×

அன்னபூரணி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

உலகில் உயிர்கள் இன்ப துன்பங்களை அனுபவிப்பது உடல் வழியாக மட்டுமே. உயிரின் கூடாக விளங்கும் உடல் வளரவும், வாழவும் உணவு தேவைப்படுகிறது. உணவின்றேல் உயிர் இல்லை. உணவைத் தேவைக்குக் குறைவாக உண்டாலும் துன்பம். அதிகமாக உண்டாலும் துன்பம். எனவே உடலே உண்பதற்குக் கட்டுப்பட்டு இருக்கிறது. அதுவே அதற்கு அடிப்படைத் தேவையாக அமைகின்றது. பசிவந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி.

உணவு, பலவகைச் சுவைகளையும் வகைகளையும் கொண்டது. சுவையை ஆறாகப் பிரித்து அறுசுவை என்பர். அறுசுவை விருந்து உயர்ந்ததாகும். ஆனால், உயிர்வாழத் தேவையான அளவு உண்டாலே போதும் என்பர் ஞானியர். 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றி உணின்


- என்கிறார் திருவள்ளுவர்.

இவற்றின் மூலம் உணவின் அவசியத்தை உணருகிறோம். உணவின் பெரும் பங்கு அரிசிச் சோறேயாகும். எஞ்சிய பகுதிகளே தானியங்கள், காய்கறிகள், பழங்கள். இவை துணை உணவுகளாம். இவற்றை எவ்வளவு உண்டாலும் உண்ட திருப்தி உண்டாவதில்லை. சோற்றைச் சிறிதளவே உண்டபோதிலும், உணவு உண்ட திருப்தியும் நிறைவும் உண்டாகிறது. எனவே, அன்னத்தை நிறைவிப்பது என்ற பொருளில்அன்னபூரணம் என்று அழைக்கிறோம். அத்தகைய மனநிறைவையும் புதிய தெம்பையும் அளிப்பதால், அன்னை பராசக்தி அன்னபூரணி என்று அழைக்கப்படுகிறாள். காசியில், அன்னபூரணி என்ற பெயரில் அவள் மகாமங்கள கௌரியாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.  

 அவளிடமே இறைவன் உணவை வேண்டி நிற்பதைக் காசி கோயிலில் காணலாம். அவருக்கு அன்னவிநோதன் என்பது பெயரானது.மக்கள், காசி மாநகரில் வீற்றிருக்கும் அன்னபூரணியைச் சிறப்புடன் கொண்டாடுகின்றனர். அத்தலத்தில் விஸ்வநாதப் பெருமானுக்குஅடுத்தபடியாக முதன்மை பெற்றிருப்பவள் அவளே. அவளை அன்னபூரணி அஷ்டகம், அன்னபூரணி சதகம், அன்னபூரணி தோத்திரங்கள் சிறப்புடன் போற்றுகின்றன. இவற்றைப் பாராயணம் செய்பவர்களுக்கு வாழ்வில் எப்போதும் உணவுதட்டுப்பாடு கிடையாது. காசியில், தங்கத்தாலான அன்னபூரணியின் திருவுருவம் உள்ளது. தீபாவளியை ஒட்டி மூன்று நாட்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய வைக்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சியும் அன்னபூரணியே ஆவாள். அவள், தம் கணவன் ஏகாம்பரநாதன் அளந்து இட்ட இரண்டு நாழி நெல்லைக்கொண்டு, முப்பத்திரண்டு அறங்களைக் குறைவின்றி நடத்தினாள். ‘‘ஐயன் அளந்தபடி இருநாழிகொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும் அன்னைபோற்றி’’ என்றார் அபிராமிபட்டர். சுந்தரர், ‘‘உலகுய்ய வைத்த காமகோட்டம் வீற்றிருப்பவள்’’ என்று போற்றுகின்றார்.

காஞ்சியில், காமாட்சியம்மன் கோயிலில் உள்வாயிலுக்கு அருகில் அன்னபூரணிக்குத் தனிச்சந்நதி உள்ளது. இரண்டு யானைகள் சூழ அன்னபூரணி, பத்மாசனத்தில் அமர்ந்துள்ளாள். கையில் கரண்டியும் அன்னபாத்திரமும் உள்ளன.மாணிக்கவாசகசுவாமிகள், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட திருத்தலம் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலாகும். இங்கு இறைவன் ஓங்காரநாதராகக் கருவறையில், அருவ வடிவில் வீற்றிருக்கின்றார். எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கின்ற ஆன்மநாதனாக அவர் அருவமாகவும் உள்ளார்.

கருவறையில் அவர் ஆத்மநாதராக வீற்றிருக்க, அர்த்த மண்டபத்தில் பெரிய படைகல் வடிவில் அன்னபூரணி எழுந்தருளியிருக்கின்றாள். அந்தப் படைகல் மீது ஆவி பறக்க சோற்றை இட்டு சுவாமிக்கு நிவேதனம் செய்கின்றனர்.இங்கு ஆன்மாக்கள் மகிழ, அன்னபூரணியாக விளங்குகின்றாள். மேலும், அருகிலுள்ள அம்மன் சந்நதியில் பலகணியிலும் இரண்டாம் பிராகாரத்தின் அக்கினி மூலையிலும் அன்னபூரணியைக் காண்கிறோம்.

திருவீழிமிழலைத் தலபுராணத்தில், அங்குள்ள காத்யாயினி தேவியாக வேள்வியில் இருந்து அன்னபூரணியாகத் தோன்றினாள் என்று கூறப்பட்டுள்ளது.அன்னபூரணி நமக்கு உடலுக்கும் மனதிற்கும் ஏற்ற இனிய உணவை எப்போதும் அளித்து அருள்பாலிக்க வேண்டுமென்று, தீபாவளித் திருநாளிலும், ஐப்பசி பௌர்ணமி நாளிலும் அவள் அருளை வேண்டுவோம்.

தொகுப்பு : பரிமளா 

Tags : Annapurani ,
× RELATED திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்