுவோம்.

- சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

‘‘ஓர் இறை நம்பிக்கையாளர் விவசாயம்  செய்கிறார்; மரங்களை நடுகிறார்; அதிலிருந்து பறவைகள், மனிதர்கள், பயணிகள்  ஏதேனும் சாப்பிட்டால் அந்த நம்பிக்கையாளனின் கணக்கில் அது ஓர் அறச்செயலாகக்  கணக்கிடப்படுகிறது’’ (நபிமொழி).

Tags :
× RELATED கண்குறை நீக்கும் கண்ணிறைந்த பெருமாள்