ஸ்பைடர்மேன்: இன்டு தி ஸ்பைடர் வெர்ஸ்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஸ்பைடர்மேன், இதுவரையில் 5 பாகங்களாக வெளியாகியுள்ளது. இப்போது அந்த ஸ்பைடர்மேனையே கலாய்த்து வந்துள்ள 3டி அனிமேஷன் படம் இது. எல்லா ஸ்பைடர்மேன் கதைகளிலும் வரும் வழக்கமான கதைதான். கருப்பு இன மாணவன் மைல்ஸ் மெரேல்ஸ், விஷன்ஸ் அகாடமியில் சேர்ந்து படிக்கிறான். தனது சேட்டைகளால், சக மாணவர்களால் அதிகமாக கிண்டல் செய்யப் படுவான். வீட்டிலும் கிண்டலுக்கு ஆளாகும் அவன், எல்லா நேரத்திலும் மனம் வெறுத்து திரிவான். அந்த நேரத்தில் ஒரு சிலந்தி கடித்துவிட, நிலமை தலைகீழாக மாறுகிறது. பள்ளி மற்றும் வீட்டில் அவன் ஹீரோ ஆகிறான். வானத்தில் பறக்கிறான். கட்டிடங்களில் ஏறி இறங்குகிறான்.

ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்கிறான். இந்த நேரத்தில் வில்லன் கிங்பின் நாசவேலையை தொடங்குகிறான். அவற்றை தடுத்து, உலகை காக்க வேண்டிய பொறுப்பு ஸ்பைடர்மேனுக்கு வருகிறது. பிறகு மைல்ஸ் மெரேல்சுக்கு துணையாக நிஜ ஸ்பைடர்மேன், ஸ்பைடர்வுமன் ஆகியோரும் இணைந்து வில்லனை எப்படி அழிக்கின்றனர் என்பது கதை. முந்தைய பாகங்களில் இருந்த ஸ்பைடர்மேனை, வில்லன் கொலை செய்வதில் இருந்து படம் தொடங்குகிறது. அதற்கு பிறகுதான் மைல்ஸ் மெரேல்சுக்காக அவர் மறுபடியும் வருகிறார்.

ஸ்பைடர்மேன் செய்யும் சாகசங்கள் படம் முழுக்க கிண்டல் செய்யப்படும் நேரத்தில், தியேட்டரில் ரசிகர்களிடையே அதிரடி சிரிப்பொலி ஏற்பட்டு அடங்குகிறது.  நேர்த்தியான 3டி தொழில்நுட்பம் காரணமாக, அது அனிமேஷன் படம் என்பதையே மறந்து மக்கள் ரசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். குழந்தைகள் குதூகலித்து கொண்டாடி ரசிக்கின்றனர். பாப்பெர்சடி,  பீட்டர் ராம்சே, ரோட்னி ரோத்மேன் ஆகியோர் படத்தை இயக்கியுள்ளனர். டேனியல் பெம்பர்ட்டனின் இசை, கதைக்கான ஓட்டத்துக்கு விறுவிறுப்பு ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர் களின் அரையாண்டு விடுமுறைக் கொண்டாட்ட விருந்தாக இந்த படம் அமைந்துள்ளது.

Related Stories:

>