×

பெண்கள் வேடத்தில் ஆண்கள் வேண்டுதல்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மலைநாடான கேரள மாநிலத்தில் உள்ள திருக்கோயில்கள் ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்புகள் கொண்டதாக விளங்குகின்றது. அந்த வகையில், தனிச்சிறப்பு மிக்கத் தலமாக விளங்குவது கொல்லம் அடுத்துள்ள, சவரா கொட்டங்குளங்கரா தேவி ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ‘‘சமயவிளக்கு’’ திருவிழா புகழ்பெற்றதாகும்.

இப்படியொரு விழாவினை வேறெங்கும் காணமுடியாது. அப்படி என்னதான் சிறப்பு எனக் கேட்கத்தோன்றுகிறதுஅல்லவா! ஆண் பக்தர்கள் அனைவரும், பெண் வேடமிட்டு, இரவு தொடங்கிஅதிகாலைவரை, கையில் விளக்கேந்தி அம்மனை வழிபடுகின்றனர்.கொட்டங்குளங்கரா தேவி ஆலயத்தின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. பழங்காலத்தில் இந்த தலத்தினை சுற்றி, அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இதன் வடமேற்கில் ஒரு குளம் இருந்தது. இதற்கு பூதக்குளம் என்று பெயர். இந்த தலத்தின், கிழக்குப் பகுதியில் மற்றொரு பெரிய குளம் இருந்தது. இந்த இரு குளங்களில் நீர் ஓடையாக மாறி, இப்பகுதியை செழிக்கச் செய்தது.

மேலும், இந்த பகுதி பச்சைப்பசேல் என புல்வெளிகள் நிறைந்து இருந்ததால், மாடு மேய்ப்பவர்கள், தங்கள் மாடுகளை இங்கு வந்து மேய்த்தனர். ஒருசமயம், இங்குள்ள தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காயை, நார் உரிக்க அங்கிருந்த பூதக்குளம் தென்புறத்திலிருந்த கல்லில் அடித்தனர். ஆனால், தேங்காயின் நார் உரிவதற்கு பதிலாக, அந்தக் கல்லிலிருந்து ரத்தம் பீறிட்டது. இதைக்கண்டு அஞ்சிய அந்த மாடு மேய்ப்பவர்கள், ஊர் மக்களிடம் கூறினார்கள். ஊர்மக்கள் அச்சமுற்று அவ்வூரில் இருந்த வயதான ஜோதிடரிடம், இது குறித்து கேட்டனர். அவர் இந்த இடத்திற்கு வந்து சோதித்தார்.

‘‘இது சக்தி வாய்ந்த இடமாகும். இங்கே, ஆதி சக்தி அம்மன் வாழ்கின்றாள். தாமதிக்காமல் இவளுக்கு ஆலயம் எழுப்பி, வழிபட்டு வாருங்கள். உங்கள் குறைகள் அனைத்தும் நீங்கும்’’, என்றார். அதன்படி, அவ்வூர் மக்கள் தென்னை ஓலைகளைக்கொண்டு கூரை அமைத்து, சிறிய கோயிலை எழுப்பினர். பூஜைகள் செய்யும்போது மட்டும் பெண் வேடம் பூண்டு, பூஜைகள் செய்து வந்தனர். அன்னைக்கு, பால் மருந்து பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நைவேத்தியத்தைபடைத்தனர். இங்கு வந்து வழிபடுபவர்கள் அனைவருக்கும், தங்கள் குறைகள் நீங்கியதால், அன்னையின் புகழ் ஊரெங்கும் பரவத் தொடங்கியது.

ஏராளமான பக்தர்களும் அன்னையை நாடி வர தொடங்கினர். இன்று இந்த கோயில், பெருங்கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. அன்னை கொட்டங்குளங்கரா தேவி பல்வேறு பகுதி மக்களையும் தொடர்ந்து தன் அடியாராக்கி வருகின்றாள். இந்த தலத்து அன்னை, சுயம்புவாகத் தோன்றியவள். இவளை துர்க்கையின் அம்சம் என்றும், ஆதிசக்தி என்றும் பக்தர்கள் போற்றி வழிபடுகின்றனர்.

சமய விளக்கு

ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தின், பத்து மற்றும் பதினொன்றாம் நாட்களில் சமய விளக்கு எனும் பெருந்திருவிழா இந்த ஆலயத்தில் நடத்தப்படுகின்றது. இதில், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்ற ஆயிரக் கணக்கான ஆண்கள், தங்கள் வேண்டுதலுக்காக பெண் வேடமிட்டு, சாதா புடவை, பட்டுப்புடவை, தாவணி, இப்படி ஏதேனும் ஒரு ஆடையை அணிந்து கொள்வார்கள். அன்று மாலையில், ஆலயத்தில் விளக்கை பெற்று, அதில் தீபம் ஏற்றி, கையில் ஏந்தி நிற்பார்கள். இரவு முழுவதும் சந்நதி எதிரே உள்ள வீதியில் வரிசையாக நிற்பார்கள்.

மறுநாள் அதிகாலையில், அம்மன் ஜீவிதாவில் (பல்லக்கில் தூக்கி வருதல்) வீதி உலா வரும். அன்னை  அனைவருக்கும் காட்சி தந்து அருள் ஆசி வழங்குவார். அன்னை ஆராட்டு முடிந்து ஆலயம் திரும்புவார். இதன் பிறகு, இவர்களின் இந்த வேண்டுதல் முடித்து வைக்கப்படும். அவர்களுடைய கோரிக்கைகளையும் அம்மன் நிறைவேற்றுவார் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை, பக்தர்களிடையே ஆழமாக பதிந்துள்ளது. அதை ஆண்டுதோறும் கூடிவருகின்ற பக்தர்கள் கூட்டம் உறுதி செய்கின்றது.

‘‘குருத்தோலை பந்தல்’’ ஒவ்வொரு ஆண்டும் பழமையான ஆலயத்தின் வடிவத்தினை நினைவுறுத்தும் விதமாக, குருத்தோலைகளை கொண்டு கோயில் அமைக்கப்பட்டு,  குருத்தோலை பந்தல் விழா கொண்டாடப்படுகிறது.‘‘ஜீவிதா எழுநல்லது’’ (பல்லக்கு பவனி) எனப்படும் விழாவில் தட்டுக்கல் எனும் பாரம்பரிய உடை அணிந்து, தலையில் ஜீவிதம் சுமந்து இவ்விழாக்
கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனைத்தலம்

இந்த திருக்கோயில், மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது. கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும், ஆண் பக்தர்கள் சமய விளக்கு விழாவில் கலந்து கொள்கின்றனர். அதன் மூலம், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை மிகவும் இப்பகுதிமக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், கொல்லம் நகரில் இருந்து 13.கி.மீ. தொலைவில் உள்ள சவரா எனும் இடத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது.

திருவனந்தபுரம் நகரில் இருந்து, ரயில் மற்றும் பேருந்து மூலம் எளிதில்  இங்கு வரலாம். காலை 5 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலய தரிசனம் செய்யலாம்.

தொகுப்பு: பனையபுரம் அதியமான்

Tags :
× RELATED சுந்தர வேடம்