×

சிவசக்தி ரூபம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

மெய் அடையக் கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி

இந்த வரியானது காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள உமையம்மையின் தல வரலாற்றைப் பேசுகிறது. அந்த தல வரலாற்றை அறிந்து கொள்வது என்பது இவ்வரியை எளிதில் புரிந்துகொள்ள உதவும்.  முன்னொரு காலத்தில் சும்ப, நிசும்பன் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவை குறித்து பஞ்சாக்னியின் நடுவே இருந்து கடும்தவம் செய்தனர். தவத்தின் பயனால் பிரம்மா தோன்றினார். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

நாங்கள் இருவரும் இறவாமல் இருக்க வேண்டும் என்ற வரத்தை கேட்டனர். இறவா வரம் தர இயலாது வேறு எதையாவது கேளுங்கள் என்றார் அதற்கு அந்த அசுரர்கள் உலக நாயகியான உமாதேவியின் உடலிலிருந்து ஒரு கன்னி தோன்றினால் அதுவே எங்களை அழிக்க வேண்டும்.  வேறு யாராலும் எங்களை அழிக்க முடியாத படி எங்களுக்கு வரம் வேண்டும் என்று கேட்டனர். ``அதை அப்படியே தந்தோம்’’ என்று பிரம்மா வரம் அளித்துவிட்டார். வரம் பெற்ற அசுரர்கள் மனிதர், முனிவர், தேவர் என அனைவருக்கும் துன்பத்தை தரத் தொடங்கினர்.

 அசுரர்களின் துன்பத்தை தாளமுடியாத முனிவர்களும், தேவர்களும் சிவபெருமானிடம் வேண்டிச் சென்றனர். இதை மனதில் கொண்டே சிவபெருமான் உமாதேவியை பார்த்து, ``ஹேகாளீ கருமையான நிறம் கொண்டவளே’’ என அழைத்தார். அதற்கு உமையம்மையானவள் சிவனிடம், ``என் கருமை நிறத்தில் விருப்பம் இல்லாமல் வெறுப்பு ஏற்பட்டதால் இனி இந்த காருருவை ஒழிக்கும்படி தங்களைக் குறித்து பெருந்தவம் செய்து, தங்கள் திருவருளாலேயே பொன்னிற மேனியை அடைந்து தங்களுக்கே மனைவியாகிறேன்’’ என்று கூறினாள். அவள் கண்களிலிருந்து முத்துக்கள் தெறித்தாற்போல் கண்ணீர் சிந்தியது. ``நான் இனி பொன்னிறமான வேறொரு தேகத்தை அடைய வேண்டுகின்றேன்’’ என்று கூறி சிவபெருமானை முறைப்படி வலம் வந்து வணங்கி விடைபெற்று தவம் செய்ய கிளம்பினாள்.

உமையம்மை கம்பை நதிக்கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டாள். உமையம்மைக்கு அருள எண்ணம் கொண்டு, சோதிக்கும் வகையில் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்தார் இறைவன். மண் உருவிலான லிங்கம், தண்ணீர்ப் பெருக்கால் கரைவதை கண்டு அஞ்சி அதன் மீதுள்ள காதலால் அது கரையாத வகையில், தான் பூஜித்த லிங்கத்தை இறுகத் தழுவினாள். அப்போது உமை அணிந்திருந்த வளை தழும்பும், முலைத்தழும்பும்  மணல் லிங்கத்தில் பதிந்தது. இந்த வரலாற்றுக்கு குறிப்பையே இப்பாடல் வரி விளக்குகிறது. இந்த வடிவத்தை ஆகமங்கள் ``சிவசக்தி இணைந்த வடிவம்’’ என்கின்றது. இந்த நிலையிலுள்ள உமையம்மையை வழிபட்டால், கணவன் மனைவி இடையிலான பகை, மனக் கசப்பு நீங்கி ஒற்றுமை ஏற்படும் என்கின்றார் பட்டர். இதையே ‘‘மெய் அடையக் கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி’’ என்கிறார்.

“கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே”“கோ” என்ற சொல் அரசனையும், கனக என்ற சொல் மணி மகுடத்தையும் குறிக்கும். `கோகனகம்’ என்பது அரச கிரீடத்தைக் குறிக்கும். இந்தப் பாடலானது காம  அரசனான மன்மதனையே குறிப்பிடுகிறது. மன்மதனானவன் எப்படிப்பட்ட தவ வலிமை மிக்கவராயினும் முனிவர்களாயினும், ரிஷிகளாயினும், தேவர்களாயினும் அவர்களை நொடிப்பொழுதில் தன்னுடைய கடைக்கண் பார்வையாலும், தன் பாணத்தாலும்,  வீழ்த்திவிடும் வல்லமை பெற்றிருந்தான். அச்சமயத்தில் சிவபெருமான் திருக்குறுக்கையில் கடும்தவம் புரிந்து யோகநிலையில் இருந்தார்.

சிவபெருமான் யோகத்தில் அமர்ந்து கடுந்தவம் செய்துகொண்டிருந்த வேளையில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் தத்தம் படைப்புத் தொழிலை மறந்து நின்றன. எங்கும் பசுமையற்ற வெறுமை தோன்றின. இச்சூழலை மாற்ற வேண்டியும், சிவனைக் குறித்து தவம் செய்யும் பார்வதியை அவர் மணக்க வேண்டியும் அவரின் தவத்தை கலைக்க தேவர் தலைவனின் கட்டளைப்படி முயன்றான் மன்மதன். அதற்காக தன் செயலை தொடங்கினான்.

அப்போது, அவனது பாணத்தால் அங்குள்ள மரங்களில் உள்ள மலர்கள் பூத்துக் குலுங்கின. அதில் இருந்து வீசிய மணம் அப்பகுதியை சூழ்ந்து கொண்டது. தென்றல் காற்று இதமாக வீசியது பட்ட மரங்களிலும் அரும்புகள் மலர்ந்தன. அச்சூழல் அழகாக மாறியது. ரம்மியமான மனத்துடன் இனிமையான காற்று வீசியது. காமன் கரும்புவில்லை எடுத்து சிவபெருமான் மீது எய்திட ஆயத்தமானான். தவத்திற்கு இடையூறு வருவதை யோகத்தில் உணர்ந்த சிவன், கண் விழித்து பார்த்தார். மன்மதன் கையிலுள்ள அம்பு எய்துவதற்கு முன்பே அவன் கையில்  இருந்து நழுவி கீழே விழுந்தது.

சிவனாரின் கோப அக்னி, மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. அதைக் கண்டு அழுது புலம்பிய ரதியின் துயர் தீர்க்க. சிவபெருமான், பார்வதியின் திருமணத்தன்று மீண்டும் நீ உன் கணவனை அடையும் வழி செய்வோம் என்று கூறினார். பிறகு பார்வதி தவம் செய்து சிவபெருமானை வேண்ட சிவபெருமான் அறத்தின் வழி சப்தரிஷிகளை கொண்டு இமவானின் மகளாக பிறந்து வளர்ந்து வந்த பார்வதியை பெண் கேட்டு முறைப்படி மணந்துகொண்டார். அச்சூழலில் முருகப்பெருமான் பிறப்பின் பொருட்டு வேண்டி அதற்கு காரணமான மன்மதனை அவனது சேவையை ஏற்றருள வேண்டினார்கள் தேவர்கள்.

அப்பொழுது, சிவபெருமான் மன்மதனின் மீது கொண்ட சினம் தணிந்து மன்மதனை மீண்டும் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி தோன்றுவான் என்று கூறியவாறே அவனை உயிர்ப்பித்து அருளினார். இறந்த பிறகு சிவபெருமான் அருளால், மீண்டும் உயிர் பெற்ற மன்மதனின் பதவியையையும் தொழிலையும் முன்போல் செய்ய மீண்டும் சிவசக்தி இருவரும் திருமணத்திற்கு பிறகு இணைந்து அருளிய சிவக்கோலமே மதனானுக்கிரக மூர்த்தி.

அந்த வடிவத்தில் உமையம்மையும், சிவபெருமானும் மன்மதனின் ஆயுதமான கரும்பையும் மலர் அம்பையும் அவனுக்கு கொடுத்தருளும் பொருட்டு, கையில் கரும்பு வில்லும் மலர்க்கணையை தாங்கி மன்மதனுக்கு அருள் புரிவதற்காக ஏற்ற கோலத்தையே பட்டர் இங்கு ``கோகனகச் செங்கைக் கரும்பு மலரும் எப்போதும் என் சிந்தையதே’’ என்று குறிப்பிடுகிறார். அந்தமாக (முடிவாக)  “தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து” பரமனின் சக்தியான திரிபுரசுந்தரி பாவத்தை அழிப்பவள் அறத்தை உணர்த்துபவள்.

“மத வெங்கட் கரி உரி போர்த்த செங்கேவன்” என்ற கிருத்திவாசரின் சக்தியாகிய பாலாம்பிகா செல்வத்தை அருளி அறவாழ்க்கையை வாழச் செய்பவள். “மெய் அடையக் கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி” இன்பத்தை விரும்பிய வாழ்வினை அருளி காம்ய பலனை அடைவிப்பவள். “கோகனகச் செங்கை கரும்பும் மலரும்” என்பதனால் தர்ம, அர்த்த, காம, மோட்ச என்ற நால்வகைப் பொருளையும் அருளக்கூடியவள் என்கின்றது தந்திர சாத்திரம். “எப்போதும் என் சிந்தையதே” என்கிற வரிகள் தியானம் செய்வதைச் சொல்கிறது. அதையே செய்வோம் அருள் பெறுவோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி