×

திருமலையில் தீபாவளி ஆஸ்தானம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெங்கடாசலபதி சந்நதிக்கு முன்பு உள்ள தங்கவாசலுக்கு அருகே கண்டா மண்டபத்தில் ஆஸ்தான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருமலையில் தீபாவளியன்று பெருமாளுக்கு, தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். இது மிகச் சிறப்பானது. தீபாவளிக்கு முதல் நாள் அன்று இரவு, மலையப்ப சுவாமி ஊர்வலமாக எழுந்தருளி காட்சி தருவார்.

பின்பு அங்குள்ள பக்தர்களுக்கு தைலம் வினியோகிக்கப்படும். அதை மறுநாள் காலையில் தலைக்குத் தேய்த்து, தலைக் குளியல் செய்துகொண்டு, திருவேங்கடமுடையானின் அருளைப் பெறவேண்டும். தீபாவளியன்று சுப்ரபாதம் தொடங்கி, முறையே முதல் மணி நிவேதனம் நடைபெறும். பின்பு தங்க வாயில் முன் ஏற்பாடு செய்த சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருள்வர்.

இவற்றோடு ஜீயர் சுவாமி, பட்டு வஸ்திரங்களை வெள்ளித் தட்டில் கொண்டுவர, உடன் தேவஸ்தான அதிகாரிகளும் மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு கொடிமரத்தைச் சுற்றி வந்து ஆனந்த நிலைய விமானத்தை சுற்றி சமர்ப்பிப்பர். அன்று விசேஷமான தளிகை உண்டு. கிபி 1542-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டு உள்ள திருமலை திருப்பதி பெருமாள் கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளில் “திருப்பதி பெருமாளுக்கு தீபாவளியன்று அதிரசப் படி இரண்டு” என உள்ளது. இதன்மூலம், தீபாவளி பண்டிகையன்று, திருப்பதி பெருமாளுக்கு அதிரசம் படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

திருக்குடந்தையில் தீபாவளி

திருக்குடந்தையில் தீபாவளி மிகச் சிறப்பாக நடைபெறும். திருவரங்கத்தில் அரங்கனின் நடை அழகு. திருமாலிருஞ்சோலை அழகரின் படை அழகு. ஸ்ரீவில்லிபுத்தூராரின் தொடை அழகு. திருமலை திருப்பதி வேங்கடவனின் வடிவம் அழகு. திருநாராயணபுரத்தானுக்கு முடி அழகு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் உடைஅழகு. சாரங்கனுக்கோ கிடை அழகு. பாம்பணையில்கிடந்த கோலம் அழகு.

இந்த அழகு பெருமாளுக்கு அற்புத வைபவம் தீபாவளி வைபவம். குடந்தை சாரங்கபாணி ஆலயக் கல்வெட்டு, தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடந்ததைக் கூறுகிறது. இங்கு இன்னும் ஒரு சிறப்புண்டு. லஷ்மி நாராயணன் என்னும் பக்தர், சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தனது இறுதிக் காலம் வரையில் பெருமாளுக்கு சேவை செய்தார். இந்த ஆலயத்தின் 65 அடி உயரம் கொண்ட பதினொரு நிலை ராஜகோபுரத்தினைக் கட்டியவரும் இவரே. அமுதனைத் தவிர வேறு உறவு இல்லாத அவர் ஒரு தீபாவளி நன்னாளன்று பெருமாளின் திருவடியை அடைந்தார்.

பொதுவாக ஒருவருக்கு குழந்தைகள் இல்லாமல் போனால், அவர் இறந்த பின் அவருக்கு முறையான சடங்குகள் செய்ய இயலாமல் போய்விடும். அதனால் அந்த நபர் நரகம் செல்லும் நிலை ஏற்படும். பெருமாள் “நரக நாசன்” அல்லவா! தன் பக்தனை கைவிட்டு விடுவாரா? பெருமாள் வந்து தன்னுடைய பக்தருக்கு, தானே மகனாக இருந்து, சடங்குகளைச் செய்தாராம். இது நடந்த மறுநாள் கோயிலை திறந்தபோது, பெருமாள் விக்கிரகத்தில் ஈர வேட்டியும், மாற்றிய பூணூலுமாக இறைவன் காட்சியளித்துள்ளார். அருகில் தர்ப்பைகள் கிடந்துள்ளன.

இது நடந்தது ஒரு தீபாவளித் திருநாளில். இதனை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று உச்சி காலத்தில்,  திதி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க அனுமதியில்லை. இந்த பத்தரின் சிலையை இப்பொழுதும் நாம் பெருமாள் கோயிலின் பிராகாரத்தில் பார்க்க முடியும்.

தொகுப்பு: அருள்ஜோதி

Tags : Diwali temple ,Tirumala ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ